Friday, April 27, 2018

வெலிகம அறபா பாடசாலை 2007 க.போ த சாதாரண தர மாணவர் ஒன்றுகூடல்வெலிகம அறபா தேசிய பாடசாலையில்   சினேக பூர்வ கிரிகெட் சுற்றுபோட்டி ஒன்று எதிர்வரும் 29 ம்  திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 2007 க.போ த சாதாரண தர மாணவர்கள்   இக் கிரிகெட் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர் எட்டு  அணிகளாக பிரிக்கப்பட்டு இக் கிரிகெட் போட்டி இடம்பெறவுள்ளது
 பாடசாலை மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் தமது ஆக்கபூர்வமான பங்களிப்பினை வழங்குவதே இக் கிரிகெட் சுற்று போட்டியின் நோக்கமாகும். 
இதன் அங்குரார்பண  வைபவத்தில் வெலிகம அறபா  தேசிய பாடசாலை அதிபர் மற்றும் கிண்ணம் வழங்கும் வைபவத்தில் நாளிர் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது

எட்டு அணிகளின் விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது


.
Read more »

Friday, April 13, 2018

போதைப்பொருள் ஆபத்திலிருந்து மாணவரை காப்பாற்றுவது அவசியம்

           

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பெண்மணியிடமிருந்து பெரும் தொகையான ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளின் தகவலின்படி அப்பெண்ணின் பொருட்கள் அடங்கிய பொதிக்குள் எட்டு கிலோ ஹசீஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 35 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலெனத் தெரிய வருகின்றது. நாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு எனனதான் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ஏதோவொரு வகையில் போதைப் பொருட்கள் நாட்டுக்குள் வந்து கொண்டே இருக்கின்றன. தேசத்தின் மேன்மைக்கு இது எவ்வளவு இழுக்கானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
நாளாந்தம் பத்திரிகைகளைப் புரட்டுகின்ற போது, கேரள கஞ்சா உட்பட போதைப்பொருள் பாவனை தொடர்பான செய்திகள் வராத நாளே கிடையாது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆனமடுவ பகுதியில் மூன்று பாடசாலை மாணவர்களிடம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 17 மற்றும் 18 வயதுடைய இந்த மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பதை எண்ணும் போது மனவேதனைதான் ஏற்படுகின்றது. பாடசாலை விடுமுறை வழங்கப்படவிருந்த நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முன்னரும் கூட இந்த மாணவர்கள் போதை மாத்திரைகளுடன் வந்ததாகத் தெரிய வந்துள்ளது.
போதைப்பொருளைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் குறுக்குவழியில் இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வந்துகொண்டே இருக்கின்றன. நமது நாட்டில் இப்படியொரு அபாயம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல.
கிராமப்புறங்களில் கஞ்சா பாவனை மேலோங்கிக் காணப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமே இந்த சீரழிவுக்குள் சிக்கி இருந்தார்கள். இன்று மாணவர்கள் கூட கஞ்சா பாவனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைச் சிறார்களை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய அவசரம் இன்று உருவாகியுள்ளது. ஆசிரியர்களுடன் இது விடயத்தில் பெற்றோரும் கண்காணிக்க வேண்டும்.
பழகும் நண்பர்கள், போகுமிடங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடனிருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் பிள்ளகைள் எங்கு போகிறார்கள்? யாரோடு பழகுகிறார்கள்? இரவு காலங்களில் எங்கெல்லாம் சுற்றித் திரிகிறார்கள் என்பதில் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பாடசாலைகளில், தனியார் வகுப்புகளில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் விழிப்புடனிருக்க வேண்டும். அதுவும் 15 வயதைத் தாண்டிய பிள்ளைகளின் தன்னிச்சை செயற்பாடுகளை நாளாந்தம் அவதானிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரையும் ஆசிரியர்களையும் சார்ந்துள்ளது. முன்பெல்லாம் நகர்ப்புறத்து பிரபலமான பாடசாலைகளில்தான் போதைப்பொருள் பாவனையால் மாணவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். இன்று அந்த நிலைமாறி முழுநாட்டிலும் கிராமங்களில் கூட இளம் சந்ததியினர் போதைக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கிராமப் புறங்களில், காட்டுப் பகுதிக்குள் நண்பர்களுடன் செல்லும் இவர்கள் போதையில் மூழ்கிப் போயுள்ளமை பல இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாக்களின் போது கூட மதுபானம், கஞ்சா உட்பட பல்வேறுபட்ட போதைப்பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.
இந்தப் பேரழிவிலிருந்து எமது இளைய சந்ததியை மீட்டெடுக்க வேண்டும். இளையோரின் வாழ்க்கை கருகிவிட இடமளித்துவிடக் கூடாது. இதற்கான பாரிய பொறுப்பைச் சுமந்திருப்பவர்கள் பெற்றோர்களாவர். போதைக்கு அடிமையாகும். எமது பிள்ளகைள் காலப் போக்கில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் கூட அகப்பட்டுக் கொள்கின்றனர். கடைசியில் அவர்களது எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு விடும்.
குறுகிய வழியில் பணம் தேட முனைவோரின் பிரதான வியாபாரமாக இன்று போதைப்பொருள் மாறியுள்ளது. எந்தவொரு நகரத்திலும் போதைப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அந்த இடங்கள் குறித்து பொலிஸார் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இதுவிடயத்தில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அரசியலோடு தொடர்புபட்ட பெரும்புள்ளிகளுக்கு போதை வியாபாரத்துடன் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அரசும், தொண்டு நிறுவனங்கள், பாதுகாப்புத்தரப்பு என்பனவும் ஒன்றுபட்டு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். பெற்றோரும், ஆசிரியர்களும் தமது பிள்ளைகள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைய வேண்டியது மிகப் பிரதானமானதாகும்.
Read more »

இரத்தக்கறை படிந்த பக்கங்கள் - இலங்கை முஸ்லிம் வரலாறு|

பிரித்தாளும் அன்றைய பிரித்தானிய அரசின் காலத்திலிருந்து, பிரித்தேயாளும் இன்றைய சிங்கள அரசின் காலம் வரை, இலங்கை முஸ்லிம் இனம் ஒடுக்கப்பட்ட வரலாற்றுப் பட்டியலை இயன்றளவு தொகுத்துள்ளேன்.


1896 - சிலாபம் கலகம் (முஸ்லிம் -கத்தோலிக்கர்)

1900 - அநாகரீக தர்மபாலவினால் தோற்றுவிக்கப்பட்ட ‘சிங்கள மகாபோதி சபை’ முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆரம்பித்தது.

1905.05.02 - சட்டத்தரணி அப்துல் காதர் என்பவர் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் (தொப்பியணிந்து) நீதிமன்றம் சென்றதால், நீதிபதியினால் நீதிமன்றிலிருந்து வெளியனுப்பப்பட்டார். ("துருக்கித் தொப்பி போராட்டம்" - இலங்கை முஸ்லிம்களின் முதலும் இறுதியுமான உரிமைப் போராட்டம்)

1915 - இலங்கை வரலாற்றில் அரசியல் ரீதியான முதலாவது மதக் கலவரம் கண்டியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடுபூராகவும் இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதாரம் முடக்கப்பட்டது.

1948 - இலங்கை பிரதமர் டி.எஸ். சேநாயக்க இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை பரம்பலை மட்டுப்படுத்த சிங்கள குடியேற்றங்களை முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்களில் அமுல்படுத்தினார்.

 1972 - மடவளை கலவரம்

1974 - மஹியங்கன  ‘பங்கரகம்மன’ எனும் முஸ்லிம் கிராமத்தில் கடைகள் பள்ளிவாயல்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.

1976 - இல் புத்தளத்தில் பள்ளிவாயில் புகுந்து ஏழு முஸ்லிம்களை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

1980 - கொம்பனித்தெரு பள்ளிவாயலில் ஒரு முஸ்லிம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1982  - காலி துவவத்தை’யில் முழுக்கிராமமே விரட்டியடிக்கப்பட்டது.

1985.08.07 - மன்னாரிலுள்ள அளவக்கைப் பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட படுகொலை

1985 - ஏறாவூரில் தமிழ்-முஸ்லிம் கலவரம்

1989 - சம்மாந்துறை தமிழ்-முஸ்லிம் கலவரம்

1989 - அறுப்பளை பள்ளி கலவரம்

1990.07.12 - புனித ஹஜ் கடமையை முடித்துக் கொண்டு  திரும்பிய  68 முஸ்லிம்களை குருக்கள்மடம் பகுதியில் புலிகள் வழிமறித்து கொன்று புதைத்தனர்.

1990.07.30 - அக்கறைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1990.08.01 - ('சிகப்புஆகஸ்ட்' ஆரம்பம்)
அக்கரைபற்றில் 8 முஸ்லிம்கள்  புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1990.08.03 - காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலை - முஸ்லிம்கள் இரவுத்தொழுகை நடாத்திக்கொண்டிருக்கும் பொழுது 25 குழந்தைகள் உட்பட 147 பேர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1990.08.05 - அம்பாறை முல்லியன்காட்டில், 17 முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1990.08.06 - அம்பாறையில் 33முஸ்லிம் விவசாயிகள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1990.08.12 - சமாந்துரையில் 4 முஸ்லிம் விவசாயிகள் புலிகளால்  படுகொலை செய்யப்பட்டனர்.

1990.08.12 - ஏறாவூர் படுகொலை - ஏறாவூர் எல்லைப்புற கிராமங்களுக்குள் புகுந்த  புலிகள்  36 பெண்கள், 60குழந்தைகள் உட்பட 116  பேரை படுகொலை செய்தனர்.

1990.08.13 - வவுனியாவில் 9 முஸ்லிம்கள் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

1990.08.15 - அம்பாறை அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றிற்க்குள் புகுந்த புலிகள் 9 முஸ்லிம்களை சுட்டுக் கொண்டனர்.

1990.09. - புலிகளால்
50இற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களும், வியாபாரிகளும் கப்பம் கேட்டு கடத்தப்பட்டனர் . கோடிக் கணக்கில் கப்பம் பெற்றபின் சிலர் விடுதலை செய்யப்பட, பலர் கொல்லப்பட்டனர்.

