Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

டெங்கு நோய் விழிப்புணர்வு இடைவிடாமல் தொடரட்டும்!நாடெங்கும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் டெங்குநோய் ஒழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு வியாதி பரவுகின்ற வீதம் தற்போது ஓரளவு குறைந்திருப்பதற்குக் காரணம் நாட்டில் பரவலாக நிலவிய வரட்சி ஆகும்.
மழை பெய்யாததால் நுளம்புகளின் பெருக்கம் குறைந்துள்ளது.அண்மைக் காலமாக டெங்கு நோயால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன.ஆனால் சமீப தினங்களாக ஆங்காங்கே மழை பெய்வதால் டெங்கு ஆபத்து மீண்டும் அதிகரிக்கக் கூடும்.
டெங்கு நோய் ஆபத்து ஒருபோதுமே முற்றாக நீங்கி விடுவதில்லை. ஓரிரு நாட்கள் மழை பெய்யத் தொடங்கியதும் டெங்கு நோய் மீண்டும் நாட்டில் தீவிரமடையத் தொடங்கிவிடும். எனவே டெங்கு வியாதி ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்ற இவ்வேளையில், டெங்கு வேலைத் திட்டம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவது சிறப்பானதாகும்.
இந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற பிரதேசம் மேல்மாகாணம் ஆகும். மேல் மாகாணத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மாத்திரம் இதற்குக் காரணமல்ல. நீர்தேங்கி நிற்கக்கூடிய வடிகான்கள் மேல்மாகாணத்தில்தான் அதிகம். எனவே டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பான சூழலாக மேல்மாகாணம் காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி மக்கள் நெருக்கமாக வாழ்வதன் காரணமாக தொற்றுநோய்கள் இலகுவாக பரவி விடுகின்றன.
கடந்த வருடத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்திருந்தமை நினைவிருக்கலாம். இந்நோயினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு எதிர்வரும் காலத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
டெங்கு நுளம்புகள் பெருக்கமடைவது எமது சூழலுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்கின்ற சுற்றாடலை துப்புரவாக வைத்திருந்தால் நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பே இருக்காது.
டெங்கு நுளம்புகள் சுத்தமான தண்ணீரில் மாத்திரமே முட்டையிடக் கூடியவை. ஆறுகள், குளங்களில் அவை முட்டையிடுவதில்லை. நீரோட்டம் இல்லாமல் தேங்கி நிற்கின்ற தண்ணீரிலேயே டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன.
சிரட்டைகள், பழைய டயர்கள், யோக்கட் குவளைகள் போன்றவற்றுக்குள் காணப்படுகின்ற மழை நீரிலேயே நுளம்புகள் கூடுதலாக முட்டையிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கிணறுகளிலுள்ள சுத்தமான தண்ணீரிலும் அவை முட்டையிடுகின்றன.
எனவே எமது சுற்றாடலில் சிறுசிறு இடங்களில் கூட எங்காவது தண்ணிர் தேங்கி நிற்பதற்கு இடமளிக்கலாகாது. அத்துடன் கிணறுகளை நுளம்பு வலையினால் மூடி வைப்பதும் நுளம்புகளின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு பெருமளவு உதவுகின்றது.
டெங்கு நுளம்புகள் தற்போது மிகவும் வீரியமடைந்து விட்டன. மழைநீர் தேங்கியிருக்கும் சிறுசிறு பாத்திரங்களில் மாத்திரமே இந்நுளம்புகள் முட்டையிடும் என்றும் கூற முடியாதிருக்கின்றது. வாழை மரம், அன்னாசிச் செடி, கற்றாளைச் செடி போன்றவற்றின் தண்டு இடுக்குகளில் தேங்கியிருக்கின்ற மழைநீரிலும் கூட டெங்கு நுளம்புகள் முட்டையிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, உலர்ந்த இடமொன்றில் காணப்படுகின்ற இந்நுளம்பின் முட்டைகள் சில மாதங்கள் கடந்த பின்னர், மழை பெய்ததும் வாய்ப்பான சூழலைப் பயன்படுத்தி நுளம்பாக உருவடையக்கூடிய வீரியத்தைக் கொண்டவையாக உள்ளன. எனவே மழை பெய்தால் மாத்திரமே நுளம்புகள் பெருகும் என்று இனிமேலும் எண்ணிக் கொண்டிருக்க முடியாது. அவை எத்தகைய சூழலிலும் பெருகும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன.
அதுமாத்திரமன்றி, டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதிலும் மருத்துவர்கள் தற்போது பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முன்னரைப் போலன்றி டெங்கு நோய் தற்போது தீவிரம் பெற்றிருப்பதே இதற்கான காரணமாகும். எனவேதான் எவருக்காவது காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுமானால் தாமதமின்றி மருத்துவ சிகிச்சையை நாடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
டெங்கு நோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரை அரசாங்க வைத்தியசாலைகள் தற்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதையே காண முடிகின்றது. டெங்கு நோயாளர்களுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாதென்பதிலும், அந்நோயை எவ்வாறாவது குணப்படுத்திவிட வேண்டுமென்பதிலும் அரசாங்க வைத்தியசாலை மருத்துவர்கள் எடுத்துக் கொள்கின்ற அக்கறையை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆனாலும் டெங்கு நோயாளர்கள் மருத்துவ சிகிச்சையை நாடுவதில் காண்பிக்கின்ற தாமதமே உயிராபத்துக்குக் காரணமாகி விடுகின்றது. எந்தவொரு காய்ச்சலும் இக்காலத்தில் அலட்சியப்படுத்திவிடக் கூடியதல்ல. அது சாதாரண காய்ச்சலாக மாத்திரமன்றி. டெங்குக் காய்ச்சலாகவும் இருக்கலாமென்ற எச்சரிக்கை உணர்வுதான் இங்கு முக்கியம். இவ்வாறு காய்ச்சலை அலட்சியப்படுத்தும் போதுதான் சிலவேளைகளில் உயிராபத்து நேர்ந்து விடுகின்றது.
நோய் தீவிரமடைந்த நிலையில் வைத்தியசாலையை நாடும் போது மருத்துவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணமாகவே டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோரில் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகின்றது.
டெங்கு நோயினால் எமது மக்கள் பாதுகாப்புப் பெற வேண்டுமானால், பிரதான விடயங்களில் அவதானத்தைப் பேணுவது அவசியமாகின்றது. நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முதலில் அவசியம். அதேசமயம் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதும் முக்கியம்.
இவ்விரண்டுக்கும் அப்பால், காய்ச்சல் ஏற்பட்டதும் தாமதமின்றி உரிய மருத்துவரை நாடுவது மிகவும் அவசியம். இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலமே டெங்கு நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெற முடியும்.. 

0 Comments:

Post a Comment