Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

வரட்சியால் உருவாகும் மின்சார நெருக்கடி!கடந்த வருட இறுதிப் பகுதியில் கிடைக்கப் பெற வேண்டிய வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சியை எதிர்பார்த்த அளவு நாடு பெற்றுக் கொள்ளவில்லை. அத்தோடு வருடத்தின் ஆரம்ப மூன்று மாதங்களும் நாட்டுக்கு மிகக் குறைவான மழைவீழ்ச்சி கிடைப்பதும் வழமையானதே.
இதனால் இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் நாட்டில் அதிகம் வெப்பமான காலநிலை நிலவி வருகின்றது. இதன் விளைவாக புத்தளம், குருநாகல், மன்னார் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வரட்சி நிலை ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டங்களில் தென்னை உள்ளிட்ட ஏனைய மரஞ்செடிகளும் நீரின்றி அழிவடைவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
அத்தோடு இம்மாவட்டங்களின் சில பிரதேசங்களில் குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பிரதேச மக்கள் குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் பலவித அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
இவை இவ்வாறிருக்க, நாட்டில் கடும் வெப்ப காலநிலை நிலவுவதன் விளைவாக மக்கள் மத்தியில் மின்பாவனையும் அதிகரித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தகவல்களின்படி, அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு வருடமும் மின்சாரத் தேவை பத்து வீதத்தினால் அதிகரித்து வருகின்றது. இது கவனிக்கத்தக்க விடயமாகும்.
அதிலும் கடந்த வெள்ளியன்று மாத்திரம் முழு நாட்டிலும் 2500 மெகா வோர்ட் மின்சாரம் பாவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நாட்டில் அண்மைக் காலத்தில் அதி கூடிய மின்சாரம் பாவிக்கப்பட்ட தினமாக இத்தினம் திகழ்கின்றது.
இன்றைய காலகட்டத்தில் மின்சாரமானதுஇ மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக மாறியுள்ளது. மனிதன் பாவிக்கின்ற எல்லாப் பொருட்களும் பெரும்பாலும் மின்சாரம் கொண்டுதான் இயக்கப்படுகின்றன. அதனால் மின்சாரம் இல்லையேல் மனித வாழ்வே ஸ்தம்பித்து விடக்கூடிய நிலைமை காணப்படுகின்றது. மின்சாரம் அந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.
தற்போது அதிக உஷ்ண காலநிலை ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம் ஏற்கனவே மழைவீழ்ச்சியும் கிடைக்கப் பெறாததால் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமோ என்ற அச்சம் பலர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா, தற்போது நாட்டில் அதிக உஷ்ணமான காலநிலை நிலவுகின்ற போதிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது. நாட்டின் தேசிய மின் கட்டமைப்பில் போதிய அளவு மின்சாரம் இருப்பதோடு நீர்த்தேக்கங்களிலும் போதியளவு நீர் உள்ளதாகவும்' குறிப்பிட்டிருக்கிறார்.
கடும் வெப்பநிலை காரணமாக மின்பாவனை அதிகரித்துள்ள போதிலும் மின்வெட்டை அமுல்படுத்தப் போவதில்லை என் மின்சக்தி அமைச்சு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இலங்கைக்குத் தேவையான மின்சாரத்தில் 40 வீதம் தண்ணீரைக் கொண்டுதான் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதேநேரம் நிலக்கரி,டீசல், சூரிய சக்தி, காற்று போன்ற மூலங்கள் மூலமும் இங்கு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனால் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது.
மேலும் நாட்டில் மின்தேவை அதிகரித்து வருவதால் சூரிய சக்தி மூலமான மின்சார உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கி உள்ளது.
என்றாலும் அதிக வெப்ப காலநிலை காரணமாக மின் பாவனையில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்புக்கு ஏற்ப அதன் உற்பத்தியையும் அதிகரிப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் எவ்வித நெருக்கடிக்கும் முகம் கொடுக்காது 24 மணித்தியாலமும் தொடராக மக்களுக்கு மின்வசதியை வழங்கக் கூடியதாக இருக்கும்.
இந்நாட்டு மக்கள் இவ்வசதியை எவ்வித நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்காது அண்மைக் காலமாகப் பெற்றுக் கொள்வது குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆனால் இலங்கைக்கு அருகிலுள்ள இந்தியா, நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் மணித்தியாலக்கணக்கில் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. அவ்வாறான நிலை இங்கில்லை. ஏனெனில் மின்சாரத்தின் தேவையும் முக்கியத்துவமும், அவசியமும் இங்கு தெளிவாக உணரப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் மின்சாரப் பாவனையில் நிலவுகின்ற வீண்விரயத்தை தவிர்ப்பதில் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின்சாரம் மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் இதன் உற்பத்தியையும் பாவனையையும் சீராகவும் ஒழுங்கு முறையாகவும் பேண வேண்டும். அப்போதுதான் மின்பாவனை அதிகரித்த போதிலும் மின் வெட்டு இன்றி அதனை பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

0 Comments:

Post a Comment