1990.10.-  "கறுப்பு ஒக்டோபர்" - வடக்கு முஸ்லிம்கள் 72000 பேர் உடுத்திருந்த உடையுடன் உடமைகளைல்லாம் கைவிட்டு சொந்த ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

1992.04.29 - அழிஞ்சிப்பொத்தான தாக்குதல் - புலிகளால் 56 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர்.

1992.07.15 - கிரான்குளத்தில் புலிகளால் மறிக்கப்பட்ட பஸ்ஸிலிருந்து 22 முஸ்லிம்கள் இறக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

1992.10 15 - பள்ளியகொடள்ள படுகொலைகள் -  புலிகளினால் அக்பர்புரம், அஹமட்புரம் ஆகிய கிராமங்களில் சுமார் 187 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - உக்ரஸ்பிட்டி கலவரம்

1997 - பேராதனை பள்ளி கலவரம்

1998 - கண்டி லைன் பள்ளி பிரச்சினை

1998 - கலகெதர-மடிகே கலவரம்

1998.05.02 - வெலிமட    கலவரம்

1998.05.08 - திக்குவெல்லை  கலவரம்

1999.02.14 - நொச்சியாகம கலவரம்

1999 - பன்னல அலபட வன்முறைகள்

1999 - மீயெல்ல கலவரம்

1999 - பதுளை ஹிஜாப் பிரச்சினை (தமிழ் -முஸ்லிம்)

2000.07.19 -  வெல்லம்பிட்டி கலவரம்

2000.08.17 - பள்ளேகம   கலவரம்

2000.09.16 - தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் (மர்மமான)விமான விபத்தில் உயிர் நீத்த நாள் - இலங்கை முஸ்லிம் மக்கள் மீண்டும் அநாதையாக்கப்பட்ட நாள்

2000.12.04 - திஹாரி  கலவம்

2000.12.15 - கொப்பேய்கன கலவரம்

2001.04.16 - வட்டெதனிய   கலவரம்

2001.04.20 - மாவனல்லை   கலவரம்

2001 - காலி-கட்டுகொடை கலவரம்

2002.07.31 -  கொட்றா முல்லை கலவரம்

2002.10.25 - மாளிகாவத்தை கலவரம்

2002.11.17 - மதுரங்குழி  கலவரம்

2002 - பேருவளை மோதல்கள் இடம் பெற்றன.

2005.12.05 - மருதமுனையில் அன்றிரவு 2 முஸ்லிம் மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

2006.08.04. - மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம் - வெளியேற்றத்திற்கு மூன்று நாட்கள் முன், புலிகள் இராணுவத்தை தாக்குவதற்காக மூதூர் முஸ்லிம் குடியிருப்புகளுக்குள் புகுந்து  மக்களை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதனால், அப்பாவி முஸ்லிம்களின் உயிர்களும், உடமைகளும் திட்டமிட்டு அழிக்கப்பட்டதோடு, ஊரைவிட்டு வெளியேறவும் நிர்பந்திக்கப்பட்டனர். பின்பு வெளியேறிக் கொண்டிருந்தவர்களையும் வழிமறித்து தங்கள் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று சுட்டுக் கொன்றனர் புலிகள். அதன்போது, இராணுவத்தினால் புலிகள் மீது நடாத்தப்பட்ட செல் தாக்குதலில் திட்டமிட்டபடி அகதி முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். பின்பு தப்பி ஓடியவர்கள் சதுப்பு நிலங்களில் சேற்றினுள் புதையுண்டு இறந்தனர்.

2009.03.10 - மாத்தறை அகுரஸ்ஸ'யில் மீலாதுன் நபிவிழா நிகழ்வில் புலிகளினால் தற்கொலைக் குண்டுத்  தாக்குதல் நடாத்தப்பட்டதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

2011.09. - அநுராதபுரம் மாவட்டம் ஒட்டுப்பள்ளம் பகுதியிலிருந்த பல நூற்றாண்டு பழமை வாய்ந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான இஸ்லாமிய பெரியாரின் அடக்கஸ்தலம் உள்ளிட்ட நினைவு சின்னங்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் இடித்து தகர்க்கப்பட்டது.

2011.11.09 - மட்டக்களப்பு கள்ளியங்காடு முஸ்லிம் கொலணியில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த 'பிர்தெளஸ்' பள்ளிவாயல்  'பிரம்மகுமாரிகள்' நிலையமாக மாற்றப்பட்டது.

2012 - முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வதை மட்டுமே குறியாகக் கொண்ட "பொதுபல சேனா" என்ற கடும்போக்கு இனவாத அமைப்பு அரசின் ஆசியுடன் உதயமானது.

2012 - மன்னார், முசலி முஸ்லிம் கிராமங்களின் மீள் குடியேற்றப் பிரச்சனை -  விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்டு,  அகதிகளாக்கப்பட்ட மறிச்சுக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குழி மற்றும் கொண்டச்சி முஸ்லிம்கள், யுத்தம் முடிந்த பின் தமது பிரதேசத்திற்க்கு மீள்குடியேற்றப்பட வேண்டிய நிலையில், குறித்த  பகுதிகளை அரசு வில்பத்து தேசிய சரணாலயத்துக்கு சொந்தமானது என வர்த்தமானியில் அறிவித்து, மக்களை மீண்டும் அகதிகளாக்கியது.

2012.04.20 - தம்புள்ள நகரில் அமைந்துள்ள ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் தாக்குதலுக்கு உள்ளானது. தம்புள்ள ரங்கிரி ரஜமகா விகாரையின் தலைமை மதகுரு இனாமலுவ சுமங்கள தேரரின் தலைமையிலான குழுவொன்று பேரணியாக வந்து இத்தாக்குதலை நடத்தியது.

2012.05.25 - தெஹிவளை கல்விஹாரை வீதியில் உள்ள தாருர் ரஹ்மான் பள்ளிவாசலை அகற்றுமாறு கோரி பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு பள்ளிவாசலை தாக்கும் முயற்சியும் மேற் கொள்ளப்பட்டது.

2012.05.28 - குருநாகல் மாவட்டம் ஆரிய சிங்களவத்தையில் அமைந்துள்ள உமர் இப்னு கத்தாப் குர்ஆன் மதரஸாவில் தொழுகை நடத்துவதை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.

2012.07.24: - குருநாகல் மாவட்டம் தெதுரு ஓயாகம தாருல் அக்ரம் தக்கியாவில் இரவு நேரத் தொழுகையை நிறுத்துமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு தொழுகை நடத்தவது நிறுத்தப்பட்டது.

2012.07.26 - கொழும்பு மாவட்டம் தெஹிவளை பீரிஸ் மாவத்தையிலுள்ள தாருல் அக்ரம் குர்ஆன் மத்ரஸாவில் தொழுகை நடாத்தவதை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக நிறுத்தியது.

2012.07.29 - கொழும்பு மாவட்டம் ராஜகரிய ஒபே சேகரபுரயிலுள்ள ஜாமிஉத் தாருல் ஈமான் பள்ளிவாசலில் இரவு நேரத் தொழுகை நடாத்துவதற்கு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டதோடு அங்கு தொழுகை நடத்துவது நிறுத்தப்பட்டது.

2012.08.30 - கொழும்பு மாவட்டம் வெல்லம்பிட்டி கொகிலாவத்தை பள்ளிவாசலினுள் நுழைந்த சில பௌத்தர்கள் பள்ளிவாசலை தாக்கப் போவதாக எச்சரித்தனர்.

2012.10.27 - அநுராதபுரம் மாவட்டம்  மல்வத்து ஓயா லேன் பள்ளிவாசலுக்கு பௌத்த தீவிர வாதிகளினால் தீவைக்கப்பட்டது.

2012.11.30 - கொழும்பு மாவட்டம் மஹரகம நாவின்ன ரஜமகா விகாரையில் முஸ்லிம்களுக்கு எதிரான பேரணியொன்று இடம்பெற்றது. கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளினால் பௌத்த மரபுச் சின்னங்கள் அழிக்கப்படுவதாக பொய் கூறியே இப்பேரணி இடம்பெற்றது.

2012.12.03 - கண்டி மாவட்டம் குண்டகசாலை விவசாய கல்லூரியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு வேண்டுமென்றே பன்றி இறைச்சி கறி பரிமாறப்பட்டது.

2012.12.08 - கண்டி மாவட்டம் கண்டி மாநகரத்தில் முஸ்லிம் வியாபரிகளுக்கெதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு கைபேசிகள் வழியாக எதிர்ப்பு குறுங்செய்திகளும் அனுப்பப்பட்டன.

2012 .12.23 - இரத்தினபுரி மாவட்டம் எம்பிலிபிட்டியவில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பௌத்த தீவிர வாதிகளினால் தாக்கப்பட்டனர். அதே இடத்தில் 24ஆம் திகதி முஸ்லிம்களுக்கெதிராக ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

2012.12.24  - பதுளை மாவட்டம் மஹியங்கனையில் அமைந்தள்ள பள்ளிவாசலை மீள் நிர்மாணம் செய்ய வேண்டாம் என்று பௌத்த தீவிரவாதிகளினால் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு துண்டுப் பிரசுரமும் வெளியீடு செய்யப்பட்டது.

2013.01.07 - அநுராதபுரம் மாவட்டம் மல்வத்து ஓயா லேனில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் செய்யப்பட்டது.

2013.01.07 - கொழும்பு மாவட்டம் சட்டக் கல்லுரிக்கு தெரிவான முஸ்லிம் மாணவர்களை குறைக்குமாறு கோரி கொழும்பு சட்டக்கல்லூரிக்கு முன்னால்  பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

2013 .01.19 - கொழும்பு மாவட்டம் மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பிரபல ‘நோலிமிட்’வர்த்தக நிலையத்தை மூடுமாறு பௌத்த மதகுருமார்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அதனை தாக்கி அழிப்பதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.

2013.01.20 - அநுராதபுர மாவட்டம் புதிய நகரத்தில் முஸ்லிம்களுக்கெதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதோடு துண்டுப்பிசுரமும் வெளியிடப்பட்டது. முஸ்லிம் ஹோட்டல்களில் சிங்களவர்களக்கென தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் இரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் ஆதலினால் முஸ்லிம் ஹோட்டல்களில் உணவருந்துவதை அவசியம் நிறுத்துமாறும் உண்மைக்கு புறம்பான செய்தி ஒன்று பரப்பப்பட்டது.

 2013.01.22 - கொழும்பு  புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்துப் பள்ளிவாசல்களும் ஜிஹாதின் பாசறைகளென பொது பலசேனா அமைப்பினால் எச்சரிக்கப்பட்டது.

