Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அஹிம்சையின் பெறுமானத்தை உணரத் தவறிய இலங்கை!

மாபெரும் தேசமான இந்தியாவின் தந்தை என்பதற்கு அப்பால், அஹிம்சையை முதன்முதலில் உலகுக்கு அளித்தவரென்ற ரீதியில் காந்தியடிகள் இன்றும் கூட நினைவுகூரப்படுகின்றார்.

மகாத்மா காந்தி பிறந்து 150 வருடங்களாகின்றன. அவர் மறைந்து எழுபது வருடங்களாகி விட்டது. ஆனாலும் அண்ணல் காந்தியை உலகம் இன்னுமே மறந்து விடவில்லை.

இந்தியா என்ற எல்லையையும் கடந்து உலகளாவிய ரீதியில் அன்னாரின் நாமம் இன்னும்தான் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவரது 150 வது ஜனன தினத்தை முன்னிட்டு எமது நாட்டின் பாராளுமன்றத்திலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று சபை ஒத்திவைப்பு விவாதமொன்று நடைபெற்றது.

இப்பிரேரணை மீது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட பலரும் உரையாற்றியிருந்தனர்.


அவர் மறைந்து எழுபது வருடங்கள் கடந்த பின்னரும் உலகின் பல்வேறு நாடுகளும் இம்மகானின் சிறப்புகளைப் போற்றுகின்றன என்பது கவனிக்கத்தக்க விடயம். இனம், மதம். மொழி, கண்டம் என்றெல்லாம் அனைத்துக்கும் அப்பால் காந்தி மகானை உலகம் இன்றும் போற்றித் துதிப்பதற்குக் காரணம் அவர் இந்தியாவுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தார் என்பதற்காக மட்டுமல்ல...

காந்தியடிகள் கடைப்பிடித்த சத்தியநெறிகளும், அவர் முன்னெடுத்த அஹிம்சை ரீதியான போராட்டங்களுமே அன்னாரின் புகழை இன்னுமே மறையாமல் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. காந்தியடிகள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அஹிம்சை, சமாதானம், சத்தியவாழ்வு என்பவைதான்.ஏனையோருக்கு இம்சையளிக்கின்ற அனைத்து வழியான செயல்களையும் காந்தி தனது வாழ்விலிருந்து ஒதுக்கினார். மனிதருக்கு மாத்திரமன்றி சிறுபிராணிக்கும் தீங்கு இழைக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாதவர் அவர். இனம், மதம், மொழி, பிரதேசம் என்றெல்லாம் மக்களை வேறுபடுத்தும் கொள்கைகளை வெறுத்த மகான் அவர்.

எனவேதான் ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தில் எவருக்குமே தீங்கிழைக்காத அஹிம்சை வழியை தெரிவு செய்தார் மகாத்மா காந்தி.

‘ஆங்கிலேயரை நாம் வெறுக்கவில்லை. அவர்களது ஏகாதிபத்தியத்தையே வெறுக்கிறோம்’ என்று கூறியதன் மூலம் இந்திய மக்களின் உள்ளத்து உணர்வுகளை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு தெளிவாக அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

அதுமாத்திரமன்றி, ஆங்கிலேயர் மீது தனிப்பட்ட ரீதியில் தமக்கு வெறுப்பெதுவும் கிடையாதென்பதை, அஹிம்சைப் போராட்டத்தின் போதெல்லாம் காந்தியடிகள் வெளிப்படுத்தத் தவறியதேயில்லை.

அவரது தலைமையிலான ஓயாத போராட்டமே இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது எனலாம்.

“அவர்கள் வாள்கள் கொண்டு எம்முடன் போரிட்டார்கள். நாம் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கொண்டு அவர்களை அடக்கி விட்டோம். அவர்கள் அஹிம்சை என்ற ஆயுதத்தை கையில் எடுத்ததும், அதனை எதிர்க்கின்ற ஆயுதம் எம்மிடம் இருக்கவில்லை. நாம் தோற்றுப் போனோம்” என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அப்போது கூறியிருந்தார்கள்.

