வெலிகமையின் பொருளாதாரம்

வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி, சுற்றுலாத்துறை என்பன சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. மெறியற் ஹோட்டல் போன்ற சர்வதேச தரத்திலான ஐந்து நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு சுற்றுலா விடுதிகள் இங்கு காணப்படுகின்றன. கபலானை, மிதிகமை, மிரிசை போன்ற இடங்கள் இந்து சமுத்திரத்தில் கடற்சருக்கலுக்குப் புகழ் பெற்ற இடங்களாகும். வெலிகமைக் கடலின் சில பகுதிகளில், குறிப்பாக கொவியாப்பானை, கப்பரத்தொட்டை போன்ற இடங்களில் உயிருள்ள அழகிய பவளப் பாறைகளைக் காணலாம்[20].
வெலிகமையின் மிரிசைத் துறை முகத்துக்கு அண்மித்த பகுதிகளில் விந்துத் திமிங்கிலம்நீலத் திமிங்கிலம், உடொல்பின்கள் போன்ற கடல்வாழ் முலையூட்டி இனங்கள் காணப்படுகின்றன. இங்கு இலங்கைக் கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கான திமிங்கிலக் காட்சிகளுக்காக அவர்களைத் தமது படகுகளில் கூட்டிச் செல்கின்றனர்[21]. பண்டைய துறைமுகம் இருந்த இடத்துக்கு அண்மித்ததாக வெலிகமைக் குடாவின் தென் கோடியில் கப்பற் போக்குவரத்துக்கான ஒரு துறைமுகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.[22]
இங்கு வாழும் சோனக முஸ்லிம்கள் பெரிதும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நகரின் உட்பகுதிகளிலும் அண்டிய பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களும் தென்னந் தோப்புக்களும் கறுவாத் தோட்டங்களும் நெற்கழனிகளும் மரக்கறித் தோட்டங்களும் காணப்படுகின்றன. சில பகுதிகளில் இறப்பர்த் தோட்டங்களும் பைன் மரத் தோட்டங்களும் காணப்படுகின்றன. இங்கு நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதற்காக 1887 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசினால் வெலிகமையில் 300 ஏக்கர் பரப்பளவான பொறாளைக் குளத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[23]. வெலிப்பிட்டிப் பகுதியில் பொல்வத்து கங்கைக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட ஒரு அணைக்கட்டு நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச உதவுகிறது. வெலிகிந்தை தொழிற்புரம், உடுக்காவை, மிதிகமை ஆகிய இடங்களில் இறப்பர்த் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான தயர்த் தொழிற்சாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள், உலோக வேலைத் தொழிற்சாலைகள், பழங்களைப் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றன காணப்படுகின்றன. கும்பல்கமைப் பகுதியில் பாரம்பரிய மட்பாண்ட உற்பத்தி நடைபெறுகிறது.
வெலிகமையின் உட்புறத்தில் வெலிப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இரத்தினக் கல் அகழ்வும் இடம்பெறுவதுண்டு. பல நூற்றாண்டுகளாகவே வெலிகமை வாழ் முஸ்லிம்கள் இரத்தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களால் விற்கப்பட்ட இரத்தினங்களுள் 1887 ஆம் ஆண்டு விற்கப்பட்ட 1867 கீறாத்து நிறையுடைய பசுங்கல் குறிப்பிடத் தக்கதாகும்[24].
பண்டைக் காலத்தில் பொல்வத்து கங்கையின் கழிமுகம் அமைந்துள்ள இடமான பொல்வத்துமோதரை (Bellipettimodere) என்னுமிடத்தில் துறைமுகம் அமைந்திருந்ததுடன், அங்கு ஒரு நீதிமன்றமும் காணப்பட்டது[25]. இங்கிருந்து நெடுந்தொலைவுக்கு ஆற்றின் இருமருங்கிலும் கிங் மரங்களும், கின்னைத் தாவரங்களும், கண்டல் தாவரங்களும், இலங்கைக்கு அகணியமான ஒரு சில மூங்கில் வகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. தற்காலத்தில் இவ்விடத்திலிருந்து பொல்வத்து கங்கையினூடாக உல்லாசப் பயணிகளுக்கான படகுச் சேவைகள் இடம்பெறுகின்றன.
பன்னெடுங் காலமாகவே இங்கு தென்னை சார்ந்த தொழில்கள் இடம் பெறுகின்றன. பொல்வத்தை, மதுராபுரி, மிதிகமை போன்ற சிற்சில இடங்களில் தும்புத் தொழிற்சாலைகளும் கொப்பரா காய்ச்சுமிடங்களும் காணப்படுகின்றன.