2013.01.23: களுத்துறை மாவட்டம் பேருவளையில் அமைந்துள்ள முஸ்லிம் ஹோட்டலில் பௌத்த குருமார் தாக்குதலை மேற்கொண்டு சேதப்படுத்தினர்.

2013.01.24 - குருநாகல் மாவட்டம் குளியாபிட்டியில் முஸ்லிம்களுக் கெதிரான ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றது. இதன் போது பன்றியின் உருவத்தில் 'அல்லாஹ்' என்ற வரைந்து எடுத்துச் செல்லப்பட்டது.

2013.02.01 - கண்டி மாவட்டம் கண்டி 'சித்தி லெப்பை மாவத்தை' ( பெயர் பலகை மைபூசி அழிக்கப்பட்டு)‘வித்தியார்த்த மாவத்தை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

2013.02.07 - 2013ஆம் ஆண்டை’ஹலால்’ ஒழிப்பு ஆண்டாக பிரகடனப் படுத்தியுள்ளதாக பொது பலசேனா அமைப்பு அறிவித்தது. தமது செயற்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதற்கு 'இலங்கை ஜனாதிபதி ஆசிர்வாதம்' வழங்கியதாகவும் தெரிவித்தது.

2013.02.09 - குருநாகல் மாவட்டம் வரக்காபொலயில் பௌத்த மதகுருமார்களின் தலைமையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

2013.02.10 -  குருநாகல் மாவட்டம் நாரம்மல ஹொரம்பாவ பகுதியில் ஸுபஹ் தொழுகைக்காகச் சென்ற ஒருவர் தாக்கப்பட்டார்.

2013.02.11 - குருநாகல் மாவட்டம் இரம்புக்கனை பிரதேசத்தில் ‘ஹலால்’ எதிர்ப்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

2013 .02.11 - குருநாகல் மாவட்டம் நாரம்மல நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களுக்கு ‘பர தம்பியாவுக்கு மார்ச் மாதத்திற்குள் மரணம்’ என்னும் தலைப்பில் அச்சுறுத்தல் கடிதம் கிடைக்கப்பெற்றது. இக்கடிதம் பௌத்த அமைப்புக்களின் ஒன்றியம் என்னும் பெயரில் அனுப்பப்பட்டிருந்தது.

2013.02.12 - சிங்கள பௌத்தர்களை ‘இறப்பர் தோட்டத்திலுள்ள’ இறப்பர் மரங்களுக்கும் சிறுபான்மை முஸ்லிம்களை அத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறிய செடிகளுக்கு ஒப்பிட்டு பொது பல சேனா பகிரங்கமாக கருத்து தெரிவித்தது.

2013.02.13 - குருநாகல் மாவட்டம் நாரம்மல பொலிஸ் பரிவில் சியம்பலாகஸ்கொடுவ கிளின்பொலயில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நான்கு கடைகள் உடைக்கப்பட்டன.

2013.02.14 -  "எதிர்வரும் புத்தாண்டிற்கு முன்பு‘ஹலால்’ அங்கீகாரம் ஒழிக்கப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பௌத்த புரட்சி வெடிக்கும்" என அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்கயினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

2013.02.14 - கண்டி மாவட்டம் திகனப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிரான துண்டுப் பிரசுரம் பொது பலசேனா அமைப்பினால் விநியோகிக்கப்பட்டது.

 2013.03.04 - மஹர சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசல் மீதும் ஓப்பநாயக்க பள்ளிவாசல் மீதும்  இனந்தெரியாதோரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

2013.03.11 -   பொதுபலசேனாவின் சூழ்ச்சியினால் "ஹலால் உள்நாட்டுக்கு இல்லை .வெளிநாட்டுக்கு மட்டும்" என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையால் அறிவிக்கப்பட்டது.

2014.06.16 - அளுத்கம கலவரம் - பேரணி என்ற பெயரில் வலம் வந்த பொதுபலசேனா இனவாத அமைப்பினரால் அப்பாவி முஸ்லிகள் மீது மிலேச்சத்தனமாக  , பொலிஸார் முன்னிலையிலேயே தாக்குதல் நடாத்தப்பட்டது. 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 80ற்க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு ஆட்சிக் கவிழ்ப்புக்கே வித்திட்டே பெரும்கலவரம் இது என்பது குறிப்பிடத் தக்கது.

2014.12.05 -  திருக்கோவில் வட்டமடு பிரதேசத்தில் மூன்று முஸ்லிம் விவசாயிகள் ஒருசிலரால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

2015.02 22 - அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் அவரது சொந்த தொகுதியான பொலன்னறுவைக்குட்பட்ட ஒரு சிற்றூரான போகஹதமனயில்  குர்ஆன் மதரசா ஒன்று இனவாதிகளால் தரைமாக்கப்பட்டது.

2015.05.30  - அன்று கொழும்பு பொரலையில் அமைத்துள்ள ஜாமியுல் அல்பார் ஜும்ஆ மஸ்ஜித் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

2015.07.07 - அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள மணிகூண்டு கோபுர உச்சியில் திடீரென பௌத்த தூபி ஸ்தாபிக்கப்பட்டது. முஸ்லிம் மக்கள் ஊமை கண்ட கனவு போல இருந்தார்கள்.

2015.07.16 -  இப்பாமுகவ, பக்மீகொல்ல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு தராவீஹ் தொழுகைக்குச் சென்ற மூன்று இளைஞர்கள் வாலினால் வெட்டப்பட்டனர். இதன்போது இன்னும் மூன்று இளைஞர்கள் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டது.

2015.09.06 - ஹெம்மாத்தகமையில் SLTJ யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாற்று மத அன்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியில், இடைநடுவில் பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் தலையிட்டு நிகழ்ச்சியை நிறுத்தி கொலை அச்சுறுத்தல் விடுத்து அங்கிருந்த மார்க்க விளக்க புத்தகங்களையும் அபகரித்துச் சென்றனர்

2016.01.07 - வெல்லம்பிட்டி, பொல்வத்தை மஸ்ஜிதுல் நூர் பள்ளிவாசலில் இஷா தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடு திரும்பிய முஸ்லிம்கள் மீது “சிங்க லே” என கோஷமிட்டவர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினார்.

2016.03.13 - வத்தளை, வெலிசர 20 அடி பாதை வீதியில் மஸ்ஜித் நிர்மாணப் பணிகளுக்கு தடை உத்தரவு பிறபிக்கப்பட்டமை.

2016.03.16 - மகிந்தவின் ஆட்சி காலத்தில் பிரச்சினை ஏற்பட்டு சுமூகமாகத் தீர்க்கப்பட்ட பலாங்கொடை ஜீலானி (கூரகள) பள்ளிவாசலை இந் நல்லாட்சியில் அகற்ற வேண்டும் என நீதிமன்ற உத்தரவையும், பொலிசாரின் உத்தரவையும் மீறி இனவாத சிங்கள ராவய அமைப்பு ஆயுதங்களுடன் பிரவேசித்து அச்சுறுத்தல் விடுத்தனர்.

2016.05.28 -  கொழும்பு – கண்டி பிரதான வீதி, நெலுந்தேனிய பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

2016.06.04 - அம்பாறை நகரில் கூடிய பௌத்த பிக்குகள் மலேகாலனியில் புதிதாக கட்டப்பட்டு வந்த பள்ளிவாசல்களை தடை செய்தனர்.

2016.06.07 - தலதா மாளிகைக்கு 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி வாசலின் மினாரா (கோபுரம்) நிர்மாணப் பணிகள் தடை செய்யப்பட்டது.

2016.06.16 - வரகாபொல பள்ளிவாசலின் மினாரத்தை வரகாபொல தேவகிரி விகாரையை விட உயரமாக கட்டக்கூடாதென்று பெளத்தர்களால் பலத்த அச்சுறுத்தல் விடப்பட்டது.

2016.07.01 - அக்குரணை, அளவத்துகொடை பிரதேசத்தில் மல்கம்மந்தெனிய ஜும்மா பள்ளிவாசலுக்கருகில் முச்சக்கர வண்டியில் வந்த இனவாதிகள் பன்றியின் உடற்பாகங்களை வீசி விட்டு தப்பியோடினர்.

2016.07.16 - ஹபுகஸ்தலாவையில் அமைந்துள்ள அல் ஹாமிதியா அரபுக் கல்லூரியின் 3 பேஸ் மின்மானியும் (ட்ரான்ஸ்போர்மர்) தண்ணீர் கொள்கலனும் (பவ்சர்) இனவாதிகளினால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

2016.08.06 - பொரலஸ்கமுவ பள்ளிவாசலுக்குள் புகுந்த இனவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி பொருட்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

2016.08.08 - தெஹிவளை, பாத்தியா பள்ளிவாசலின் விஸ்தரிப்பிற்கு நல்லாட்சியில், பொலிசாரால் தடைவிதிக்கப்பட்டு முஸ்லிம்களின் ரமலான் மாத தாராவிஹ் தொழுகை கூட தடைப்பட்டமை.

2016.08.21 - அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மாநகர எல்லைக்கு உட்பட்ட புட்டம்பை மஸ்ஐிதுல் ஜலாலீயா பள்ளிவாசல் தமிழ் இனவாதிகளினால் தாக்கப்பட்டது.

2016.08.24 -  ஹிரியுல்ல கல்வி வலயத்திற்குட்பட்ட மும்மான முஸ்லிம் வித்தியாலயத்திற்க்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தைக் பெரும்பான்மை இனத்தவர்கள் கைப்பற்ற வேண்டும் எனக் கூறி இனவாதிகள் முஸ்லிம்களின் வியாபார ஸ்தலங்களை புறக்கணிக்குமாறு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்து , துண்டுப்பிரசுரங்களும் விநியோகித்தனர்.

2016.08.26 -  முஸ்லிம் ஊடகவியலாளர் (BBC மற்றும் சுயாதீன) பர்ஹான் நிசாமுத்தீன் காலி – தளாபிட்டிய, அப்துல் வஹாப் மாவத்தையில் வைத்து வாளால் வெட்டி தாக்கப்பட்டார்.

2016.09.05 - யாழ். பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

2016.09.12 - பெல்மடுல்ல, பஞ்சன்கொடவில் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று குர்பான் கொடுப்பது அன்று முதல் தடைசெய்யப்பட்டது.

