Breaking News

>

அமரர் அலவி மௌலானா அரசியலுக்காகவே வாழ்ந்தவர்


பாராளுமன்றத்தில் பிரதமர் புகழாரம்
தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியுமான அமரர் அலவி மௌலானா அரசியலுக்காகவே உயிர்வாழ்ந்த நபர். அவருக்கு அரசியலைத் தவிர வேறு வாழ்க்கை இருக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உழைக்கும் வர்க்கத்தினருக்கும், சாதாரண மக்களுக்காகவும் தனது உயிரிருக்கும் வரை அவர் சேவையாற்றியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னாள் அமைச்சர் அமரர் அலவி மௌலானா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் வேலாயுதம் உள்ளிட்டவர்களின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அளவி மௌலானா என்ற நபர் அரசியல்வாதியாக பிரபலம் அடைந்ததை விட ஒரு தொழிற்சங்க தலைவராக அவர் உயரிய இடத்தில் இருந்தார். பல தொழிற்சங்கங்களை இயக்கி அப்போதய எமது அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த ஒரு நபர். பின்னர் அவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அதேபோல் தொழில் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை இலாவகமாகக் கையாண்டார். பலஸ்தீன விடுதலை அமைப்பில் அவர் அங்கம் வகித்த காலத்தின் பின்னர் நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவரது வாழ்நாளை அரசியல் மற்றும் தொழிலாளர் செயற்பாடுகளுக்காக அர்ப்பணித்திருந்தார் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதம் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியமான ஒரு தமிழ் உறுப்பினராக செயற்பட்டவர். எமது தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினராகவே முதலில் அவரை நான் அறிந்துகொண்டேன். பின்னர் மாகாணசபைக்கு தெரிவாகி பின்னர் தொழிலாளர் சங்கத்தின் தலைமைகளை பெற்று செயற்பட்ட ஒருவர்.
ஊவா மாகாண மக்களுக்காக அவரது சேவை மிகவும் முக்கியமானதாகும். 2001 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத்திற்கு தெரிவானார். அவரது செயற்பாடுகள், மற்றும் திட்டங்கள் அனைத்துமே அவரது ஆளுமையின் அடையாளமாகும். அவர் 2015 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கடும் சுகவீனம் அடைந்து சிரமப்பட்ட காலத்தில் எம்முடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியவில்லை. அவர் வெறுமனே தமிழ் அரசியல்வாதி அல்ல. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதி என்ற வகையிலேயே அவர் செயற்பட்டார். அவர் செயற்பட்ட காலத்தில் தொழிற்சங்கங்களுக்கு பாரிய பலமாக அமைந்தது எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

No comments