Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சமூகவலைத் தளங்கள் மனிதப் பண்பை பேணட்டும்!
 சமூக ஊடக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை அரசு முற்றாக நீக்கியுள்ளது. நாட்டில் பெரும் கலவரமொன்று ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக பாதுகாப்புத் தரப்பின் ஆலோசனைக்கமையவே சமூக வலைத்தளங்கள் மீது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது. சமூக ஊடக வலைத்தளங்கள் மீது தடைபோட்டு ஊடக சுதந்திரத்தை மீறுவதற்கு அரசு ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வலைத்தளங்கள் தவறான வழிமுறைகளை பயன்படுத்தாதிருக்கும் வகையில் அவற்றுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில் சட்டமூலமொன்றைக் கொண்டு வரவிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஊடக வலைத்தளங்களை கட்டுப்படுத்த சட்ட ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறான சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் அரசாங்கம் ஊடக சுதந்திரத்தின் மீது கைவைப்பதாக எவரும் தப்புக் கணக்குப் போட்டுவிட முடியாது. கண்டி, திகன உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற மோசமான இன வன்முறைகளுக்கும் அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைகளுக்கும் சமூக ஊடக வலைத்தளங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே காரணமாக அமைந்தன. அவ்வாறானதொரு சூழ்நிலையில் அரசாங்கம் கண்களை மூடி மௌனமாக இருந்துவிட முடியாது.
ஊடகங்களுக்கு இந்த அரசு சுதந்திரமாகச் செயற்பட அனுமதியளித்திருக்கின்ற போதிலும், அந்தச் சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்தி இனங்களுக்கிடையே மோதலைத் தோற்றுவிக்கவோ, மதக் கலவரங்களை தோற்றுவிக்கவோ முனைவதை எந்த விதத்திலும் அனுமதிக்கவியலாது. அண்மைக் காலமாக சமூக ஊடக வலைத்தளங்கள் இனங்களுக்கிடையில் வெறுப்புணர்வுகளை தோற்றுவிக்கும் வகையில் தவறான பிரசாரங்களை வெளியிட்டு வந்தமையால் இனங்களுடைக்கிடையில் முரண்பாடுகள் உருவாகி பல்வேறு சமப்வங்கள் இடம்பெற்றன. சமூக ஊடக வலைத்தளங்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டதன் காரணமாக நாட்டில் மற்றொரு இனக்கலவரம் உருவாகும் அச்சநிலை ஏற்பட்டது. இதனை உடன் தடுத்து நிறுத்த வேண்டியதன் பொருட்டே வலைத்தளங்கள் மீதான இடைக்காலத்தடை போடப்பட்டது.
சமூக ஊடகங்கள் மீதான இந்த இடைக்காலத் தடையை அரசுக்கு எதிராக திசைதிருப்பும் ஒருமுயற்சிகூட முன்னெடுக்கப்பட்டது. ஊடக சுதந்திரத்தை அரசு நசுக்க முற்படுவதாகக் கூறி இதனை அரசியல்மயப்படுத்தும் முயற்சியை அரச எதிர்ப்பு சக்திகள் முன்னெடுத்தன. அரசாங்கம் சமூக ஊடக வலைத்தளத்தை மூடிவிட முடிவெடுக்கவில்லை. பதிலாக அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே செயற்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
ஊடகங்களுக்கு சுதந்திரம் இருப்பதாகக் கூறிக்கொண்டு அவை தாம் நினைத்தபடி செயற்பட முடியாது. ஊடக கலாசாரம், பண்பாடுகளை மதித்துச் செயற்பட வேண்டும். மக்களை மோதவிட்டு, இனவாதக் கருத்துக்களை பரப்பி நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பங்கமேற்படும் வகையில் செயற்பட எந்த ஊடகமும் முயற்சிப்பதை அனுமதிக்க முடியாது. வலைத்தளங்கள் இனவாத, மதவாத பிரசாரங்கள் வைரலாகப் பரவத் தொடங்கியதால் மதவழிபாட்டுத் தலங்கள், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், வீடுகள், வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மக்கள் துன்புறுத்தப்பட்டனர், தாக்கப்பட்டனர். உயிர்களும் காவுகொள்ளப்பட்டன. இந்த வன்முறைகளால் எந்தவொரு இனத்துக்காவது நன்மை கிடைத்ததாகக் கொள்ள முடியுமா?
இந்த இனவன்முறையால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய பணத்தை வழங்கிவிட்டால் பூரணமாகுமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதனால் ஏற்பட்டிருக்கும் மனவடுக்களை மாற்ற முடியுமா? அவை என்றென்றும் மாறாத வடுக்களாகவே தொடரப் போகின்றன. முறிந்துபோன உணர்வுகளை சீர்படுத்த முடியாது. இனவாதச் சக்திகள் தமது சுயநலனுக்காக நாட்டை அழிவுக்குள் இட்டுச் செல்லும் மனித நாகரிகமற்ற செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே அரசு சமூக ஊடக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடிய அணுகுமுறை குறித்து கவனம் செலுத்தியுள்ளது. நிபந்தனைகளுடன் கூடியதான விதிமுறைகளை உருவாக்கி அவற்றை சட்ட ரீதியான வரைபுக்குள் நிறைவேற்றி சில கட்டுப்பாடுகளை விதிப்பதென அரசு தீர்மானித்துள்ளது. இது வரவேற்கப்படக்கூடியதொன்றாகும். சட்டவரைபொன்றின் மூலம் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஊடக சுதந்திரத்தைப் பறிப்பதாக எவரும் குரல் எழுப்ப முடியாது. ஊடகங்கள் தமது சிந்தனையையும், எழுதுகோல்களையும் சமூகத்துக்கு ஆரோக்கியமுள்ளதாகவே பயன்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன.
சீனாவில் சமூக ஊடக வலைத்தளங்களுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்துறையமைச்சர் ராம்நாத்சிங் நாடடில் வன்முறைகள் அதிகரிப்பதற்கு சமூக ஊடகவலையமைப்புகளே காரணமெனச் சுட்டிக்காட்டி அவற்றைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டுவர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
இவற்றையெல்லாம் நோக்கும் போது இலங்கை அரசு ஊடக வலையமைப்புகளை தடை செய்யவோ, ஊடக சுதந்திரத்தில் கைவைக்கவோ முற்படவில்லை. ஜனநாயக ரீதியில் செயற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.
இன, மத வாத அடிப்படையிலான சிந்தனைகளைப் பரப்பி நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்குள் இட்டுச்செல்ல எவராவது முயற்சிப்பாளர்களானால் அவர்களை தேசத்துரோகிகளாகவே மக்கள் பார்க்கும் நிலை ஏற்படலாம். சமூக ஊடகங்கள் இதனை மனதிலிருத்திச் செயற்பட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளதை வலியுறுத்துகிறோம்.

0 Comments:

Post a Comment