Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிரியாவில் மற்றொரு இரசாயன தாக்குதலில் 70 பேர் உயிரிழப்புசிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் எஞ்சி இருக்கும் கடைசி நகரான தூமாவில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் இரசாயன தாக்குதல் ஒன்றில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்திருப்பதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்த தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகம் உயிரிழந்திருப்பதாக அரச எதிர்ப்பு பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வைட் ஹெல்மட் மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.
“எழுபது பேர் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்து மூச்சுத்திணறலால் பதிக்கப்பட்டுள்ளனர்” என்று வைட் ஹெல்மட் குழுவின் தலைவர் ரயெத் அல் சலேஹ் குறிப்பிட்டுள்ளார். பலரும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிளோரின் வாயு மற்றும் அடையாளம் காணப்படாத வாயு தூமாவில் வீசப்பட்டதாக அல் சலேஹ் குறிப்பிட்டார்.
“வைட் ஹெல்மட் தன்னார்வ பணியாளர்கள் மக்களுக்கு உதவ முயன்றபோதும், பெரும்பாலான வாகனங்கள் சேவைக்கு சென்றிருக்கும் நிலையில் மக்களை ஓர் இடத்தில் இருந்து கால் நடையாக மற்றொரு இடத்திற்கு அழைத்துச் செல்லவே எம்மால் முடிந்தது” என்று அவர் கூறினார்.
இதில் பீப்பாய் குண்டுகள் மற்றும் வான் தாக்குதலில் இருந்து தப்ப நிலவறையில் ஒளிந்திருந்த ஒட்டுமொத்த குடும்பமும் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக வைட் ஹெல்மட் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.
இரசாயன தாக்குதல் உறுதி செய்யப்பட்டால் சிரியாவுக்கு எதிராக சர்வதேச பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. எனினும் இதனை இட்டுக்கட்டப்பட்ட ஒன்று என்று நிராகரிக்கும் சிரிய அரசு, சிரிய இராணுவம் நச்சு வாயுவை பயன்படுத்துவதாக கூறுவது ‘கேலியானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
சிரிய உள்நாட்டு யுத்தத்தில் 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இரசாயன தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் பதிக்கப்பட்டிருப்பதோடு நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
‘நகரில் பெரும்பகுதி அழிந்துவிட்டது’
அரச ஆதரவு படை மற்றும் அதன் கூட்டணிகள் கடந்த வெள்ளிக்கிழமை தூமா நகர் மீது வான் மற்றும் தரை வழியாக உக்கிர தாக்குதலை நடத்தியது. கிழக்கு கெளத்தா பிராந்தியத்தில் எஞ்சி இருக்கும் கடைசி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி இதுவாகும்.
சிரியாவின் அரச செய்தி நிறுவனமான சானா வெளியிட்ட செய்தியில், தூமா நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜெயிஷ் அல் இஸ்லாம் போராட்டக் குழு வீசிய ஷெல் குண்டுகளுக்கு பதில் நடவடிக்கையாக 10 நாள் அமைதியை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கடும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஷெல் தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டு பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக சானா செய்தியில் கூறப்பட்டுள்ளது. எனினும் இதனை ஜெயிஷ் அல் இஸ்லாம் மறுத்துள்ளது.
“உக்கிர வான் தாக்குதலுக்கு முகம்கொடுத்து வரும் தூமாவின் பெரும் பகுதி அழிவடைந்துள்ளது” என்று அந்த நகரின் குடியிருப்பாளரும் மருத்துவ தன்னார்வ பணியாளருமான மோயத் அல் தைரானி அல் ஜஸீராவுக்கு குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை வழங்குவதில் மருத்துவர்கள் நெருக்கடியை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“நகர் மீது கிளோரின் பீப்பாய் குண்டு வீசப்பட்டதை அடுத்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட 1,000க்கும் அதிகமானவர்களை நாம் சந்தித்துள்ளோம். இந்த எண்ணிக்கை இதனை விடவும் அதிகரித்து வருகிறது” என்றும் கூறியுள்ளார்.