2016.09.17 - கல்ஹின்ன பள்ளியின் மீதும் அதற்கருகிலுள்ள முஸ்லிம் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தி அவர்களுக்கு சொந்தமான வாகனங்களும் இனவாதிகளினால் சேதமாக்கப்பட்டன.

2016.09.22 - அளுத்கமையில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான மல்லிகாஸ் புடவை வர்த்தக நிலையம் தீயிட்டு சாம்பலாக்கப்பட்டது.

2016.10.02 - மாதம்பை முஸ்லிம்களின் காணிகளை சுவீகரிப்பு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2016.11.03 -   சின்ஹலே என்ற அமைப்பினர் பகிரங்கமாக ஊடகங்கள் முன்னிலையில் முஸ்லிம்களை கொலை செய்வோம் என அச்சுறுத்தல் விடுத்தனர்.

2016.11.04 - தெலியாகொன்ன பள்ளிவாசல் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

2016.11.06 - நிகவரெட்டிய பள்ளிவாசல் ஒன்றின் மீது 6 பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டது

2016.11.15 - தம்பலகாமம், முள்ளிப்பொத்தானை முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டது.

2016.11.15 - முஸ்லிம்கள் வாழும் பகுதியான மாளிகாவத்தை இரத்த ஆறாக ஓடும் என, ஞானசார எச்சரித்தான்.

2016.11.18 - இலங்கையிலிருந்து சிரியா சென்ற 32 முஸ்லிம்கள் ISIS அமைப்பில் இணைந்து கொண்டதாக நீதியமைச்சர் விஜயதாச பொய்யான குற்றச்சாட்டை பாராளுமன்றில் முன்வைத்தார்.
தப்லீக் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத், சுன்னத் வல்ஜமாஅத், ஜாமாதே இஸ்லாமி ஆகிய அமைப்புக்களையும் பகிரங்கமாக விமர்சித்தார்.

2016.11.19 - சிங்கள இனவாத இயக்கங்கள் பிரபல முஸ்லிம் வர்த்தக நிறுவனங்களான NOLIMIT, FASHIONBUG மற்றும் ETISALAT ஆகியவைகளுக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டு, முஸ்லிம்களின் வர்த்தகத்திற்க்கு எதிரான பேரணி ஒன்று நடாத்தப்பட்டது. அதன்போது கண்டி லைன் பள்ளியின் பெயர்ப்பலகை சேதமாக்கப்பட்டு பெளத்தகொடி ஏற்றப்பட்டதுடன்
துண்டுப்பிரசுரம் வெளியாகி சிலமணி நேரங்களில் FASHIONBUG தீக்கிரையானது.

2016.11.25 - களுத்துறை, மஹா ஹீனட்டியங்கல பிரதேச பள்ளிவாசல் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

2016.12.01-  திருகோணமலை பனிச்சங்குளம் சின்னப் பள்ளிவாசலுக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் 42 குர்ஆன் பிரதிகளை தீயிட்டு எரித்தனர்.

2016.12.06 - முல்லைத்தீவு வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தண்ணீரூற்று மு.ம.வித்தியாலயத்தில் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவிகள் பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

2016.12.06 - முள்ளிப்பொத்தான சிங்கள மகா வித்தியாலயத்தில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை எழுதுவது தொடர்பாக திடீர் என பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் பிரச்சனைப்படுத்தினர்.

2016.12.18 - பாணந்துறை பாலிகா பாடசாலையில் சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவிகள், மேற்பார்வையாளரால் பர்தா கழற்றுவதற்க்கு வற்புறுத்தப்பட்டதோடு, மறுநாள் பரீட்சைக்கு பர்தா அணியாமல் வரும்படியும் வலியுறுத்தப்பட்டது.

2016.12.29 - திருக்கோவில்  பிரிவிலுள்ள, பொத்தானையில் தொள்பொருள் ஆராய்ச்சிப் பிரதேசம் என, 250 வருடங்கள் பழமையான அமீருல் ஜப்பார் ஹமிதானி பள்ளிவாயல் பிரதேசம் பிரகடனம் செய்யப்பட்டு, வெளியார் எவரும் (முஸ்லிம்கள் கூட) பள்ளிவாசலுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டது.

2017.01.18 -  ஏறாவூர், தாமரைக்கேணியில் அக்ஸா மஸ்ஜித் எனும் சிறிய பள்ளிவாயல் உடைத்தெறியப்பட்டு தீவைக்கப்பட்டது.

2017.01.21 -  கண்டி, கெலிஓய பிரதேசத்தில் பள்ளிவாயல் கட்டவிருந்த (முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான) காணியில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தப்பட்டது.

2017.02.09 - தம்புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களை மூடுமாறு சிங்கள காடையர் குழுவொன்றினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு முஸ்லிம் கடைகள் மூடப்பட்டன.

2017.03.21 - பொலன்னறுவையில் முஸ்லிம் கொலனியில் நல்லமுறையில் இயங்கிக் கொண்டிருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான 150 அரிசி ஆலைகள் இழுத்து மூடப்பட்டன.

2017.03.22 -  கொழும்பிலிருந்து நொச்சியாகம வரை சென்ற பிக்குமார்கள் முஸ்லிம்களுக்கு பலவாறும் அச்சுறுத்தல் விடுத்தனர்.

2017.03.30 - முசலி பிரதேச முஸ்லிம்களின் வாழிடங்களை உள்ளடக்கி ஒரு லட்சம் ஏக்கர் காணியை வன இலாக்காவுக்காக ஒதுக்கி வர்த்தமானி வெளியிடப்பட்டது.

2017.04.18 - கொடப்பிட்டிய போர்வை நகரில் முஸ்லிம்களின் கடைகள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

2017.04.18 - காலி, கோட்டை இராணுவ முகாம் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள ஸியாரம் ஒன்றின் பாதுகாப்பு மதில் சேதமாக்கப்பட்டது.

2017.05.16 -
மூதூர் – செல்வநகர் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் காணியை, விகாரைக்கு சொந்தமான காணி என்று கூறி பிக்கு ஒருவர் அபகரித்துக் கொண்டார்.
பின், இனந்தெரியாத நபர்களினால் வீடுகளுக்கு  கல்வீச்சு  தாக்குதல் நடாத்தப்பட்டு,  அந்த பகுதியில் இருந்து சுமார் 1000-1200 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

2017.10.29 - கிரான் சந்தையில் வியாபாரம் செய்து வந்த  முஸ்லிம் அங்காடி வியாபாரிகள் அங்கிருந்து துரத்தப்பட்டனர்.

2017.11.17 -  காலி, கிந்தோட்டை வன்முறை - பெளத்த பிக்குகளின் தலைமையில் முஸ்லிம் மக்களின் மீது திட்டமிட்டு வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. பெருமளவிலான சொத்துக்களும், உடமைகளும் சேதமாக்கப்பட்டன.

2018.02.23 - சிங்கள காடையர்களால் அம்பாறை பள்ளிவாயல், மற்றும் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டன.

2018.03.05 - கண்டிக் கலவரம் (திகண-தெல்தெனிய) - சமூக வலைத்தளங்களின் உதவியுடனும், இனவெறி பிடித்த சில பெளத்தமதகுருக்களின் தலைமையிலும், பொறுப்பில்லாத பாதுகாப்பு படையின் கண்காணிப்புடனும் கண்டி முஸ்லிம்கள் மீதும்  அவர்களின் சொத்துக்கள், பள்ளிவாசல்கள் மீதும் வெறித்தனமாக தாக்குதல் நடாத்தப்பட்டது.

( தொடரும்...? )
Read more »

Tuesday, April 10, 2018

சமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக கல்விமுறை மாற்றமடைய வேண்டும்

கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாகும். கல்வியை வழங்குவதில் சமூகத்தின் பங்கும் முக்கியமானதாகும்.கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி சமூகத்திலே மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு கல்விக்கு உள்ளது.
சமூக வாழ்க்கைக்குப் பொருத்தமானவற்றைக் கற்பதில் ஈடுபடுகின்ற சமூகச்செயன்முறையே கல்வியாகும். இதனடிப்படையில் கற்றலுக்கு அத்திவாரமிடுகின்ற இடம் என்ற வகையில் பாடசாலைக்கு பிரதான இடமுண்டு.சமூகமாற்றத்திற்கு ஆசிரியர்களே பிரதான காரணமாக அமைகின்றனர். ஆசிரியர்களால் மட்டுமே கல்விமூலம் மாற்றத்தினை ஏற்படுத்தவும், அதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் நல்ல சமூகப்பிரஜைகளை உருவாக்கவும் முடியும்.
பிள்ளையானது பாடசாலைக் கற்றலில் தான் பெற்ற அறிவினைக் கொண்டு சூழலில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணயாகக் கல்வியே காணப்படுகின்றது. அத்துடன் நாட்டில் ஏற்படும் பொருளாதார அபிவிருத்திக்கேற்ப கல்விக்கான செலவினங்களும் மாற்றமடையும் தன்மையுடையனவாக அமைகின்றன.குறிப்பாக இதுவரை காலமும் இலங்கையில் கல்விக்கான நிதி 3.5 சதவீதமாக காணப்பட்டு வந்தமையும் 2017ம் ஆண்டு முதல் 7.5சதவீதமாக உயர்த்தப்பட்டதையும் காணமுடிகிறது.
இலங்கையில் இலவசக்கல்வி நடைமுறையில் உள்ளது. தரம் - 11 வரை கட்டாயக்கல்வி என்ற முறையும் காணப்படுகின்றது. இத்தகைய தன்மையினால் வறிய மாணவர்களும் பொருளாதாரப் பிரச்சினைகளின்றி தமது கற்றலை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போதும் கல்விக்கான நோக்கங்களும் மாறுபடுகின்றன.குறிப்பாக மனனம் செய்யும் கல்வி, ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி என கற்றல், கற்பித்தல் முறைமைகள் காலத்தினதும் சமூகத்தினதும் தேவைக்கேற்ப மாற்றமடைந்து வருகின்றன.
பாடசாலைக்கற்றலில் மாணவர்கள் அரசியல் தொடர்பான விடயங்களைக் கற்கும் போது அது தொடர்பான தெளிவு சமூகத்திற்கும் சென்றடைகின்றது.குறிப்பாக க.பொ.த. உயர்தரத்திலே கலைப்பிரிவில் அரசியல் விஞ்ஞானம் என்ற பாடத்தைக்கற்றல்.இவ்வகையில் கற்றலினூடாக சமூகமாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
மற்றும் தொழிநுட்பவியல்சார் கல்வியும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகிப்பதனை அவதானிக்க முடிகின்றது. கணினி, இணையம் போன்ற தொழிநுட்பங்களின் ஊடாக ஒவ்வொருவரும் பலவிடயங்களைக் கற்கின்றனர்.இதற்கு தொழிநுட்பவியல்சார் கருவிகளை எவ்வாறு உபயோகிப்பது தொடர்பான அறிவு கல்வி மூலம் ஏற்படுத்தப்படுகின்றமை முக்கிய விடயமாகும். உதாரணமாக தகவல் தொழிநுட்பம் எனும் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும்,பல்கலைக்கழகக் கல்வியிலும் பிரதானமாக அமைகின்றது. இதனால் ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான விடயங்களை இணையத்தில்தேடிக் கற்க எத்தனிக்கின்றனர். இத்தகைய தொழிநுட்ப வளர்ச்சியானது சமூகத்தினிடையே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மிகவேகமாக மாறிவரும் சமூகத்தில் ஆங்கிலமொழி பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. தொழில் ரீதியாகவும் வேறு தேவைக்காகவும் மிக முக்கியமாகக் கருதப்படுவது ஆங்கில மொழியாகும்.குறிப்பாக நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது ஆங்கில அறிவு எத்தகைய மட்டத்தில் உள்ளது என்பதனைப் பொறுத்தே வேலை வழங்குகிறார்கள். ஆங்கிலமொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை மையமாகக் கொண்டு இலங்கையின் கல்வி திட்டங்களிலும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிமனிதனை சமூக வினைத்திறன் கொண்டவனாக மாற்றுவதற்கு தொழிற்கல்வி அவசியமானதாக அமைகின்றது. சமூகத்தில் ஒருவரது தொழிலினைக் கொண்டே அவரது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தொழில் பற்றிய கல்வி அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகக் காணப்படுகின்றது. இவ்வகையில்,தொழிற்கல்வி தொடர்பாக இலங்கையில் பல​வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தொழிற்பாடங்கள் கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை, வாழ்க்கைத்தேர்ச்சி, விவசாயம், தொழில்நுட்பவியல் போன்ற பாடங்கள் அறிமுகம் என்பன அவற்றில் சிலவாகும்.
பாடசாலையை விட்டு நீங்கியவர்களை இணைத்து தொழிற்பயிற்சிகளை வழங்கல், தொழிநுட்பக் கல்லூரிக் கற்கை நெறிகள் என்பனவும் இவற்றில் அடங்குகின்றன.
இவ்வாறு அனைவரும் தொழிலினைப் பெற்றுக் கொள்கையில் கல்வியின் மூலம் சமூகம் மாற்றமடைவதனைக் காண முடிகிறது.
இனம், நிறம், சமூக நிலைமை என்பவற்றைக் கவனத்திற் கொள்ளாது வயது, திறமை, நுண்ணறிவு என்பவற்றில்சமவாய்ப்பான கல்வியை வழங்குதல் ஜனநாயக கல்வியாகும். இலங்கையில் இதற்கான நடவடிக்கைகளாக இலவசக் கல்வி,இலவச சீருடை,இலவசப் பாடநூல்,இலவச மதிய உணவு,புலமைப் பரிசில்கள் போன்றவை இருப்பதோடு கல்வியானது எல்லோருக்கும் உரித்துடையதாக பரவலாக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்திலே ஆண்களை விட பெண்கள் கல்வித்தரத்திலே முன்னிலை வகிப்பதனை காண முடிகின்றது.இது கல்வியினால் ஏற்பட்ட சமூக மாற்றமாகவே இனங்காணப்படுகின்றது. இவை தவிர தொலைக்கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, விழுமியக்கல்வி போன்றவற்றின் மூலமாகவும் சமூக மாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
ஒட்டுமொத்தமாக உற்றுநோக்குகின்ற போது கல்வி மூலம் ஏற்படுத்தப்படும் சமூகமாற்றமானது நிரந்தரமானதாக உள்ளதோடு மட்டுமல்லாமல் கற்றலினால் ஏற்படும் அறிவானது பல சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமைந்து விடுகின்றது என்பதில் ஐயமில்லை.
ஜெ. ஜெயரேகா
கல்வியியல் துறை சிறப்புக்கற்கை, கிழக்குப் பல்கலைக்கழகம்
Read more »

அஞ்சலோ மெத்திவ்ஸ் பந்துவீச மாட்டார் தேர்வுக் குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய்

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கிரஹம் லெப்ரோய் வழங்கிய விசேட செவ்வியில், அனுபவமிக்க வீரர்கள் தொடர்ந்து உபாதைகளுக்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. மெத்திவ்ஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகிய வீரர்கள் அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக, மெத்திவ்ஸ் தொடர்ந்து தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்து வருகின்றார். இதனால் முக்கிய போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் அவர் தவறவிடுகின்றார். இதனைக் கருத்திக் கொண்டு மெதிவ்ஸ், இனிவரும் போட்டிகளில் பந்துவீச மாட்டார். மாறாக, இனிவரும் காலங்களில் மெதிவ்ஸ் முழுநேர துடுப்பாட்ட வீரராக மாத்திரம் செயற்படுவார் என லெப்ரொய் தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் 2ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4 அணிகள் பங்கேற்கும் மாகாணங்களுக்கிடையிலான முதல்தர கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதில் கண்டி அணியின் தலைவராக இலங்கை ஒரு நாள் மற்றும் ரி20 அணிகளின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் நியமிக்கப்பட்டார். எனினும், மெதிவ்ஸின் உபாதை பூரணமாக குணமடையாத காரணத்தினால் முதல் 2 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை.
இந்நிலையில், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கிடையிலான 3ஆவதும், இறுதியுமான போட்டியில் மெத்திவ்ஸ் கண்டி அணிக்காக விளையாடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2013 முதல் 2016 வரையான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக அதிகளவான போட்டிகளில் விளையாடிய ஒரேயொரு வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட அஞ்சலோ மெத்திவ்ஸ், கடந்த 2 வருடங்களாக அடிக்கடி ஏற்படுகின்ற உபாதைகள் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இதன் காரணமாக தனது தலைமைப் பதவியையும் மெதிவ்ஸுக்கு இராஜினாமா செய்ய வேண்டி ஏற்பட்டது.
இந்நிலையில், இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட சந்திக்க ஹத்துருசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க மெத்திவ்ஸ், 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை ஒரு நாள் மற்றும் ரி20 போட்டிகளுக்கான அணித் தலைவராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனையடுத்து பங்களாதேஷில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேயுடனான போட்டியின் போது மெத்திவ்ஸின் தொடை எலும்பு பகுதியில் மீண்டும் உபாதை ஏற்பட்டது. இதன் காரணமாக பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் எஞ்சிய அனைத்து போட்டிகளிலிருந்தும் அவர் விலகிக்கொண்டார்.
இதன்பிறகு கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற சுதந்திர கிண்ண முத்தரப்பு ரி 20 தொடரிலும் அவருக்கு விளையாட முடியாமல் போனது.
ஏற்கனவே கடந்த வருடம் ஏற்பட்ட உபாதைகளின் பின்னர், அவர் அணிக்கு திரும்பியவுடன் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் நான்காம் இடத்தில் நிரத்தரமாக ஆடும் வீரராக மெத்திவ்ஸ் செயற்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், தொடர் உபாதைகள் அவருக்கு அவ்வாறு நிரந்தரமாக அணியில் இடத்தைக் கொடுப்பதற்கு தடையாக இருந்தது.
எது எவ்வாறாயினும், எதிர்வரும் ஜுன் மாதம் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அஞ்சலோ மெத்திவ்ஸ் பங்கேற்பாரா என்பது மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீர்மானிக்கப்படும் என தேர்வுக் குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Read more »

இனவாதப் பொறியினுள் சிக்கித் தவிக்கும் தென் மாகாண முஸ்லிம் கல்வி. தென் மாகாண முஸ்லிம் கல்வியையும் பேரினவாதம்

