அரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம்


அரசாங்கத்தை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இன்று (06) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேர்தல் அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள உள்ளூராட்சி சபை சட்டமூலத்திற்கு அமைய, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியுடன் எதிர்க்கட்சியினர் இணைவதன் மூல மக்களின் ஆணை ஏற்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் ஆணைக்கு எவ்வித மதிப்பும் இல்லாத நிலை தோன்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதே போன்று உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4,000 ஆயிரமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் வெசக் பெளர்ணமி தினம் உள்ளிட்ட வெசக் வாரம் காரணமாக உலக மே தின கொண்டாட்ட நிகழ்வுகளை எதிர்வரும் மே 07 ஆம் திகதி ஒழுங்கு செய்துள்ளதாக தெரிவித்த அவர், மே 07 ஆம் திகதி பொது விடுமுறை தினம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் மகா சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாட்களில் அமைச்சுகளில் மாற்றம் உள்ளிட்ட அமைச்சரவையில் பூரண மாற்றம் ஏற்படுத்தப்படுமெனவும் அவர் இதன்போது தெரிவித்தார். இந்நடவடிக்கை தொடர்பில் இரு கட்சிகள் சார்பான குழுவொன்றும் நியமிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் வாக்களித்த விடயம் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள, கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.