Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆண் ஆசிரியர்கள் பற்றாக்குறை சமூகத்திற்கு பெரும் குறைஆசிரியர் தொழில் என்பது ஒரு புனிதமான சேவை என்றால் மிகையாகாது. எதிர் கால சந்ததியினரை சமூகத்துக்கும் நாட்டுக்கும் தேவையான விதத்தில் செப்பனிடுவதில் ஆசிரியர்களின் வகிபங்கு ஆழமானது ,அளப்பரியது. சில வேளைகளில் சமூகத்தால்  விமர்சனங்களும் விசனங்களும் தம்மை நோக்கி எறியப்பட்டாலும்  காய்க்கின்ற மரத்துக்கே கல்லும் பொல்லும் என்ற ரீதியில்  அர்ப்பணிப்புடன் தம் சேவையை செய்யும் ஆயிரமாயிரம்  ஆசிரியர்கள் நம் மத்தியில் உள்ளனர் .

இன்று ஆசிரியர் தொழில் என்பது பெண்களுக்கு மட்டும் உரியதோ என நினைக்கும் அளவிற்கு ஆண் ஆசிரியர்களை காட்டிலும் பெண் ஆசிரியைகளின் எண்ணிக்கை சதவீத அடிப்படையில் அதிகம் உள்ளதனை காணலாம். இன்றைய எம் பாடசாலைகளை அவதானிக்கையில் இதனை தெளிவாக காணலாம். இந்நிலை ஆரோக்கியமான சமூக கட்டமைப்பிற்கு உகந்ததல்ல..

குடும்பம் , பாடசாலை என்ற இரு சுமைகளை தாங்கி சேவை புரியும் ஆசிரியைகளை விட ஆண் ஆசிரியர்களிற்கு தம் கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்பதே யதார்த்தம்..

👉ஆண் ஆசிரியர்கள் ஏன் அதிகம் தேவை?

* பாடசாலையை கட்டுப்படுத்த..
கண்டிப்பும், ஆளுமையும் இவர்களிடம் பெண்களை பார்கிலும் அதிகம்.. அதிலும் கலவன் பாடசாலைகள் , ஆண்பாடசாலை என்று வரும்போது ஆண் ஆசிரியர்களின் தேவை இன்னும் அதிமாகின்றது.

* பாடசாலையின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள..
உதாரணமாக இல்ல விளையாட்டு போட்டி, களப்பயணம் போன்றவற்றை ஒழுங்கு செய்ய இவர்களது உதவி அவசியம்..

* பாடசாலையின் வெளி வேலைகளில் ஒத்துழைப்புகள் புரிய..
பாடசாலை என்பது பரந்து பட்ட கட்டமைப்பை கொண்டது என்ற வகையில் இரவு பகல் பாராது, உழைக்க வேண்டி வருகின்றது. இந்நிலையில் பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் ஈடுபாட்டுடன் செயற்பட முடிகின்றது..

* பொதுவாக பெண்கள் கணவன், பிள்ளைகள் என்று வரும் போது வெளி மாவட்டங்களில் நடைப்பெறும  3 நாள் அல்லது தொடர்ச்சியாக நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள கஷ்டப்படுவார்கள். ஆனால் ஆண்களினை பொறுத்த வரையில் அப்படி பிரச்சினைகள் குறைவு.

* இந்தவகையில் பார்க்கும் போது பெண்களை விட ஆண் ஆசிரியர்களின் வகிபாகம் பாடசாலையை சீரமைக்க அத்தியவசியமாகும்..

👉 ஆண் ஆசிரியர்களின் பற்றாகுறை ஏன்?

* உயர் கல்வியில் நாட்டம் இன்மை. குறிப்பாக கல்வியல் கல்லூரிகளுக்கு தகுதி பெறும் வாய்ப்புக்கள் இருந்தும் பல ஆண் மாணவர்கள் அவற்றுக்கு செல்ல விரும்பாமை.

* ஆசிரிய தொழில் கடினமானது என்ற நிலைப்பாடு  மாணவர்கள் மத்தியில் நிலவுதல்.

* ஆசிரிய தொழிலில் வரும் வருமானம் போதாது என கருதல்.
இதனை விட வியபாரம் போன்றவற்றில் ஈடுபடுவதால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற மனப்பாங்கு..

* வெளிநாட்டு மோகம்.

