Breaking News

>

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மற்றொரு பலஸ்தீனர் உயிரிழப்பு


இதன்மூலம் கடந்த ஒரு வாரமாக எல்லை பகுதியில் நீடித்து வரும் பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக் இலக்காகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
காசா பகுதியை ஒட்டி பாதுகாப்பு வேலிக்கு அருகில் இஸ்ரேலிய விமானம் ஆயுதம் ஏந்திய போராளி ஒருவரை இலக்கு வைத்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
காசாவின் கிழக்கு நகரில் இஸ்ரேலிய ஆளில்லா விமானத்தை கொண்டு ஏவுணை மூலம் குறித்த பலஸ்தீனர் தாக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இவரது சடலத்தை செம்பிறை சங்க மருத்துவ உதவியாளர்கள் மீட்டுள்ளனர்.
இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவின் எல்லை வேலியை ஒட்டி முகாம் அமைத்து பலஸ்தீனர்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆறு வார ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் வாழ்ந்த பலஸ்தீனர்களுக்கு அங்கு திரும்புவதற்கு உரிமை கோரியே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம் ஆரம்பமான முதல் தினத்தில் இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளால் 16 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றும் ஒருவர் துப்பாக்கி காயம் காரணமாக இரண்டு தினங்கள் கழித்து மரணித்தார். மேலும் ஒரு பலஸ்தீனர் கடந்த செவ்வாய்கிழமை இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டார்.
எனினும் இந்த உயிரிழப்புகளை பொருட்படுத்தாத நூற்றுக்கணக்கான பலஸ்தீனர்கள் இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் தொடர்ந்து ஒன்று திரண்டு வருகின்றனர்.
“எனது இழந்த உரிமையை மீட்டெடுக்க நான் இங்கு வந்திருக்கிறேன்” என்று முஹமது சலாதன் என்ற 60 வயது வேலையற்ற முன்னாள் விவசாயி ஒருவர் குறிப்பிட்டார். “பலஸ்தீனத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
40 மைல்கள் கொண்ட எல்லை வேலியை மீறி செயற்படுபவர்கள் மீதே துப்பக்கிச் சூடு நடத்துவதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்காக எல்லை பகுதியில் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகளை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக் எதிராக சர்வதேச அளவில் கண்டனங்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும் இன்று வெள்ளிக்கிழமை இங்கு பிரமாண்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது. 

No comments