Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

முச்சக்கர வண்டிகளை கண்காணிக்க ஆணைக்குழு
*சாரதிகளுக்கு வயதுக்கட்டுப்பாட்டை கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறல்
*12 இலட்சம் பேர் உள்ள துறையில் வயதுக் கட்டுப்பாடு பெரும் பாதிப்பு

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வயதுக் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறலாக அமைந்துவிடும் என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளை கண்காணிப்பதற்கு விசேடமான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றை அமைப்பதற்கான சட்ட வரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நிதியமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முச்சக்கர வண்டி சாரதிகளாவதற்கு 35 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற போக்குவரத்து அமைச்சின் புதிய யோசனை தொடர்பில் அமைச்சரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. இதற்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் மங்கள சமரவீர மேற்கண்ட தனது நிலைப்பாட்டை வெளியிட்டார்.

எமது நாட்டில் உள்ள ஒரு நபர் தனக்கு விரும்பிய தொழிலில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளது. பன்னிரண்டு இலட்சம் பேர் உள்ள துறையில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு வயதுக் கட்டுப்பாடொன்றைக் கொண்டுவருவது அடிப்படை உரிமை மீறலாக அமைந்துவிடும். இதனால்தான் கடந்த வரவுசெலவுத்திட்டத்தில் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கு பயிற்சிகளை வழங்கி அவர்களின் ஊடாக சிறந்த சேவையை வழங்கும் யோசனையை முன்வைத்திருந்தேன். சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி போக்குவரத்து ஆணைக்குழுவும் விசேடமான பயிற்சிகளை வழங்கிவருகிறது. இதற்கும் அப்பால் என்டர்பிரைஸ் ஸ்ரீரீலங்கா திட்டத்தின் கீழ் முச்சக்கரவண்டி சாரதிகளுக்காக 'டுக் டுக்' கடன் வழங்கத் திட்டமிட்டுள்ளேன். இதன் கீழ் முச்சக்கரவண்டி சாரதி அல்லது அவருடைய மனைவி சுயதொழிலொன்றைச் செய்வதற்கு இந்தக் கடன் வழங்கப்படும் என்றார்.

ஒருசிலர் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என்பதற்காக ஒட்டுமொத்தமானவர்களையும் ஒதுக்கிவைத்துவிட முடியாது. முச்சக்கரவண்டி ஓட்டுபவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்பதற்காக அவர்களைத் தடைசெய்வதாயின், செல்வந்தர்களின் பிள்ளைகள் போதைப் பாவனையின் பின்னர் பீ.எம்.டபிள்யு போன்ற உயர்ரக வாகனங்கள் செலுத்துவதும் தடைசெய்யப்பட வேண்டும்.

போக்குவரத்து அமைச்சின் இந்த வயதுக்கட்டுப்பாட்டு யோசனை தொடர்பில் நாளை (இன்று) நடைபெறவுள்ள அமைச்சரவையில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முச்சக்கரவண்டிகள் கண்காணிப்பதற்கு விசேடமான ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றை அமைக்கவுள்ளோம். இதற்கான சட்டவரைபுகள் தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்ததும், அமைச்சரவையின் அனுமதியுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முச்சக்கரவண்டி சாரதிகளின் வயது எல்லை குறித்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மேலும் கேள்விகளை எழுப்பியிருந்ததுடன், சில ஆலோசனைகளையும் முன்வைத்திருந்தனர்.

ஊடகவியலாளர் : கேள்வி முச்சக்கர வண்டிகள் இந்தியாவிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் நாட்டுக்குள் வந்து குவிந்துள்ளன. இதனால் இளைஞர்கள் மூன்று சக்கரங்களின் மேல் சாகசம் காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது அல்லவா?