இனவாதப் பொறியினுள் சிக்கித் தவிக்கும் தென் மாகாண முஸ்லிம் கல்வி.
         தென் மாகாண முஸ்லிம் கல்வியையும் பேரினவாதம் விட்டுவைக்கவில்லை.சகல தேசிய மட்டப் பரீட்சைகளிலும் மாகாண,மாவட்ட முதலிடங்களை தென் மாகாணம் தனதாக்கிக் கொள்கிறது.எனினும் தென் மாகாண தமிழ்க் கல்வியும் முஸ்லிம்களது கல்வியும் பாதாளத்தை நோக்கி  நகர்கிறது.
     தற்போதைய மாகாணக் கல்வி அமைச்சர் சன்திம ராசபுத்ர முஸ்லிம் பாடசாலைகளுக்கு எவ்வித மானிட,பௌதீக வளங்களும் ஒதுக்கப்படாமலிருக்க வழி செய்வதோடு வளமின்றிக் கற்கும் எமது மாணவர்களின் அடைவாலும் புகழ்மாலை சூட்டிக் கொள்கிறார்.இயல்பாகவே முஸ்லிம் விரோதப் போக்குக் கொண்ட இவர் இவ்வாறு முஸ்லிம்களைப் புறக்கணிக்க தான் மிக நேசித்த ராஜபக்ஷைகளை வீட்டுக்கு அனுப்பியவர்களுக்கு புகட்டும் நல்ல பாடமாகவும் கருதலாம்.
     2015ஆம் ஆண்டு தமிழ் மொழிப் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள விண்ணப்பம் கோரி,பரீட்சைக்கு அழைக்கப்பட்டு நியமனத்தில் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக புறக்கணிக்கப்பட்ட 39தென் மாகாண பட்டதாரிஙளில் 18ப்பேர் நியாயம் கோரி வழக்குத் தொடர்ந்திருக்கின்றார்கள்.ராசபுத்திரையின் இச் செயற்பாடுகள் இனவாதம் என்பதைத் தாண்டி நியாயத்துக்குட்படுத்த முடியாதவை.
    தென் மாகாண அனைத்து கல்வி சார் இடமாற்றங்களும் அமைச்சரின் உத்தரவின்றி செயற்படுத்த முடியாதவை.இதனால் பல ஆசிரியர்கள் 8,9 வருடங்களாகக் கஷ்டப் பிரதேசங்களில் துன்புறுகின்றனர்.இதற்கொரு தீர்வாக ஏனைய மாகாணங்களில் இல்லாத இடமாற்றக் கொள்கைக்குப் புறம்பான "ஜங்கம சேவா"எனும் நடமாடும் சேவை மூலம் தகுதிபெற்ற அனைவருக்கும் அமைச்சரின் பூரண கண்கானிப்பில் இடமாற்றம் வழங்குவது சில வருடங்களாகவுள்ளவழமை.இச் சேவை சென்ற கிழமை மாகாணம் முழுதும் உள்ளடக்கியதாக வெவ்வேறு இடங்களில் இடம் பெற்றது.இச் சேவைக்கு தகுதிக்கு மேல்தகுதி பெற்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களும் அழைக்கப்பட்டு இடமாற்றம் வழங்குவதில் புறக்கணிக்கப்பட்டனர்.அனைத்து பெரும்பான்மை ஆசிரியர்களுக்கும் அவர்களது பிரச்சினைகள் செவிமடுக்கப்பட்டு இடமாற்றம் வழங்கப்பட்டாலும் முஸ்லிம் ஆசிரியர்கள் எழுப்பிவைக்கப்பட்டு அமைச்சரால் இழிவுக்குள்ளாக்கப்பட்டார்கள்.இனவாதத்தைக் கக்கிய அமைச்சர் பட்டதாரிகளால் போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறச் செய்துவிட்டுவருமாறும் இல்லையென்றால் எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் இடமாற்றம் செய்ய முடியாததாகவும் கடிந்துகொண்டார்.இவ்வாறான புறக்கணிப்பால் ஆசிரியர்கள் தொழிலை விட்டுச் செல்வதும் தென் மாகாணத்தில் இடம்பெறுகிறது.
   1977 இல் மதிப்பிற்குரிய பதியுதீன் மஹ்மூத் அவர்களால் வழங்கப்பட்ட முஸ்லிம் ஆசிரியர் நியமனமே முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு வித்திட்டது.எனினும் தற்போதைய தென் மாகாண முஸ்லிம் கல்வி நிலைமை நாகப் பாம்புக்கடித்து தடியை உடைத்துக் கொண்டதாகி விடுமோ என அஞ்சத் தோன்றுகிறது.
    ஏனைய சில மாகாணங்களில் வெவ்வேறாக தமிழ்,முஸ்லிம் கல்வி அமைச்சர்களிருந்தாலும் தென் மாகாண சபைக்கு ஒரு முஸ்லிம் உறுப்பினரேனும் இல்லாமை பாரிய குறையாகும்.இருக்கின்ற மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் கௌரவ மதனியா கலீலும் கூட சாதரண   கிளாக்குக்கு இருக்கிற அதிகாரமுமின்றி செயற்படுவதோடு ஓய்வுக்கு முன் கல்விக் கல்லூரி நியமனங்களைக் கூட சரியாகப் பங்கிடப் படாமை விமர்சனத்துக்குரியது.பலமான எதிர் நடவடிக்கைகள் முஸ்லிம் தலைவர்களால் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளப்படாதவரை தென் மாகாண  முஸ்லிம் கல்வி சிக்கிய பொறிக்குள்தான்.
x
Read more »

Monday, April 9, 2018

நீங்கள் கூகுள் பயனாளியா? கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு.!கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் யுஆர்எல்-களை பயனர்கள் ஐஓஎஸ், ஆன்ட்ராய்டு அல்லது இணையத்தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ள முடியும். ஏப்ரல் 13ம் திகதி முதல் தற்சமயம் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் சேவையை பயன்படுத்துவோர் மட்டும் ஒரு வருடத்திற்கு புதிய சிறு லின்க்-களை உருவாக்க முடியும் என மென்பொருள் பொறியாளரான மைக்கேல் ஹெர்மான்டோ தனது வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிறிய லின்க்களில் தொடர்ந்து சேவையை பயன்படுத்த முடியும். அந்த வகையில் மார்ச் 30, 2019 வரை இந்த சேவைகள் சீராக இயங்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தில் பிரபல சேவையாக இருக்கும் கூகுள் யுஆர்எல் ஷார்ட்னர் 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
Read more »

பேஸ்புக் இணைய உலாவியின் மற்றுமொரு வசதி விரைவில் ...!

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி விரைவில் வழங்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
பேஸ்புக்கில் மார்க் சூக்கர்பெர்க் சில பயனர்களுக்கு அனுப்பிய குறுந்தகவல்கள் அழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், அனுப்பிய குறுந்தகவல்களை திரும்ப பெறும் வசதி அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது.
குறைந்தகவல்களை திரும்ப பெறும் புதிய வசதி அனைவருக்கும் வழங்கப்படும் வரை மார்க் சூக்கர்பெர்க் அனுப்பிய குறுந்தகவல்கள் எதையும் அழிக்கப்பட மாட்டாது என பேஸ்புக் தெரிவித்துள்ளது. குறுந்தகவல்களை அழிக்கும் வசதி வழங்குவது குறித்து பலமுறை விவாதிக்கப்பட்டது. 
மேலும் இந்த வசதியை மெசன்ஜர் செயலியின் என்க்ரிப்டெட் வெர்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. இதில் பயனர் குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட்டு குறுந்தகவல் அனுப்பினால் சரியான நேரத்தில் அனுப்பிய குறுந்தகவல் அழிக்கப்பட்டு விடும். குறுந்தகவல்களை அழிக்கும் வசதி அனைவருக்கும் வழங்குவோம். எனினும் இதற்கு சில காலம் தேவைப்படும் என பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்படும் ரகிய அம்சம் கொண்டு அனுப்பிய குறுந்தகவல்கள் தானாக அழிக்கப்பட்டு விடும். இதற்கான கால அளவு குறைந்தபட்சம் 5 நொடிகளில் இருந்து அதிகபட்சம் 24 மணி நேரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அம்சம் மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இது எவ்வாறு வேலை செய்யும் என்பது உறுதி செய்யப்படவில்லை. 
இதுவரை தனது சேவைகளில குறுந்தகவல்களை திரும்ப பெற இருவித அம்சங்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்கள் அனுப்பிய குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அவற்றை அழிக்க வேண்டும். எனினும் அழிக்கப்பட்ட குறுந்தகவல் உங்களின் குறுந்தகவல் அழிக்கப்பட்டு விட்டது (Your message has been deleted) என்ற வார்த்தையாக மாற்றப்படும். இன்ஸ்டாகிராமில் இந்த அம்சம் குறுந்தகவலை பயனர் பார்க்காத வரை அழிக்க முடியும்.
Read more »

சிரியாவில் மற்றொரு இரசாயன தாக்குதலில் 70 பேர் உயிரிழப்புசிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் எஞ்சி இருக்கும் கடைசி நகரான தூமாவில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இரசாயன தாக்குதல் ஒன்றில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகம் உயிரிழந்திருப்பதாக அரச எதிர்ப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வைட் ஹெல்மட் மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
“எழுபது பேர் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து மூச்சுத்திணறலால் பதிக்கப்பட்டுள்ளனர்” என்று வைட் ஹெல்மட் குழுவின் தலைவர் ரயெத் அல் சலேஹ் குறிப்பிட்டுள்ளார். பலரும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளோரின் வாயு மற்றும் அடையாளம் காணப்படாத வாயு தூமாவில் வீசப்பட்டதாக அல் சலேஹ் குறிப்பிட்டார்.
“வைட் ஹெல்மட் தன்னார்வ பணியாளர்கள் மக்களுக்கு உதவ முயன்றபோதும், பெரும்பாலான வாகனங்கள் சேவைக்கு சென்றிருக்கும் நிலையில் மக்களை ஓர் இடத்தில் இருந்து கால் நடையாக மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லவே எம்மால் முடிந்தது” என்று அவர் கூறினார்.
இதில் பீப்பாய் குண்டுகள் மற்றும் வான் தாக்குதலில் இருந்து தப்ப நிலவறையில் ஒளிந்திருந்த ஒட்டுமொத்த குடும்பமும் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக வைட் ஹெல்மட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன தாக்குதல் உறுதி செய்யப்பட்டால் சிரியாவுக்கு எதிராக சர்வதேச பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. எனினும் இதனை இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்று நிராகரிக்கும் சிரிய அரசு, சிரிய இராணுவம் நச்சு வாயுவை பயன்படுத்துவதாக கூறுவது ‘கேலியானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
சிரிய உள்நாட்டு யுத்தத்தில் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இரசாயன தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பதிக்கப்பட்டிருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘நகரில் பெரும்பகுதி அழிந்துவிட்டது’
அரச ஆதரவு படை மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தூமா நகர் மீது வான் மற்றும் தரை வழியாக உக்கிர தாக்குதலை நடத்தியது. கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் எஞ்சி இருக்கும் கடைசி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி இதுவாகும்.
சிரியாவின் அரச செய்தி நிறுவனமான சானா வெளியிட்ட செய்தியில், தூமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயிஷ் அல் இஸ்லாம் போராட்டக் குழு வீசிய ஷெல் குண்டுகளுக்கு பதில் நடவடிக்கையாக 10 நாள் அமைதியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஷெல் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டு பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சானா செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதனை ஜெயிஷ் அல் இஸ்லாம் மறுத்துள்ளது.
“உக்கிர வான் தாக்குதலுக்கு முகம்கொடுத்து வரும் தூமாவின் பெரும் பகுதி அழிவடைந்துள்ளது” என்று அந்த நகரின் குடியிருப்பாளரும் மருத்துவ தன்னார்வ பணியாளருமான மோயத் அல் தைரானி அல் ஜஸீராவுக்கு குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை வழங்குவதில் மருத்துவர்கள் நெருக்கடியை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நகர் மீது கிளோரின் பீப்பாய் குண்டு வீசப்பட்டதை அடுத்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 1,000க்கும் அதிகமானவர்களை நாம் சந்தித்துள்ளோம். இந்த எண்ணிக்கை இதனை விடவும் அதிகரித்து வருகிறது” என்றும் கூறியுள்ளார்.
அரச எதிர்ப்பு குழுவின் தூமா மருத்துவ மையம் பாதிப்பு குறித்த புகைப்படங்களை சமூகதளத்தில் பதவேற்றியுள்ளது. சிகிச்சை பெறும் மக்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட இறந்தவர்களில் உடல்கள் அந்த புகைப்படங்களில் காணப்படுகின்றன.
நச்சு வாயு தாக்குதலின் அறிகுறிகளை காட்டும் சிகிச்சை பெறுபவர்களின் வீடியோக்களை மீட்பு பணியாளர்களும் வெளியிட்டுள்ளனர். சிலரது வாய் மற்றும் மூக்கினால் வெள்ளை நுரை கக்குவதையும் காண முடிகிறது. கிளோரின் தாக்குதலின் அறிகுறிகளில் இருமல், மூச்சுத் திணறல், சளி சவ்வுகளின் தீவிர எரிச்சல் ஆகியவை உள்ளடங்கும்.
போதிய மருத்து உதவி இல்லை
தூமா நகரில் ஒருசில மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களே இருப்பதாக சிரிய அமெரிக்கர் மருத்து சம்மேளனத்தின் தலைவர் அஹ்மத் தரக்ஜி குறிப்பிட்டுள்ளார். “இவர்கள் தூமாவில் அதிக எண்ணிக்கையான பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்ட தரக்ஜி, தூமாவில் தற்போது தங்கி இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் பீப்பாய் குண்டுகள் மற்றும் ஷெல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெற நிலவறைகளில் அடைக்கலம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.
“கிளோரின் மற்றும் அது போன்ற இராசாயனங்களை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தஞ்சமடைந்திருக்கும் நிலவறைகளிலும் ஊடுருவுகின்றன. அவை மக்களை மூச்சுத்திணற வைப்பதாலேயே உயிரிழப்பு அதிகமாகக் காரணம்” என்று அவர் மேலும் கூறினார். அரச எதிர்ப்பாளர்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக சிரிய அரசு அண்மைய ஆண்டுகளில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த போதும் அதனை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
‘100,000 பேர் சிக்கியுள்ளனர்’
சிரிய உள்நாட்டு யுத்தத்தில் அண்மைய ஆண்டுகளில் சிரிய அரச படை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. எனினும் கிழக்கு கெளத்தாவில் கிளர்ச்சியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. எனினும் கடந்த நான்கு அண்டுகளாக இந்த பிராந்தியத்தை அரச படை முற்றுகையில் வைத்திருப்பதால் இங்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதோடு மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் ரஷ்ய இராணுவத்துடன் இணக்கத்திற்கு வந்தன. இதனால் இங்கிருந்து 19,000 பேர் வரை மற்றொரு கிளர்ச்சியாளர் பகுதியான இதிலிப்பை நோக்கி சென்றுள்ளனர்.
இவர்களில் பைலக் அல் ரஹ்மான் மற்றும் அஹ்ரார் அல் ஷாம் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் குடியிருப்பாளர்களும் இந்த பிராந்தியத்தில் இருந்து இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
இந்த வெளியேற்றம் பல வாரங்கள் இடம்பெற்ற உக்கிர வான் தாக்குதலை அடுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகும் என்று கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தூமா நகரில் தற்போதும் எந்த உதவியும் இன்றி 100,000க்கும் அதிகமானவர்கள் சிக்கி இருப்பதாக அந்த நகரின் முன்னாள் குடியிருப்பாளரான ஹனான் ஹலிமாஹ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அரச படையின் தாக்குதலால் இந்த நகர் பேரழிவை சந்தித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Read more »