* ஆண்கள் ஆசிரியர்களாக வருவதனை சமூகம் ஊக்குவிக்காமை. இதனை பற்றிய நேர்மறை எண்ணங்களை அவர்களில் மனதில் பதித்தல்.

* க.பொ. த உயர்தர கல்வியில் ஈடுபாடு காட்டாமை.

* தம்மால் மாணவர்களிற்கு கற்பிப்பது கடினம் அல்லது முடியாது என்ற சிந்தனை ஆழமாக பதிந்திருப்பதனால் ஆசை இருந்தும் பல மாணவர்கள் ஆசிரிர்களாக முயற்சிப்பதில்லை.

* சொகுசு வாழ்க்கை முறையினை கொண்டு செல்ல ஆசிரிய தொழில் போதாமை என்ன மனோநிலை.

* இது போன்ற பல்வேறு காரணிகள் ஆண் ஆசிரியர் பற்றாக்குறையில் தாக்கம் செலுத்துகின்றன.

👉 இதனால் ஏற்படும் விளைவுகள்.

* வினைதிறனாக பாடசாலைகளை கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்படல்.

* பாடசாலைகளின் கட்டுப்பாடு சீர்குலைதல்.

* அதிகம் பழைய மாணவர் குழுக்களின் உதவியை பல்வேறு விடயங்களிற்கு நாட வேண்டி ஏற்படல்.

* ஆசிரியைகள் கருத்தரங்குகளில் கலந்து கொள்ள முடியாமல் போகுமிடத்து புதிய பாடதிட்டங்கள், கல்வி சார் விடயங்கள் குறித்து தம்மை புதுப்பித்து ( update) கொள்ள  முடியாது போகுதல்.

* பெண் ஆசிரியைகள் அதிகம் இருப்பதனால் திருமணம் என்று வரும் போது தமக்கு பொருத்தமான துணைகளை தேடுவதில் ஏற்படும் கடினம்.

* மேலதிக வகுப்புக்கள், இணைப்பாடவிதான செயற்பாடுகளை கொண்டு நடாத்துவதில் சிக்கல்கள் ஏற்படல்.

* இது போன்ற எண்ணற்ற சிக்கல்களை இப்பற்றாக்குறை உண்டாக்குகின்றன எனலாம்.

👉 இதனை எவ்வாறு தீர்ப்பது?

* ஆண் மாணவர்களை சிறு வயதிலிருந்தே ஆசிரியர் தொழில் பற்றிய முற்போக்கு கருத்துக்களை மனதில் பதிய வைத்தல்.

* சாதாரண தர, உயர்தர மாணவர்களை மையமாக கொண்டு விழிப்புணர்வு செயற்பாடுகளை நடாத்தல்.

* ஆசிரியர் தொழில் பற்றிய ஆசைகளை அவர்களது மத்தியில் உருவாக்கல்.

* தகுதி பெறும் ஆண் மாணவர்களை கல்வியற் கல்லூரி, பல்கலைகழகங்களிற்கு விண்ணப்பிக்க ஆர்வமூட்டல்.

*  படிக்கின்ற காலத்தில் அவர்களது சிந்தனை பணத்தின் மீது மோகம் கொள்வதனை தடுத்தல்.

* ஆசிரிய தொழிலின் முக்கியத்துவம் , நன்மைகள் குறித்து வகுப்பறைகளில் அடிக்கடி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்.

* ஆசிரியர் என்ற ஆரம்ப படிநிலையிலிருந்து சிறிது சிறிதாக உயர்ந்து சிறந்த மட்டத்தினை அடைய முடியும் என தெளிவுபடுத்தல்.

* ஆசையும், திறமையும் இருந்தும் குடும்ப பொருளாதார நெருக்கடிகளால் பின்வாங்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய விதத்தில் வழிகாட்டல்களையும், பண உதவிகளையும் பெற்றுக்கொடுத்தல்.

* இதற்கான தீர்வுகளை செயற்படுத்தும் போது சமூகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்..

நம் சமூகத்தில் பெருங்குறையாகியுள்ள ஆண் ஆசிரியர்கள் பற்றாக்குறையை தீர்ப்பது நம் அனைவரினதும் கடமையாகின்றன. இன்னும் சில காலம் செல்கையில் இந்நிலை இன்னும் மோசமாகலாம். ஆகவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு இதற்கான தீர்வுகளில் ஈடுபட்டு எம் சமூகத்தினை பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவையுமாகும்.
✒ Shifana Zameer
      Balangoda.
      13. 02. 2019

0 Comments:

Post a Comment