Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சுகாதாரக் கேடு விளைவிக்கும் கொழும்பின் நீண்ட கால்வாய்


ஒருபுறம் தொற்று நோய் அபாயம் மறுபுறம் மரண அச்சுறுத்தல்!

கொழும்பு நகரம் ஏனைய நகர்களை விடவும் முதன்மையானதாகக் காணப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் நகரமாக கொழும்பு நகரம் காணப்படுகின்றது. மக்களின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்திற்கும் ஏற்ற வகையில் நகரை சுத்தம் செய்து அழகுபடுத்தும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு.

கொழும்பு கிராண்ட்பாஸ், டிமெல்வத்தை பகுதியில் காணப்படும் பாரிய கழிவுநீர் கால்வாய் இப்படத்தில் காணப்படுகிறது.இந்த கால்வாயில் வீட்டுக் குப்பைகள், பொலித்தீன் கழிவுப் பொருட்கள், பாவனைக்குப் பின்னரான பிளாஸ்ரிக் போத்தல்கள் என்பன கொட்டப்படுகின்றன.வாகனங்களின் கழிவுப் பொருட்கள் மற்றும் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுப் பொருட்களும், கழிவு நீரும் இந்த ஆற்றிலேயே சங்கமிக்கின்றதைக் காண முடிகிறது.கால்வாயின் கீழ்ப்பகுதியில் சில இடங்களில் ஒரு மனிதன் புதையுறும் அளவிற்கு சேறும், சகதியும் காணப்படுவதுடன் எந்த நேரமும் துர்நாற்றமும் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

காலிமுகத்திடல் கடலில் இருந்து லேக்ஹவுஸ் சுற்று வட்டம் ஊடாகவும், புதிதாக அமைக்கப்பட்ட புளோட்டிங் சந்தைக் கட்டடப் பகுதிகளில் இருந்து மருதானை, பஞ்சிகாவத்தை, கிராண்ட்பாஸ் தொட்டலங்க ஊடாகவும் களனி ஆற்றில் சென்று விழும் இந்த பாரிய கழிவுநீர் ஆற்றில் நாளாந்தம் பெருமளவான கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன.

மக்கள் கழிவுப் பொருட்களை பொறுப்பற்ற வகையில் இவ்வாறான கழிவுநீர் வடிகான்களில் வீசுவதால் அவை கழிவுநீருடன் கலந்து அழுகி ஒரு வகையான துர்நாற்றம் வீசுவதுடன் நோய்களும் பரவுகின்றன. குறித்த சுற்றாடல் அசுத்தமாக காணப்படுகின்றது.

இந்த ஆற்றினை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு நோய், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்த கழிவுநீர் கால்வாய் தலைநகரை ஊடறுத்து நீண்ட தூரம் செல்வதுடன் இரு மருங்குகளிலும் எந்தவித பாதுகாப்பு தடைகளும் இல்லை.இதன் காரணத்தினால் அப்பகுதியில் காணப்படும் வீதிகளும் சிதைவடைந்து காணப்படுகின்றன. இரு மருங்கிலும் மின்சார விளக்குகள் கூட இல்லாத காரணத்தால் அம்மக்கள் இரவு வேளைகளில் கால்வாய்க்குள் விழ வேண்டிய ஆபத்து காணப்படுகிறது. இந்த ஆற்றில் கடந்த காலங்களில் பலர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கவலை தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆடு, மாடு, நாய்கள்,கால்நடைகள் கூட அடிக்கடி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறுகின்றனர். முச்சக்கர வண்டிகள், சிறியரக வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகளும் கூட தவறி வீழ்ந்துள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் ஸ்ரீ இசிபதானாராமய விஹாரை, அல்-ஹைராத் ஜும்ஆப் பள்ளிவாசல்,இந்து ஆலயம் என்பனவும் காணப்படுகின்றன. பல தொழிற்சாலைகளும் அங்கு உள்ளன. சமய வழிபாட்டுக்குச் செல்பவர்கள் தமது பிள்ளைகளை அச்சத்துடனேயே அழைத்துச் செல்வதாகத் தெரிவிக்கின்றனர். மக்களுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கழிவுக் கால்வாய் விடயத்தில் அரசியல்வாதிகளும், அரசாங்கமும் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.

உயிராபத்து ஏற்படுத்தும் இந்த பாதுகாப்பற்ற ஆறு மழை காலங்களில் நீரால் நிறைந்து பாதை வரை நீர் நிரம்புவதால் ஆறு எது, பாதை எது என்று தெரியாதபடி உள்ளது. அவ்வாறான நேரங்களில் பலர் ஆற்றில் வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த கழிவு நீர் ஆற்றில் இன்னும் பல உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்னர் அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.