அரச எதிர்ப்பு குழுவின் தூமா மருத்துவ மையம் பாதிப்பு குறித்த புகைப்படங்களை சமூகதளத்தில் பதவேற்றியுள்ளது. சிகிச்சை பெறும் மக்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட இறந்தவர்களில் உடல்கள் அந்த புகைப்படங்களில் காணப்படுகின்றன.
நச்சு வாயு தாக்குதலின் அறிகுறிகளை காட்டும் சிகிச்சை பெறுபவர்களின் வீடியோக்களை மீட்பு பணியாளர்களும் வெளியிட்டுள்ளனர். சிலரது வாய் மற்றும் மூக்கினால் வெள்ளை நுரை கக்குவதையும் காண முடிகிறது. கிளோரின் தாக்குதலின் அறிகுறிகளில் இருமல், மூச்சுத் திணறல், சளி சவ்வுகளின் தீவிர எரிச்சல் ஆகியவை உள்ளடங்கும்.
போதிய மருத்து உதவி இல்லை
தூமா நகரில் ஒருசில மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களே இருப்பதாக சிரிய அமெரிக்கர் மருத்து சம்மேளனத்தின் தலைவர் அஹ்மத் தரக்ஜி குறிப்பிட்டுள்ளார். “இவர்கள் தூமாவில் அதிக எண்ணிக்கையான பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்று கூறினார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இருந்து அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிட்ட தரக்ஜி, தூமாவில் தற்போது தங்கி இருக்கும் பெரும்பாலான குடும்பங்கள் பீப்பாய் குண்டுகள் மற்றும் ஷெல் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு பெற நிலவறைகளில் அடைக்கலம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.
“கிளோரின் மற்றும் அது போன்ற இராசாயனங்களை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் தஞ்சமடைந்திருக்கும் நிலவறைகளிலும் ஊடுருவுகின்றன. அவை மக்களை மூச்சுத்திணற வைப்பதாலேயே உயிரிழப்பு அதிகமாகக் காரணம்” என்று அவர் மேலும் கூறினார். அரச எதிர்ப்பாளர்களுக்கு எதிரான ஓர் ஆயுதமாக சிரிய அரசு அண்மைய ஆண்டுகளில் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்த போதும் அதனை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
‘100,000 பேர் சிக்கியுள்ளனர்’
சிரிய உள்நாட்டு யுத்தத்தில் அண்மைய ஆண்டுகளில் சிரிய அரச படை கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறது. எனினும் கிழக்கு கெளத்தாவில் கிளர்ச்சியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. எனினும் கடந்த நான்கு அண்டுகளாக இந்த பிராந்தியத்தை அரச படை முற்றுகையில் வைத்திருப்பதால் இங்கு உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதோடு மனிதாபிமான நெருக்கடி ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் இருந்து வெளியேறுவதற்கு இரண்டு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் ரஷ்ய இராணுவத்துடன் இணக்கத்திற்கு வந்தன. இதனால் இங்கிருந்து 19,000 பேர் வரை மற்றொரு கிளர்ச்சியாளர் பகுதியான இதிலிப்பை நோக்கி சென்றுள்ளனர்.
இவர்களில் பைலக் அல் ரஹ்மான் மற்றும் அஹ்ரார் அல் ஷாம் கிளர்ச்சிக் குழுக்களின் போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் குடியிருப்பாளர்களும் இந்த பிராந்தியத்தில் இருந்து இவ்வாறு வெளியேறியுள்ளனர்.
இந்த வெளியேற்றம் பல வாரங்கள் இடம்பெற்ற உக்கிர வான் தாக்குதலை அடுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாகும் என்று கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் தூமா நகரில் தற்போதும் எந்த உதவியும் இன்றி 100,000க்கும் அதிகமானவர்கள் சிக்கி இருப்பதாக அந்த நகரின் முன்னாள் குடியிருப்பாளரான ஹனான் ஹலிமாஹ் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அரச படையின் தாக்குதலால் இந்த நகர் பேரழிவை சந்தித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments:

Post a Comment