டெங்கு நோய் விழிப்புணர்வு இடைவிடாமல் தொடரட்டும்!நாடெங்கும் உள்ள அரசாங்க பாடசாலைகளில் டெங்குநோய் ஒழிப்பு வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு வியாதி பரவுகின்ற வீதம் தற்போது ஓரளவு குறைந்திருப்பதற்குக் காரணம் நாட்டில் பரவலாக நிலவிய வரட்சி ஆகும்.
மழை பெய்யாததால் நுளம்புகளின் பெருக்கம் குறைந்துள்ளது.அண்மைக் காலமாக டெங்கு நோயால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன.ஆனால் சமீப தினங்களாக ஆங்காங்கே மழை பெய்வதால் டெங்கு ஆபத்து மீண்டும் அதிகரிக்கக் கூடும்.
டெங்கு நோய் ஆபத்து ஒருபோதுமே முற்றாக நீங்கி விடுவதில்லை. ஓரிரு நாட்கள் மழை பெய்யத் தொடங்கியதும் டெங்கு நோய் மீண்டும் நாட்டில் தீவிரமடையத் தொடங்கிவிடும். எனவே டெங்கு வியாதி ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கின்ற இவ்வேளையில், டெங்கு வேலைத் திட்டம் பாடசாலைகளில் முன்னெடுக்கப்படுவது சிறப்பானதாகும்.
இந்நோயினால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்ற பிரதேசம் மேல்மாகாணம் ஆகும். மேல் மாகாணத்தில் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மாத்திரம் இதற்குக் காரணமல்ல. நீர்தேங்கி நிற்கக்கூடிய வடிகான்கள் மேல்மாகாணத்தில்தான் அதிகம். எனவே டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பான சூழலாக மேல்மாகாணம் காணப்படுகின்றது. அது மாத்திரமன்றி மக்கள் நெருக்கமாக வாழ்வதன் காரணமாக தொற்றுநோய்கள் இலகுவாக பரவி விடுகின்றன.
கடந்த வருடத்தில் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்திருந்தமை நினைவிருக்கலாம். இந்நோயினால் மரணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு எதிர்வரும் காலத்தில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
டெங்கு நுளம்புகள் பெருக்கமடைவது எமது சூழலுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தாங்கள் வாழ்கின்ற சுற்றாடலை துப்புரவாக வைத்திருந்தால் நுளம்புகள் பெருகுவதற்கு வாய்ப்பே இருக்காது.
டெங்கு நுளம்புகள் சுத்தமான தண்ணீரில் மாத்திரமே முட்டையிடக் கூடியவை. ஆறுகள், குளங்களில் அவை முட்டையிடுவதில்லை. நீரோட்டம் இல்லாமல் தேங்கி நிற்கின்ற தண்ணீரிலேயே டெங்கு நுளம்புகள் முட்டையிடுகின்றன.
சிரட்டைகள், பழைய டயர்கள், யோக்கட் குவளைகள் போன்றவற்றுக்குள் காணப்படுகின்ற மழை நீரிலேயே நுளம்புகள் கூடுதலாக முட்டையிடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கிணறுகளிலுள்ள சுத்தமான தண்ணீரிலும் அவை முட்டையிடுகின்றன.
எனவே எமது சுற்றாடலில் சிறுசிறு இடங்களில் கூட எங்காவது தண்ணிர் தேங்கி நிற்பதற்கு இடமளிக்கலாகாது. அத்துடன் கிணறுகளை நுளம்பு வலையினால் மூடி வைப்பதும் நுளம்புகளின் பெருக்கத்தைக் குறைப்பதற்கு பெருமளவு உதவுகின்றது.
டெங்கு நுளம்புகள் தற்போது மிகவும் வீரியமடைந்து விட்டன. மழைநீர் தேங்கியிருக்கும் சிறுசிறு பாத்திரங்களில் மாத்திரமே இந்நுளம்புகள் முட்டையிடும் என்றும் கூற முடியாதிருக்கின்றது. வாழை மரம், அன்னாசிச் செடி, கற்றாளைச் செடி போன்றவற்றின் தண்டு இடுக்குகளில் தேங்கியிருக்கின்ற மழைநீரிலும் கூட டெங்கு நுளம்புகள் முட்டையிடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி, உலர்ந்த இடமொன்றில் காணப்படுகின்ற இந்நுளம்பின் முட்டைகள் சில மாதங்கள் கடந்த பின்னர், மழை பெய்ததும் வாய்ப்பான சூழலைப் பயன்படுத்தி நுளம்பாக உருவடையக்கூடிய வீரியத்தைக் கொண்டவையாக உள்ளன. எனவே மழை பெய்தால் மாத்திரமே நுளம்புகள் பெருகும் என்று இனிமேலும் எண்ணிக் கொண்டிருக்க முடியாது. அவை எத்தகைய சூழலிலும் பெருகும் ஆற்றலைக் கொண்டிருக்கின்றன.
அதுமாத்திரமன்றி, டெங்கு நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்குவதிலும் மருத்துவர்கள் தற்போது பெரும் சவாலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. முன்னரைப் போலன்றி டெங்கு நோய் தற்போது தீவிரம் பெற்றிருப்பதே இதற்கான காரணமாகும். எனவேதான் எவருக்காவது காய்ச்சல் அல்லது டெங்கு நோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுமானால் தாமதமின்றி மருத்துவ சிகிச்சையை நாடுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
டெங்கு நோய்க்கான சிகிச்சையைப் பொறுத்தவரை அரசாங்க வைத்தியசாலைகள் தற்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதையே காண முடிகின்றது. டெங்கு நோயாளர்களுக்கு உயிராபத்து ஏற்பட்டு விடக்கூடாதென்பதிலும், அந்நோயை எவ்வாறாவது குணப்படுத்திவிட வேண்டுமென்பதிலும் அரசாங்க வைத்தியசாலை மருத்துவர்கள் எடுத்துக் கொள்கின்ற அக்கறையை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆனாலும் டெங்கு நோயாளர்கள் மருத்துவ சிகிச்சையை நாடுவதில் காண்பிக்கின்ற தாமதமே உயிராபத்துக்குக் காரணமாகி விடுகின்றது. எந்தவொரு காய்ச்சலும் இக்காலத்தில் அலட்சியப்படுத்திவிடக் கூடியதல்ல. அது சாதாரண காய்ச்சலாக மாத்திரமன்றி. டெங்குக் காய்ச்சலாகவும் இருக்கலாமென்ற எச்சரிக்கை உணர்வுதான் இங்கு முக்கியம். இவ்வாறு காய்ச்சலை அலட்சியப்படுத்தும் போதுதான் சிலவேளைகளில் உயிராபத்து நேர்ந்து விடுகின்றது.
நோய் தீவிரமடைந்த நிலையில் வைத்தியசாலையை நாடும் போது மருத்துவர்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விடுகின்றது. இதன் காரணமாகவே டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோரில் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகின்றது.
டெங்கு நோயினால் எமது மக்கள் பாதுகாப்புப் பெற வேண்டுமானால், பிரதான விடயங்களில் அவதானத்தைப் பேணுவது அவசியமாகின்றது. நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியது முதலில் அவசியம். அதேசமயம் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதும் முக்கியம்.
இவ்விரண்டுக்கும் அப்பால், காய்ச்சல் ஏற்பட்டதும் தாமதமின்றி உரிய மருத்துவரை நாடுவது மிகவும் அவசியம். இவ்வாறான விழிப்புணர்வுகள் மூலமே டெங்கு நோயிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெற முடியும்.. 