அமைச்சர் : இளைஞர்கள் மூன்று சக்கர வாகனத்தை கொண்டு பணம் ஈட்டுவதில் உள்ள தவறு என்ன? முச்சக்கரவண்டி கலாசாரத்தை இல்லாமல் செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும். இதனை கட்டமைப்பொன்றுக்குள் கொண்டுவருவதற்கே பேராசிரியர் கோதாகொட விசேட வேலைத்திட்டங்களை செயற்படுத்தியுள்ளார். முச்சக்கரவண்டி ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவொன்றை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். பாடசாலை செல்லும் சகலரும் சாதாரணதர பரீட்சை, உயர்தரப் பரீட்சையில் தேறி பல்கலைக்கழகம் செல்வதில்லை. அவ்வாறானவர்கள் தமது வாழ்க்கையை கொண்டுசெல்ல வேண்டிய தேவையுள்ளது.

ஊடகவியலாளர்: ஒழுங்குறுத்துநர் ஒருவர் இல்லையென்பதாலேயே முச்சக்கரவண்டித் துறை வெற்றிகரமான துறையாகவுள்ளது. ஒழுங்குறுத்துனர் ஒன்றை கொண்டுவந்தால் தனியார் பஸ் மாதிரியே இதுவும் மாறிவிடும். முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் தாமாக முன்வந்து மீற்றர்களை பொருத்தியிருப்பதுடன், ஆகக் குறைந்த கட்டணமாக 60 ரூபாவை அறவிட வேண்டும் எனக் கோரியபோதும். பெரும்பாலானவர்கள் இன்னமும் 50 ரூபாவே அறவிடுகின்றனர்.

அமைச்சர்: ஒழுங்குறுத்தல் தொடர்பில் அரசாங்கம் தீர்மானிக்கும். எனினும், தமக்கான பொறிமுறையொன்று அவசியம் என முச்சக்கரவண்டி சாரதிகளே கோருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை முச்சக்கரவண்டி தொழிற்சங்கத்தினரை சந்தித்தபோதும் இந்தக் கோரிக்கையையே முன்வைத்தனர்.

ஊடகவியலாளர் : ஒழுங்குறுத்துனர் ஒருவரைக் கொண்டுவந்தால் முச்சக்கரவண்டியில் தற்பொது காணப்படும் புத்தாக்கம் இல்லாமல் போய்விடும். தனியார் பஸ்சேவையில் எந்த புத்தாக்கமும் இல்லை. ஆனால் முச்சக்கரவண்டி சாரதிகள் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துவது போன்று பல்வேறு புத்தாக்கமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அது மாத்திரமன்றி இத்துறையில் ஈடுபடுவதற்கு ஆரம்பக்கட்டணமோ அல்லது அனுமதிக்கட்டணமோ எதுவும் இல்லை. ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவொன்றைக் கொண்டுவந்து கண்காணிக்க முயற்சித்தால் அனுமதிக்கட்டணம் அதிகரித்து அது பயணிகளின் கட்டணத்தையே அதிகரிக்கச் செய்யும். முச்சக்கரவண்டியானது சகல தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய போக்குவரத்து சாதனமாக உள்ளது.

அமைச்சர் : நிச்சயமாக சகலராலும் தாங்கக்கூடிய கட்டண அமைப்பைக் கொண்ட போக்குவரத்து சாதனமாக முச்சக்கரவண்டி காணப்படுகிறது. எனினும், ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஊடாக முச்சக்கரவண்டியின் பாதுகாப்புப் பக்கத்தையே கவனிக்கவுள்ளோம்.

ஊடகவியலாளர் : 35 வயது வந்தவர்களே முச்சக்கரவண்டி சாரதிகளாக இருக்க முடியும் என்றால், முதலில் ஒரு தொழிலைச் செய்துவிட்டு பின்னர் முச்சக்கரவண்டியை ஓட்டமுடியும். ஆனால் இலங்கையில் வேலைவாய்ப்பின்மை வீதத்தை நோக்கினால் 20 வயது முதல் 30 வயதெல்லையிலேயே அதிக வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது.

அமைச்சர் : நாளை அமைச்சரவையில் எனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க குறிப்புக்களை எடுத்துத் தந்துள்ளீர்கள் எனக் கூறினார்.