சமூக வலைத்தளம் என்னும் மாயை!

பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் என்பன காணாமற் போனவுடன் முதற் தடவையாக தங்களது வாழ்க்கையை எண்ணிப் பார்த்தவர்களும் உண்டு. ரயிலில் பஸ்ஸில் இரண்டு மூன்று மணித்தியாலயங்கள் குறுஞ்செய்திகளை பரிமாறுவதிலும் நியூஸ் பீட் பண்ணுவதிலும் செலவிட்டவர்கள் புத்தகம், பத்திரிகைகளை வாசித்ததையும் அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. குறிப்பாகக் கூறுவதென்றால் பேஸ்புக்குக்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உண்டு என உணர்ந்தவர்கள் எராளம்.
2004ம் ஆண்டு பேஸ்புக் உலகிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்னர் பாரதியார் கவிதைகளையும், சாண்டில்யனின் நாவல்களையும், கல்கியின் கதைகளையும் வாசிகசாலையிலோ நண்பர்களிடமோ இரவல் வாங்கிப் படித்த காலமொன்றிருந்தது. 2004ம் ஆண்டு பேஸ்புக் ஆரம்பிக்கப்பட்டாலும் தொழில்நுட்பத்துடன் பேஸ்புக் மாத்திரமல்ல அனைத்து சமூக வலைத் தளங்களும் மிக அண்மைக் காலமாகத்தான் இலங்கையில் பயன்படுத்தப்படுகின்றன. அந்த காலப் பகுதியில் என்ன நடந்தாலும் மாலையில் விளையாடிய, அனுபவம் இருந்தது. பத்திரிகை, புத்தங்கள் வாசிப்பது ஆறு மணியானவுடன் தொலைக்காட்சி முன்னால் அமர்ந்து நாடகங்கள் பார்ப்பது, வானொலியில் பாடல்களை கேட்டு ரசிப்பது என ஒரு காலம் இருந்தது.
ஆனால் நாளுக்கு நாள் தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி மற்றும் வசதிகளை மேம்படுத்த தொடங்கியதும் நாம் உலகோடு இணையும் சந்தர்ப்பம் அதிகரித்தது. ஆனால் எமக்குள் நாம் எம்மைத் தொலைத்தோம். அதுதான் உண்மை. ஆரம்பத்தில் வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள், பின்னர் கிராமத்திலுள்ளவர்கள், பின்னர் உலகம் முழுவதும் உள்ளவர்கள் என பேஸ்புக் நண்பர்களாக இருந்தாலும் நாம் முகத்துக்கு நேராக கண்டால் கதைப்பதும் சிரிப்பதும் குறைவாகும். சில நேரமே பேசுவார்கள். சிலரை அடையாளம் காணக்கூட மாட்டார்கள். அவர்கள் அடுத்தவரைப் பற்றிய கதைகளை அறியவே இணைத்துக் கொள்கின்றார்கள்.
சமூகத் தொடர்புகள் சமூக வலைத்தளங்கள் மூலம் மனிதர்களுக்கு இடையேயான இடைவெளி கூடிக் கொண்டு போனது. ஒருவரையொருவர் நேசிப்பது குறைந்து விட்டது. எவ்வாறாயினும் மீண்டுமொரு முறை பழைய வாழ்க்கைக்கு செல்ல சிறு அவகாசம் கிடைத்தது. தங்களுடையவர்களுடன் அளவளாவி மகிழ, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முயன்றால் பல விடயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். முகநூலை உலகிற்கு அறிமுகம் உரிமையாளர் மார்க் அதனுடன் காலத்தைக் கடத்துவதில்லை. மார்க் தன்னுடைய வேலை நேரம் முடிந்தவுடன் எப்படியாவது புத்தகம் ஒன்றை வாசிக்க நேரம் ஒதுக்குவதாகக் கூறியுள்ளார்.
தன்னுடைய மனைவி, பிள்ளைகளுடன் மற்றும் தனது நாயுடனும் பொழுதைக் கழிக்க நேரம் ஒதுக்கியுள்ளார்.
உலகில் அநேகர் பின்பற்றும் முகநூல் உரிமையாளர் அதன் மூலம் கலவரப்படவோ, அதன் மூலம் உலகுக்குத் தெரிய வாழவோ விரும்புவதில்லை.