போதைப்பொருள் ஆபத்திலிருந்து மாணவரை காப்பாற்றுவது அவசியம்

           

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த பெண்மணியிடமிருந்து பெரும் தொகையான ஹசீஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய சுங்க அதிகாரிகளின் தகவலின்படி அப்பெண்ணின் பொருட்கள் அடங்கிய பொதிக்குள் எட்டு கிலோ ஹசீஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பெறுமதி 35 இலட்சம் ரூபாவுக்கும் கூடுதலெனத் தெரிய வருகின்றது. நாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு எனனதான் நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ஏதோவொரு வகையில் போதைப் பொருட்கள் நாட்டுக்குள் வந்து கொண்டே இருக்கின்றன. தேசத்தின் மேன்மைக்கு இது எவ்வளவு இழுக்கானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
நாளாந்தம் பத்திரிகைகளைப் புரட்டுகின்ற போது, கேரள கஞ்சா உட்பட போதைப்பொருள் பாவனை தொடர்பான செய்திகள் வராத நாளே கிடையாது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆனமடுவ பகுதியில் மூன்று பாடசாலை மாணவர்களிடம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 17 மற்றும் 18 வயதுடைய இந்த மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அவர்களது எதிர்காலம் என்னவாகும் என்பதை எண்ணும் போது மனவேதனைதான் ஏற்படுகின்றது. பாடசாலை விடுமுறை வழங்கப்படவிருந்த நாளில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முன்னரும் கூட இந்த மாணவர்கள் போதை மாத்திரைகளுடன் வந்ததாகத் தெரிய வந்துள்ளது.
போதைப்பொருளைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் குறுக்குவழியில் இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் வந்துகொண்டே இருக்கின்றன. நமது நாட்டில் இப்படியொரு அபாயம் தொடர்வது ஆரோக்கியமானதல்ல.
கிராமப்புறங்களில் கஞ்சா பாவனை மேலோங்கிக் காணப்படுகின்றது. ஒரு காலகட்டத்தில் பெரியவர்கள் மட்டுமே இந்த சீரழிவுக்குள் சிக்கி இருந்தார்கள். இன்று மாணவர்கள் கூட கஞ்சா பாவனையில் ஈடுபட்டுள்ளனர்.
பாடசாலைச் சிறார்களை இந்தப் பேரழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய அவசரம் இன்று உருவாகியுள்ளது. ஆசிரியர்களுடன் இது விடயத்தில் பெற்றோரும் கண்காணிக்க வேண்டும்.
பழகும் நண்பர்கள், போகுமிடங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடனிருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் பிள்ளகைள் எங்கு போகிறார்கள்? யாரோடு பழகுகிறார்கள்? இரவு காலங்களில் எங்கெல்லாம் சுற்றித் திரிகிறார்கள் என்பதில் மிக முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
பாடசாலைகளில், தனியார் வகுப்புகளில் பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் விழிப்புடனிருக்க வேண்டும். அதுவும் 15 வயதைத் தாண்டிய பிள்ளைகளின் தன்னிச்சை செயற்பாடுகளை நாளாந்தம் அவதானிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரையும் ஆசிரியர்களையும் சார்ந்துள்ளது. முன்பெல்லாம் நகர்ப்புறத்து பிரபலமான பாடசாலைகளில்தான் போதைப்பொருள் பாவனையால் மாணவர்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். இன்று அந்த நிலைமாறி முழுநாட்டிலும் கிராமங்களில் கூட இளம் சந்ததியினர் போதைக்கு அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கிராமப் புறங்களில், காட்டுப் பகுதிக்குள் நண்பர்களுடன் செல்லும் இவர்கள் போதையில் மூழ்கிப் போயுள்ளமை பல இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாக்களின் போது கூட மதுபானம், கஞ்சா உட்பட பல்வேறுபட்ட போதைப்பொருட்களை எடுத்துச் செல்கின்றனர்.
இந்தப் பேரழிவிலிருந்து எமது இளைய சந்ததியை மீட்டெடுக்க வேண்டும். இளையோரின் வாழ்க்கை கருகிவிட இடமளித்துவிடக் கூடாது. இதற்கான பாரிய பொறுப்பைச் சுமந்திருப்பவர்கள் பெற்றோர்களாவர். போதைக்கு அடிமையாகும். எமது பிள்ளகைள் காலப் போக்கில் திருட்டு, கொள்ளைச் சம்பவங்களில் கூட அகப்பட்டுக் கொள்கின்றனர். கடைசியில் அவர்களது எதிர்காலம் சூனியமாக்கப்பட்டு விடும்.
குறுகிய வழியில் பணம் தேட முனைவோரின் பிரதான வியாபாரமாக இன்று போதைப்பொருள் மாறியுள்ளது. எந்தவொரு நகரத்திலும் போதைப்பொருட்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அந்த இடங்கள் குறித்து பொலிஸார் உடனடி கவனம் செலுத்த வேண்டும். இதுவிடயத்தில் பாரபட்சம் பார்க்கக் கூடாது. அரசியலோடு தொடர்புபட்ட பெரும்புள்ளிகளுக்கு போதை வியாபாரத்துடன் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அரசும், தொண்டு நிறுவனங்கள், பாதுகாப்புத்தரப்பு என்பனவும் ஒன்றுபட்டு காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். பெற்றோரும், ஆசிரியர்களும் தமது பிள்ளைகள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்க வேண்டும். எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றாக இணைய வேண்டியது மிகப் பிரதானமானதாகும்.