Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும் சமூக வலைத்தளங்கள்!


நவீன அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப மனித வாழ்வு இயந்திரமயமாகி உள்ளது. புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்ற வசதி வாய்ப்புகள்தான் இந்நிலைமைக்கு அடிப்படைக் காரணமாக அமைந்திருக்கின்றன. அவை புதியபுதிய கண்டுபிடிப்புகளாகவும் விளங்குகின்றன.
இன்றைய காலகட்டத்தில் எல்லாத் துறைகளிலும் கண்டுபிடிப்புக்கள் இடம்பெறுவதோடு அவை புதியபுதிய உற்பத்திகளாகப் புழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் இருக்கவே செய்கின்றன. அதனால் நன்மை பெறும் வகையிலேயே அனைத்தையும் பயன்படுத்த வேண்டி பொறுப்பு மனிதனுக்கு உள்ளது.
இப்பொறுப்பிலிருந்து விலகிச் செல்லும் போது பல்வேறு விதமான சீரழிவுகளுக்கு முகம்கொடுக்கவே நேரிடும். இதற்கு தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளும் பாதிப்புகளும் நல்ல எடுத்துக்காட்டுகளாக உள்ளன.
தற்போது அபரிமித வளர்ச்சி பெற்றுள்ள தொடர்பாடல் துறை ஒரு காலத்தில் சமிக்ைஞ அடிப்படையில்தான்இடம்பெற்றது. இன்று இத்துறை அடைந்திருக்கும் உச்ச கட்ட வளர்ச்சியின் பயனாக உலகமே ஒரு பூகோளக் கிராமமாக மாறிவிட்டது.
தொடர்பாடல் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் ஒரங்கமாக சமூக வலைத்தளங்கள் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ளன. அவற்றில் நன்மைகளும் உள்ளன. தீமைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பிரித்தறிந்து பயன்படுத்துவது மிக அவசியமானது.இருந்தும் அவைதொடர்பில் பெரும்பாலானவர்கள் கவனம் செலுத்தாத நிலைமையே காணப்படுகின்றது.
அதனால் சமூக வலைத்தளங்களின் ஊடாக இடம்பெறும் மோசடிகள், துஷ்பிரயோகங்கள் மற்றும் ஏமாற்றுதல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது. இன்றைய காலகட்டத்தில் மோசடிகளும், ஏமாற்றுகளும் அதிகளவில் இடம்பெறும் ஒரு இடமாகவே சமூகவலைத்தளங்கள் விளங்குகின்றன. அவை சமூகச் சீர்கேடுகளுக்கு பெரிதும் துணைபுரிந்து வருகின்றன. இந்நிலைமை நீடிப்பதும் அதிகரிப்பதும் சமூக ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.
இன்று சமூக வலைத்தளங்களுக்கு அடிமையாகி இருப்பவர்களைப் பரவலாக அவதானிக்க முடிகின்றது. அவர்கள் மணித்தியாலக்கணக்கில் அவற்றிலேயே மூழ்கிப் போய் விடுகின்றனர். பக்கத்து வீட்டில் அல்லது தமக்கு அருகில் என்ன நடக்கின்றது என்பதைக் கூட அவர்கள் திரும்பிப் பார்க்க முடியாத அளவுக்கு காணப்படுகின்றனர். இந்நிலைமை கண்பார்வைக்கும், உடல் உள ஆரோக்கியத்திற்கும் ஏற்றதல்ல.
அதேநேரம் பார்ப்பதற்கும் செவியேற்பதற்கும் பெரும் கட்டுப்பாடாகவும் தடையாகவும் இருந்த பல்வேறு விடயங்களை மிக இலகுவாகப் பார்க்கவும் செவியேற்கவும் கூடிய இடமாக இந்த சமூகவலைத்தளங்கள் காணப்படுகின்றன. இதன் விளைவாக சமூகப் பிறழ்வுகளுக்குள் இட்டுச் செல்லப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இச்சமூகவலைத்தளங்கள் ஊடாக முன்பின் அறிமுகமற்றவர்கள் நண்பர்களாவதும், நட்பு கொள்வதும் பெரிதும் அதிகரித்துள்ளது. இந்த நட்பு பல்வேறு விதமான சீரழிவுகளுக்கு இட்டுச் செல்ல வழிவகுத்துள்ளது. அதாவது அண்மையில் ஒரு இளம் யுவதி ஆணொருவருடன் சமூக வலைத்தளம் ஊடாக நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்நட்பு சொற்ப காலத்தில் திருமண பந்தத்தில் கொண்டு போய்ச் சேர்த்தது. ஆனால் குறித்த ஆண் திருமணமானவர் என்பதை திருமணத்தின் பின்பே அந்த யுவதியினால் அறிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பல பதிவாகியுள்ளன.
இதேவேளை தினசரி ஊடகங்கள் அண்மையில் முக்கியத்துவம் அளித்த செய்திகளில் ஒன்றுதான் 'சமூக வலைத்தளத்தின் ஊடாக தோழமை ஏற்படுத்திக் கொண்ட பெண்மணியொருவர் ஒரு வார காலத்தில் 15 இலட்சம் ரூபாவை இழந்துள்ளார்' என்பதாகும்.
மேலும் சமூகவலைத்தளம் பாவிக்கும் மனைவிக்கு அதன் பாவனை தொடர்பில் கணவன் தெரிவித்த கூற்றினால் அப்பெண்மணி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு ஏகப்பட்ட சீரழிவுகளைத் தோற்றுவித்துள்ள சமூகவலைத்தளங்கள் வன்முறைகளுக்கும் கூட துணைபுரியக் கூடியனவாக உள்ளன. குறிப்பாக கண்டி, தெல்தெனிய, திகன வன்முறைச் சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள்தான் அடிப்படைக் காரணமாக அமைந்தன. அதனால் இவ்வன்முறையைக் கட்டுப்பாட்டு நிலைக்குள் கொண்டு வருவதற்காக சமூகவலைத்தளங்களை சில நாட்கள் கட்டுப்படுத்த வேண்டிய நிலைமை கூட அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.
இவை ஒருபுறமிருக்க, மாணவர்களின் சமூகவலைத்தளப் பாவனையும் பெரிதும் அதிரித்துள்ளது. அதனால் பருவத்தை மீறிய பழக்கவழக்கங்களுக்குள் தள்ளப்படக் கூடிய அச்சுறுத்தல்களுக்கும் அவர்கள் முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக அதீத கன உலகிற்குள் அவர்கள் தள்ளப்படுகின்றனர்.இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
ஆகவே தனிப்பட்ட, குடும்ப மற்றும் சமூக ஆரோக்கியத்திற்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் தீங்கையோ கெடுதல்களையோ ஏற்படுத்தாத வகையில் சமூக வலைத்தளங்கள் பாவிக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கமும் சமூக ஆர்வலர்களும் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் சமூக வலைத்தளங்கள் ஊடாக இடம்பெறுகின்ற மோசடிகளையும், முறைகேடுகளையும் சீரழிவுகளையும் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

0 Comments:

Post a Comment