வெலிகமை பண்பாடு அம்சங்கள்

வெலிகமை  பண்பாடு அம்சங்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரால் ஆளப்பட்ட காலத்தில் வெலிகமையிலும் குறிப்பிடத் தக்களவு பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. ஒல்லாந்து நாட்டில் சிறந்து விளங்கிய இறேந்தை பின்னும் கலையை இன்றும் வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் காணலாம்[17].
வெலிகமைப் பகுதியில் நெடுங்காலம் நிலைத்திருக்கும் ஆல மரங்கள் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகரப் பகுதியான தெனிப்பிட்டியிலிருந்த ஆல மரத்தைப் பற்றி கஜமன் நோனா என்ற பெண் கவி பாடிய பாடல்கள் சிங்கள இலக்கியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.
முதலாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் இயற்றப்பட்ட கோகில சந்தேசய (குயில் விடு தூது), கிரா சந்தேசய (கிளி விடு தூது) ஆகிய தூது இலக்கியங்கள் மகா வெலிகமை எனும் முஸ்லிம் குடியேற்றத்தைப் பற்றியும் வெலிகமையில் வாழ்ந்த சோனகப் பெண்களைப் பற்றியும் கூறுகின்றன[10][18].
வெலிகமையிலிருக்கும் தப்ரபேன் தீவைச் சூழவுள்ள இடங்கள் ஒரு சில ஹொலிவூட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக் களங்களாயின. இத்தீவைப் பற்றி எழுதப்பட்ட பாடல்களும் நூல்களும் கூடக் காணப்படுகின்றன.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரபுக் குடியேற்றங்களைக் கொண்டுள்ள வெலிகமையில் முஸ்லிம்களின் இடம் மிக முக்கியமானதாகும். இலங்கையின் முதலாவது அறபு இசுலாமியக் கல்லூரியாகிய பாரி மதுரசாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 1984 ஆம் ஆண்டு திசெம்பர் 24 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும், வெலிகமையில் முக்கிய தளத்தைக் கொண்டுள்ள அகில இலங்கை றிபாய் தரீக் சங்கத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2002 யூலை 26 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.
வெலிகமை நகரினுள் ஒல்லாந்தர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் ஆங்கிலேயர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகர்ப் பகுதிகளில் மேலும் சில கிறித்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இலங்கைக்கு வந்த மெத்தோடிஸ்த திருச்சபையினர் முதன் முதலாக வெலிகமையிலேயே வந்திறங்கினர்.[19] இந்துக் கோயில்கள் என்று குறிப்பிடத் தக்களவு எதுவும் காணப்படுவதில்லையாயினும் முற்கால இந்துக் கோயில்கள் தற்காலத்தில் பௌத்த விகாரைகளாகப் பரிணமித்துள்ள சில இடங்கள் இருக்கின்றன.