அஹிம்சை என்பது எத்தனை பலமான ஆயுதமென்பது இக்கருத்தின் மூலம் மிகவும் தெளிவாகப் புலப்படுகின்றது. பிரிட்டிஷ் காலனித்துவத்துக்கு எதிராக அன்றைய வேளையில் காந்தியடிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வே இலங்கையின் சுதந்திரத்துக்கும் வழியேற்படுத்திக் கொடுத்ததென்பது உண்மை.

காந்தியடிகளின் போராட்டமானது இந்தியாவுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து விட்டது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பாகிஸ்தான் என்ற தேசம் உருவாகுவதற்கும் காந்தி மகானின் நல்லிணக்கமே வழிவகுத்தது எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியாவும் இலங்கையும் விடுதலை பெற்று 70 வருடங்கள் கடந்தோடி விட்டன
.

இந்திய விடுதலைக்குப் பின்னர் அந்நாட்டுக்கென எழுதப்பட்ட அரசியல் யாப்பு அனைத்து மாநிலங்களையும், அனைத்து இன மக்களையும் சமமாக மதிக்கும் பலம் வாய்ந்ததொரு யாப்பாக விளங்குகின்றது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்கள் காரணமாக அம்மாநிலங்களில் சுயமான ஆட்சிமுறையொன்று தடையின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சிறுசிறு ஆயுதக் குழுக்கள் அவ்வப்போது தோற்றம் பெற்றுள்ள போதிலும், பிரிவினை கோருகின்ற மக்கள் கோஷம் எதுவும் அங்கு உருவாகவில்லை. மாநிலங்களுக்கு அரசியல் அதிகாரங்கள் உச்ச அளவில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதன் விளைவாகவே பிரிவினைப் போராட்டங்களோ, அரசியல் அதிகாரம் கோருகின்ற போராட்டமோ இந்தியாவில் பாரியளவில் தோற்றம் பெறவில்லை எனலாம்.

மகாத்மா காந்தி என்ற மாமனிதரை இனம், மதம், மொழி, மாநிலம் கடந்து அந்நாடு இன்றுமே போற்றித் துதித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அரசியல் சாசனமும் மாற்றியமைக்கப்பட வேண்டிய அவசியமற்றதாக உள்ளது.

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இலங்கை விடுதலை பெற்று 70 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், உள்நாட்டு இன முரண்பாடுகள் இன்னுமே தீர்ந்தபாடாக இல்லை. சுதந்திரத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தமிழினம் இன்னுமே அரசியல் உரிமைக்காக கோஷம் எழுப்பிக் கொண்டேயிருக்கிறது. தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்குக்கென நியாயபூர்வமான அரசியல் அதிகாரங்களை வழங்குமாறு சுதந்திரத்துக்கு முற்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை குரலெழுப்பப்பட்டுக் கொண்டே வருகின்றது.

ஆரம்பத்தில் அஹிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அஹிம்சையின் பெறுமானத்தை ஆங்கிலேயர்கள் உணர்ந்து கொண்டபடி, இலங்கையின் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.


அதன் பின்னர் உருவான ஆயுதப் போராட்டம் முப்பது வருட காலமாக நாட்டைச் சீரழித்தது. தற்போது மீண்டும் அஹிம்சை ரீதியான போராட்டங்களின் அவசியம் குறித்து தமிழ் அரசியல் பரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசியல் அதிகாரம் கோருகின்ற தமிழினத்தின் போராட்டமானது இவ்வாறு தொடர்ந்து கொண்டே செல்வதற்கான அறிகுறியே தென்படுகின்றது. அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படுவதற்கான அறிகுறியைத்தான் இன்னும் காண முடியாமலுள்ளது.