Read more »

சமூகவலைத் தளங்கள் மனிதப் பண்பை பேணட்டும்!
 சமூக ஊடக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை அரசு முற்றாக நீக்கியுள்ளது. நாட்டில் பெரும் கலவரமொன்று ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்புத் தரப்பின் ஆலோசனைக்கமையவே சமூக வலைத்தளங்கள் மீது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சமூக ஊடக வலைத்தளங்கள் மீது தடைபோட்டு ஊடக சுதந்திரத்தை மீறுவதற்கு அரசு ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வலைத்தளங்கள் தவறான வழிமுறைகளை பயன்படுத்தாதிருக்கும் வகையில் அவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் சட்டமூலமொன்றைக் கொண்டு வரவிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஊடக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறான சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைப்பதாக எவரும் தப்புக் கணக்குப் போட்டுவிட முடியாது. கண்டி, திகன உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற மோசமான இன வன்முறைகளுக்கும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகளுக்கும் சமூக ஊடக வலைத்தளங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக அமைந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் கண்களை மூடி மௌனமாக இருந்துவிட முடியாது.
ஊடகங்களுக்கு இந்த அரசு சுதந்திரமாகச் செயற்பட அனுமதியளித்திருக்கின்ற போதிலும், அந்தச் சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தி இனங்களுக்கிடையே மோதலைத் தோற்றுவிக்கவோ, மதக் கலவரங்களை தோற்றுவிக்கவோ முனைவதை எந்த விதத்திலும் அனுமதிக்கவியலாது. அண்மைக் காலமாக சமூக ஊடக வலைத்தளங்கள் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளை தோற்றுவிக்கும் வகையில் தவறான பிரசாரங்களை வெளியிட்டு வந்தமையால் இனங்களுடைக்கிடையில் முரண்பாடுகள் உருவாகி பல்வேறு சமப்வங்கள் இடம்பெற்றன. சமூக ஊடக வலைத்தளங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாக நாட்டில் மற்றொரு இனக்கலவரம் உருவாகும் அச்சநிலை ஏற்பட்டது. இதனை உடன் தடுத்து நிறுத்த வேண்டியதன் பொருட்டே வலைத்தளங்கள் மீதான இடைக்காலத்தடை போடப்பட்டது.
சமூக ஊடகங்கள் மீதான இந்த இடைக்காலத் தடையை அரசுக்கு எதிராக திசைதிருப்பும் ஒருமுயற்சிகூட முன்னெடுக்கப்பட்டது. ஊடக சுதந்திரத்தை அரசு நசுக்க முற்படுவதாகக் கூறி இதனை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரச எதிர்ப்பு சக்திகள் முன்னெடுத்தன. அரசாங்கம் சமூக ஊடக வலைத்தளத்தை மூடிவிட முடிவெடுக்கவில்லை. பதிலாக அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே செயற்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊடகங்களுக்கு சுதந்திரம் இருப்பதாகக் கூறிக்கொண்டு அவை தாம் நினைத்தபடி செயற்பட முடியாது. ஊடக கலாசாரம், பண்பாடுகளை மதித்துச் செயற்பட வேண்டும். மக்களை மோதவிட்டு, இனவாதக் கருத்துக்களை பரப்பி நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பங்கமேற்படும் வகையில் செயற்பட எந்த ஊடகமும் முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. வலைத்தளங்கள் இனவாத, மதவாத பிரசாரங்கள் வைரலாகப் பரவத் தொடங்கியதால் மதவழிபாட்டுத் தலங்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மக்கள் துன்புறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர். உயிர்களும் காவுகொள்ளப்பட்டன. இந்த வன்முறைகளால் எந்தவொரு இனத்துக்காவது நன்மை கிடைத்ததாகக் கொள்ள முடியுமா?
இந்த இனவன்முறையால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய பணத்தை வழங்கிவிட்டால் பூரணமாகுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் ஏற்பட்டிருக்கும் மனவடுக்களை மாற்ற முடியுமா? அவை என்றென்றும் மாறாத வடுக்களாகவே தொடரப் போகின்றன. முறிந்துபோன உணர்வுகளை சீர்படுத்த முடியாது. இனவாதச் சக்திகள் தமது சுயநலனுக்காக நாட்டை அழிவுக்குள் இட்டுச் செல்லும் மனித நாகரிகமற்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே அரசு சமூக ஊடக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடிய அணுகுமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது. நிபந்தனைகளுடன் கூடியதான விதிமுறைகளை உருவாக்கி அவற்றை சட்ட ரீதியான வரைபுக்குள் நிறைவேற்றி சில கட்டுப்பாடுகளை விதிப்பதென அரசு தீர்மானித்துள்ளது. இது வரவேற்கப்படக்கூடியதொன்றாகும். சட்டவரைபொன்றின் மூலம் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக எவரும் குரல் எழுப்ப முடியாது. ஊடகங்கள் தமது சிந்தனையையும், எழுதுகோல்களையும் சமூகத்துக்கு ஆரோக்கியமுள்ளதாகவே பயன்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன.
சீனாவில் சமூக ஊடக வலைத்தளங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்துறையமைச்சர் ராம்நாத்சிங் நாடடில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு சமூக ஊடகவலையமைப்புகளே காரணமெனச் சுட்டிக்காட்டி அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் நோக்கும் போது இலங்கை அரசு ஊடக வலையமைப்புகளை தடை செய்யவோ, ஊடக சுதந்திரத்தில் கைவைக்கவோ முற்படவில்லை. ஜனநாயக ரீதியில் செயற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
இன, மத வாத அடிப்படையிலான சிந்தனைகளைப் பரப்பி நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்குள் இட்டுச்செல்ல எவராவது முயற்சிப்பாளர்களானால் அவர்களை தேசத்துரோகிகளாகவே மக்கள் பார்க்கும் நிலை ஏற்படலாம். சமூக ஊடகங்கள் இதனை மனதிலிருத்திச் செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதை வலியுறுத்துகிறோம்.

Read more »

வரட்சியால் உருவாகும் மின்சார நெருக்கடி!கடந்த வருட இறுதிப் பகுதியில் கிடைக்கப் பெற வேண்டிய வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சியை எதிர்பார்த்த அளவு நாடு பெற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு வருடத்தின் ஆரம்ப மூன்று மாதங்களும் நாட்டுக்கு மிகக் குறைவான மழைவீழ்ச்சி கிடைப்பதும் வழமையானதே.
இதனால் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் நாட்டில் அதிகம் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இதன் விளைவாக புத்தளம், குருநாகல், மன்னார் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வரட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் தென்னை உள்ளிட்ட ஏனைய மரஞ்செடிகளும் நீரின்றி அழிவடைவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அத்தோடு இம்மாவட்டங்களின் சில பிரதேசங்களில் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பிரதேச மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் பலவித அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இவை இவ்வாறிருக்க, நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுவதன் விளைவாக மக்கள் மத்தியில் மின்பாவனையும் அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தகவல்களின்படி, அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை பத்து வீதத்தினால் அதிகரித்து வருகின்றது. இது கவனிக்கத்தக்க விடயமாகும்.
அதிலும் கடந்த வெள்ளியன்று மாத்திரம் முழு நாட்டிலும் 2500 மெகா வோர்ட் மின்சாரம் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நாட்டில் அண்மைக் காலத்தில் அதி கூடிய மின்சாரம் பாவிக்கப்பட்ட தினமாக இத்தினம் திகழ்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் மின்சாரமானதுஇ மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. மனிதன் பாவிக்கின்ற எல்லாப் பொருட்களும் பெரும்பாலும் மின்சாரம் கொண்டுதான் இயக்கப்படுகின்றன. அதனால் மின்சாரம் இல்லையேல் மனித வாழ்வே ஸ்தம்பித்து விடக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. மின்சாரம் அந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
தற்போது அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம் ஏற்கனவே மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெறாததால் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமோ என்ற அச்சம் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா, தற்போது நாட்டில் அதிக உஷ்ணமான காலநிலை நிலவுகின்ற போதிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது. நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் போதிய அளவு மின்சாரம் இருப்பதோடு நீர்த்தேக்கங்களிலும் போதியளவு நீர் உள்ளதாகவும்' குறிப்பிட்டிருக்கிறார்.
கடும் வெப்பநிலை காரணமாக மின்பாவனை அதிகரித்துள்ள போதிலும் மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என் மின்சக்தி அமைச்சு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இலங்கைக்குத் தேவையான மின்சாரத்தில் 40 வீதம் தண்ணீரைக் கொண்டுதான் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதேநேரம் நிலக்கரி,டீசல், சூரிய சக்தி, காற்று போன்ற மூலங்கள் மூலமும் இங்கு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
மேலும் நாட்டில் மின்தேவை அதிகரித்து வருவதால் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கி உள்ளது.
என்றாலும் அதிக வெப்ப காலநிலை காரணமாக மின் பாவனையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்புக்கு ஏற்ப அதன் உற்பத்தியையும் அதிகரிப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் எவ்வித நெருக்கடிக்கும் முகம் கொடுக்காது 24 மணித்தியாலமும் தொடராக மக்களுக்கு மின்வசதியை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இந்நாட்டு மக்கள் இவ்வசதியை எவ்வித நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்காது அண்மைக் காலமாகப் பெற்றுக் கொள்வது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் மணித்தியாலக்கணக்கில் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. அவ்வாறான நிலை இங்கில்லை. ஏனெனில் மின்சாரத்தின் தேவையும் முக்கியத்துவமும், அவசியமும் இங்கு தெளிவாக உணரப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் மின்சாரப் பாவனையில் நிலவுகின்ற வீண்விரயத்தை தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின்சாரம் மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் இதன் உற்பத்தியையும் பாவனையையும் சீராகவும் ஒழுங்கு முறையாகவும் பேண வேண்டும். அப்போதுதான் மின்பாவனை அதிகரித்த போதிலும் மின் வெட்டு இன்றி அதனை பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 
Read more »