இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பு சதியில் அமெரிக்கா? இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன், 500 பேர் வரையில் காயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தது. இதனையடுத்து, பலர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தொடர்குண்டு வெடிப்பின் பின்னணியில் வெளிநாடுகளின் சதி இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டி வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், "இந்த பயங்கரத்தில் சர்வதேச சதி இருப்பதை உணர முடிகிறது” என அண்மையில் கூறியிருந்தார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் தலை தூக்கியுள்ள நிலையில் இருவரும் ஒரே வித சந்தேகத்தை முன்வைப்பது வெடிகுண்டு பயங்கரத்தின் மறைக்கப்படும் பக்கங்களை அம்பலப்படுத்துகின்றன.

இப்படிப்பட்ட சூழலில்தான், அமெரிக்காவுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையே இருக்கும் இரகசிய உடன்படிக்கை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, சீனா, இந்தியா, நோர்வே, பிரித்தானியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட 7 நாடுகளின் உதவியுடன் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளை, மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர்களும் இல்லாது செய்தனர்.

யுத்தம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து சீனா மற்றும் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாறிப்போனார்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்தியா, பிரித்தானி, நோர்வே நாடுகளின் உதவியுடன் 2015ம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை வீழ்த்த, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தியது அமெரிக்கா.

எனினும், மைத்திரிபால சிறிசேனவும் ஒரு கட்டத்தில் சீனா, பாகிஸ்தானின் ஆதரவாளராக மாறிப்போனார். இந்த பின்னணியில் தான் கடந்த 3 ஆண்டுகளாக, அமெரிக்காவிடம் மிக நெருக்கமான, அரசியல் ரீதியாக நட்பை பலப்படுத்தி வருகிறார் கோத்தபாய ராஜபக்ச.

இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை வீழ்த்தி கோத்தபாயவை ஜனாதிபதியாக்க கடந்த 6 மாதகாலமாக இரகசிய வியூகங்களை மேற்கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இதன் ஒரு கட்டமாக, கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையை இரகசியமாகத் திரும்ப பெற்றுக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசாங்கம். அமெரிக்காவும் ராஜபக்ச, சகோதரர்களும் இதனை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

“இலங்கையின் அரசியலமைப்பு சட்டப்படி இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச, அங்கு தங்கியிருந்த 3 வாரங்களும் அமெரிக்க உயர் ஸ்தானிகர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியிருக்கிறார்.

அமெரிக்காவே தன்னுடைய குடியுரிமையை மீளப்பெற்றுக்கொண்டது போல இருக்க வேண்டும் என்பது கோத்தபாயவின் கோரிக்கையாக இருந்துள்ளதாக இலங்கை புலனாய்வு அமைப்புகளோடு தொடர்புடைய தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனை அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடுகின்றார் என்ற தகவல் வெளியாக கூடாது என்பதற்காகவே குடியுரிமை இரத்து இரகசியமாக வைக்கப்படுகிறது.

கோத்தபாயவின் வெற்றிக்காகத்தான் இலங்கையில் வெடிகுண்டு பயங்கரங்கள் தொடர்ந்து நடந்தேறுகின்றன. ஜனாதிபதி தேர்தல் வரை இலங்கையை பதற்றத்திலேயே வைத்திருக்க திட்டமிடுகிறது அமெரிக்கா” என அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் கோத்தபாயவின் இந்த இரகசிய திட்டங்களுக்கு சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்ஷா விக்ரமதுங்க முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றார்.

தனது தந்தையின் படுகொலைக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சதான் காரணம் என லசந்தவின் மகள் அகிம்ஷா விக்கிரமதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

“கோத்தபாயவின் நடவடிக்கைகளை அறிந்த அகிம்ஷா, அமெரிக்காவில் தனது நண்பர்களான சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்தார்.

தனது தந்தையின் படுகொலைக்கு கோத்தபாயதான் காரணம் எனவும், இவர் மீது நிறைய போர்க்குற்றங்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி அமெரிக்காவின் கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் கோத்தபாயவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் அகிம்ஷா.

அமெரிக்க குடியுரிமை பெற்றவரான கோத்தபாய மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் உள்ள வழக்கு முடியும் வரையில் குடியுரிமையை இரத்து செய்யவோ, திரும்பப் பெறவோ முடியாது.

கோத்தபாயவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவே அவர் மீது அகிம்ஷா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா அரசின் உயரதிகாரிகளின் உதவியுடன் வழக்கை தடுத்து நிறுத்த கோத்தபாய முயற்சிப்பார் என யோசித்த அகிம்ஷாவின் சட்ட நிபுணர்கள், கோத்தபாய மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும், அவருக்கு அனுப்பப்பட்ட மனுவையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்” என ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமெரிக்கா மற்றும் கோத்தபாய ராஜபக்சவின் கூட்டுச் சதியில் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment