Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

காசநோயைக் கட்டுப்படுத்தும் வழிகள்


காசநோய் கிருமிகள் 
‘மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ்’ (Mycobacterium tuberculosis) எனும் பாக்டீரியா கிருமிகள் பாதிப்பதால் காசநோய் வருகிறது. வழக்கத்தில், காற்றோட்டம் சரியில்லாத வீடுகளிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களிலும், சுரங்கங்கள், ரப்பர் தோட்டம் போன்றவற்றில் இந்தக் கிருமிகள் அதிக அளவில் வசிக்கும். அப்போது அங்கு வாழும் மக்களைத் தாக்கி காசநோயை ஏற்படுத்தும். 
யாருக்கு வாய்ப்பு அதிகம்? 
புகைப்பிடிப்பவர்கள், ஊட்ட சத்துக்குறைவு உள்ளவர்கள், மது அருந்துபவர்கள், வறுமையில் வாடும் ஏழைகள், அறியாமையில் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்துபவர்கள், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்கள், காசநோய் உள்ளவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் ஆகியோரை இந்த நோய் அதிகமாகப் பாதிக்கிறது. 
எய்ட்ஸ் நோயும் காசநோயும் 
காசநோய்க்கும் எய்ட்ஸ் நோய்க்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி இருக்காது என்பதால் காசநோய்க் கிருமிகள் இவர்களை எளிதில் தாக்கிவிடும். அதே நேரத்தில் காசநோய்க்கான மருந்துகளும் இவர்களுக்கு வேலை செய்யாது. இதனால் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மரணம் விரைவில் வந்து சேரும். 
எப்படிப் பரவுகிறது? 
காசநோய் கிருமிகள் நோயாளியின் நுரையீரலில் வசிக்கும். நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைத் துப்பினாலோ கிருமிகள் சளியுடன் காற்றில் பரவி மற்றவர்களுக்கு நோயை உண்டாக்கும். நோயாளியின் மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அந்த இடங்களைத் தொட்டுவிட்டு, அதே கைவிரல்களால் அடுத்தவர்களைத் தொட்டால் கிருமிகள் அவர்களுக்கும் பரவிவிடும்.
நோயாளி பயன்படுத்திய கைக்குட்டை, உடை, உணவுத்தட்டு, போர்வை, துண்டு, சீப்பு, தலையணை, கழிப்பறைக் கருவிகள் போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தினால் நோய் எளிதாகப் பரவிவிடும். நோயாளி பேசும்போது கூட நோய்க் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. 
பாதிக்கின்ற உடல் உறுப்புகள் 
காசநோய் கிருமிகள் நுரையீரல், நுரையீரல் உறை, குடல், குரல்வளை, எலும்பு, முதுகுத்தண்டுவடம், சிறுநீரகம், கண், தோல், மூளை, மூளை உறை, விந்துக்குழல், கருப்பை இணைப்புக் குழல், நிணநீர்ச் சுரப்பிகள் என்று பல உறுப்புகளைப் பாதிக்கின்றன. 
அறிகுறிகள் 
காசநோய்க் கிருமிகள் உடலில் எந்த உறுப்பைப் பாதிக்கிறதோ அதைப் பொறுத்து அறிகுறிகள் அமையும். பொதுவாக, இந்த நோய் நுரையீரல்களையே அதிக அளவில் பாதிப்பதால் நுரையீரல் காசநோய்க்குரிய (Pulmonary tuberculosis) அறிகுறிகளைப் பார்ப்போம்.3 வாரங்களுக்கு மேல் நீடிக்கின்ற இருமல், சளி, சளியில் ரத்தம், மாலை நேரக் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைவது, களைப்பு, சுவாசிக்க சிரமம் ஆகியவை இதன் பிரதான அறிகுறிகள். 
பரிசோதனை வகைகள் 
ஒருவருக்குக் காசநோய் உள்ளதா என்பதை உறுதி செய்ய இரத்தப் பரிசோதனை, மேண்டோ பரிசோதனை, சளிப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்றவை 
உதவும். இவற்றில் சளிப் பரிசோதனை முக்கிய மானது. சளியில் காசநோய்க் கிருமிகள் இருக்குமானால் அது காசநோயை 100 சதவிகிதம் உறுதி செய்யும். 
சிகிச்சை என்ன? 
நவீன மருத்துவத்தின் அதிவேக வளர்ச்சியால் இன்றைக்கு காசநோயைக் குணப்படுத்த பலதரப்பட்ட மருந்துகள் உள்ளன. ரிஃபாம்பிசின், ஐசோநியசிட், எத்தாம்பூட்டால், பைரசினமைடு, ஸ்ட்ரெப்டோமைசின் ஊசி மருந்து ஆகியவை முதல்நிலை காசநோயைக் குணப்படுத்துகின்றன. இவற்றை நோயின் ஆரம்பநிலையிலேயே மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு முறைப்படி ஒருநாள்கூட நிறுத்தாமல் சாப்பிட வேண்டியது முக்கியம். 
நோய் தீவிரமாவது ஏன்? 
இந்த நோய்க்குச் சிகிச்சையை ஆரம்பித்த சில வாரங்களில் அறிகுறிகள் மறைந்து, நோயின் தீவிரம் குறைந்ததுபோலத் தெரிந்தாலும், நோய்க்கிருமிகள் உடலில் செயல் இழப்பதில்லை. மருந்துகளை முறைப்படி எடுத்துக்கொள்ளாமல், விட்டுவிட்டு எடுத்துக் கொள்ளும்போதும், பாதியில் நிறுத்திக் கொள்ளும்போதும், நோய்க்கிருமிகள் அந்த மருந்துகளையே எதிர்த்துப் போராடுவதற்குத் திறனைப் பெற்றுவிடுகின்றன. அதன்பிறகு ஏற்கனவே கொடுத்துவந்த மாத்திரைகளால் இந்தக் கிருமிகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்த முடியாது.

0 Comments:

Post a Comment