Breaking News

>

கப்பல்களை கடலில் மூழ்கடிப்பது ஏன்?


2008 ஜனவரி 21ம் திகதி கிழக்குக் கடலில் சந்தேகத்திற்கிடமான வகையில் மிதந்து கொண்டிருந்த கப்பலை கடற்படையினர் அவதானித்தார்கள். அவர்கள் அதனை பரிசீலனை செய்த போது, அது ஒரு இந்தோனேஷியக் கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலாகக் காணப்பட்டது. அந்நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததன் காரணமாகவும் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாகவும் அதன் பணியாளர்கள் அக்கப்பலை கைவிட முடிவு செய்தனர். பாதுகாப்பு அங்கிகளை அணிந்து கப்பலிலிருந்தவர்கள் தப்பியோட முயற்சி செய்துள்ளார்கள்.
கடற்படையினர் கப்பலைக் கைப்பற்றி பணியாட்களுடன் கரைக்குக் கொண்டு வந்தார்கள். அந்தக் கப்பல் பிலிப்பைன்ஸ் நாட்டவருக்குச் சொந்தமான லெலின் என்னும் கப்பலாகும். அந்தக் கப்பலை இழுத்து வந்த பின்னர் கப்பலைப் பொறுப்பேற்குமாறும் மேலும் கொழும்பு துறைமுகத்துக்கு இழுத்துச் சென்றதற்கான கட்டணத்தை வழங்குமாறும் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு அறிவித்த போதும் அவர் கப்பலை பொறுப்பேற்க வரவில்லை.
கப்பலிலிருந்த அவருக்குச் சொந்தமான பொருட்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்திருந்தார். இந்தக் கப்பல் பல சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக கப்பல் பணியாளர்கள் தெரிவித்திருந்தார்கள். குறிப்பாக சட்டவிரோத எரிபொருள் விற்பனை உட்பட்ட பல விடயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கப்பல் உரிமையாளர் கப்பலை பொறுப்பேற்க வராமையால் நீதிமன்றம் கப்பலை இலங்கை கடற்படையின் பொறுப்பில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டது.
அன்று தொடக்கம் இந்தக் கப்பல் கடற்படையினரின் பொருட்களை ஏற்றி இறக்கும் நடவடிக்கைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் அது கடலில் அடிக்கடி பழுதடைந்ததால் திருத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனால் அதனை பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அந்தக் கப்பல் பாவனையிலிருந்து நீக்கப்பட்டது.
அவ்வாறான நிலைமையில் அக்கப்பலை உடைத்து இரும்புக்காக விற்பனை செய்ய வேண்டும். அல்லது கடலில் மூழ்கடிக்க வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சினூடாக கடற்படைத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் கப்பலை மூழ்கடிக்க அனுமதி கோரப்பட்டது. உண்மையில் 150 இலட்சம் ரூபா ஏலத் தொகையாக கிடைத்திருந்தும் கப்பலை இவ்வாறு ஏன் கடலில் மூழ்கடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?
அது தொடர்பாக நாம் கடற்படை பணிப்பாளர் நாயகம் (நடவடிக்கைகள்) ரியர் அட்மிரல் பி. எச். சில்வாவிடம் விடயங்களை கேட்டறிந்தோம்.
குறைந்த விலைக்கு கப்பலை உடைத்து விற்பதை விட அதை மூழ்கடிப்பதால் நாட்டுக்கு அதிக நன்மை கிடைக்கும். ஆழ்கடலில் கப்பலை மூழ்கடிப்பதன் மூலம் அக்கப்பல் பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உகந்த இடமாக மாறுகின்றது. தற்போது நீர்கொழும்புக்கு அண்மையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல்கள் காணப்படுகின்றன. அங்கு வாழும் சமூகத்தினர் அந்த இடங்களில் பெருமளவு மீன்களைப் பிடிக்கின்றார்கள். அதனால் குறிப்பிட்ட கப்பலை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்கவின் ஆலோசனையுடன் மூழ்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிரதாயம் அதுவாகும். அது மிகவும் நன்மை பயக்கக் கூடியதுமாகும்.
கப்பலை மூழ்கடிப்பதற்கு முன்னர் துறைமுக அதிகார சபை சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபை, சூழல் அதிகார சபை உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அறியத் தர வேண்டும். விசேடமாகக் கப்பலில் உள்ள பெறுமதியான பாகங்கள் அகற்றப்படும். அதேவேளை எரிபொருள் தாங்கிகள் போன்ற சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பாகங்கள் முழுவதுமாக அகற்றப்படும். அதேபோல் கப்பலில் மேற்பாகம் முழுவதுமாக அகற்றப்பட்டு கட்டடமொன்றில் முழுவதுமாக வைக்கப்பட்டது. அது எமக்குக் கிடைத்த இலாபமாகும்.
இந்தக் கப்பலுடன் குண்டு துளைக்காத எட்டு மோட்டார் வாகனங்களும் மூழ்கடிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் கடற்படையினருக்கு ஒப்படைக்கப்பட்டன. அவ்வாகனங்களும் கப்பலுடன் பிணைக்கப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டன.
அந்த மோட்டார் வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக வழங்கப்பட்டவை என்பதை அனைவரும் அறிவார்கள். மோட்டார் வாகனங்கள் கப்பலோடு பிணைக்கப்பட்டு படகின் மூலம் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன.
கடந்த 40 வருடங்களாக இந்நாட்டு ஜனாதிபதிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வண்டிகளே அவையாகும். கடலில் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்னர் அவ்வாகனங்களின் தொடர்பாடல் உபகரணங்களை மற்றும் ஏனைய உபகரணங்களும் அகற்றப்பட்டன. இந்த மூழ்கடிக்கப்பட்ட கப்பல் மற்றும் வாகனங்கள் மூலம் ஒரு வருடத்தில் 15 மில்லியன் மீன் அறுவடை பெறக் கூடியதாக இருக்கும்.
இந்தக் கப்பலைத் தவிர இரண்டாம் உலகப் போரில் அதாவது 1925ம் ஆண்டு குண்டு போடப்பட்ட போது பாதிப்படைந்த கப்பல் கடந்த 28ம் திகதி திருகோணமலை கடலில் மூழ்கடிக்கப்பட்டது. அக்கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு அண்மையில் மூழ்கடிக்கப்பட்டிருந்ததால் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அக்கப்பலும் அங்கிருந்து அகற்றப்பட்டு நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இரண்டு கப்பல்கள் மூலமாகவும் இன்னும் ஒரு வருடத்தில் பவளப்பாறைகளும், மீன்களும் அங்கு உருவாகும். அதே போல் சுழியோடிகள் கப்பலினுள் செல்வதற்கு வசதியாக கப்பலில் பல துளைகளும் வெட்டப்பட்டுள்ளன. கப்பலுக்கு சரியான ஏலத்தொகைக் கிடைக்காவிட்டால் அதனை பயனுள்ளதாக்க மீன்பிடித்துறையின் நன்மைக்கோ அல்லது உல்லாசப்பயணத்துறைக்கோ பயன்படுத்துவது உசிதமான செயலாகும்.

No comments