சாய்ந்தமருது சம்பவத்தில் பலியான 19 வயது அஸ்ரிபா: திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே முடிந்துபோன சோகம்



சாய்ந்தமருதில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவ படையினருக்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் 19 வயதான அஸ்ரிபா இறந்துவிட்டது குறித்து அவரது தாய் ஹிதாயா பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார்.

சாய்ந்தமருதில் சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலையில் பொலிவேரியன் பகுதிக்குள் நுழையும் பிரதான பாதையில் நிறுத்தப்பட்டிருந்த நீல நிற ஆட்டோ ஒன்றிலிருந்து அஸ்ரிபாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அதில் பயணித்த அஸ்ரிபாவின் கணவரும் மாமியாரும் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் பயணித்த அஸ்ரிபாவின் கணவருடைய சகோதரி, காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பியுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் தனது மகள் இறந்துவிட்டதாகவும், ஆனால் சம்பவத்தை நேரில் பார்க்காத காரணத்தால் யாரின் தாக்குதலில் அவள் உயிரிழந்தார் என்பதை உறுதியாக கூறமுடியாது என இருவேறு தகவல்களை அஸ்ரிபாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்
16 வயதில் திருமணம்

2016ஆம் ஆண்டு கல்முனைக்குடியைச் சேர்ந்த ஜாசிர் என்பவருக்கு எங்களது மகளை திருமணம் செய்துவைத்தோம். எங்கள் வீட்டில் நான்கும் பெண் பிள்ளைகள், இதனால் எங்கள் மூத்த மகள் அஸ்ரிபாவுக்கு வரப்போகும் மாப்பிள்ளை எங்களுக்கு மகன் ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டோம்.

அதற்கு தகுந்தாற்போல் ஜாசிர் எங்களை அவரது சொந்த பெற்றோர் போல் கவனித்துக்கொண்டார். திருமணமான 41 வது நாளிலேயே ஜாசிர் தனது தொழில்நிமித்தமாக வெளிநாட்டு சென்றுவிட்டார். இரண்டு வருடங்கள் கழித்து கடந்த வருடம் தான் ஊருக்கு திரும்பினார்.

தற்போது, அஸ்ரிபாவுக்கு 19 வயதாகிறது. அவள் தனது திருமண வாழ்க்கையை ஆரம்பிக்கும்போதே அதற்குள்ளாக அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது வேதனையளிக்கிறது என பெற்றோர் பகிர்ந்துள்ளனர்.

தனது மனைவியை ஒரு குழந்தை போல ஜாசிர் பார்த்துக்கொண்டார். அஸ்ரிபா ஆசையாக ஒரு கிளியை வளர்த்தார், அந்த கிளியும் அவள் இறந்த அடுத்தநாளே இறந்துவிட்டது என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் சிந்தியுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற அன்று நடந்தது என்ன?

அஸ்ரிபா தனது கணவருடன் கல்முனையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றிருந்தார். இரவு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. இங்குள்ள மக்கள் எல்லோரும் பயந்து கலவரப்பட்டு அவரவர் வீடுகளுக்குள் புகுந்து கொண்டனர்.

அப்போது, அஸ்ரிபாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இங்கு வரவேண்டாம், கல்முனையில் இருந்துவிட்டு நாளை வருமாறு கூறினேன். ஆனால், அவள் எதையும் கேட்காமல் சாய்ந்தமருதுக்கு வந்துவிட்டாள்.

இடையில் அவளது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் அதிகாலை இண்டரை மணியளவில் எங்களது மருமகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார் அஸ்ரிபாவின் நிலையை அவர் கூறவில்லை.

எங்களது மகளின் நிலை என்பது குறித்து நாங்கள் அறிந்துகொள்ள முயன்றபோதுதான் ஆட்டோவிலிருந்து அவளது சடலம் மீட்கப்பட்டது என கூறியுள்ளார்.

0 Comments:

Post a Comment