Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக கல்விமுறை மாற்றமடைய வேண்டும்

கல்வி என்பது பிள்ளையின் உள்ளே இருக்கின்ற ஆற்றலை வெளிக்கொண்டு வருவதாகும். கல்வியை வழங்குவதில் சமூகத்தின் பங்கும் முக்கியமானதாகும்.கல்வி மூலமே அறிவு சார்ந்த சமூகம் உருவாக்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி சமூகத்திலே மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு கல்விக்கு உள்ளது.
சமூக வாழ்க்கைக்குப் பொருத்தமானவற்றைக் கற்பதில் ஈடுபடுகின்ற சமூகச்செயன்முறையே கல்வியாகும். இதனடிப்படையில் கற்றலுக்கு அத்திவாரமிடுகின்ற இடம் என்ற வகையில் பாடசாலைக்கு பிரதான இடமுண்டு.சமூகமாற்றத்திற்கு ஆசிரியர்களே பிரதான காரணமாக அமைகின்றனர். ஆசிரியர்களால் மட்டுமே கல்விமூலம் மாற்றத்தினை ஏற்படுத்தவும், அதற்கான வழிகாட்டல்களை வழங்கவும் நல்ல சமூகப்பிரஜைகளை உருவாக்கவும் முடியும்.
பிள்ளையானது பாடசாலைக் கற்றலில் தான் பெற்ற அறிவினைக் கொண்டு சூழலில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் பிரதான காரணயாகக் கல்வியே காணப்படுகின்றது. அத்துடன் நாட்டில் ஏற்படும் பொருளாதார அபிவிருத்திக்கேற்ப கல்விக்கான செலவினங்களும் மாற்றமடையும் தன்மையுடையனவாக அமைகின்றன.குறிப்பாக இதுவரை காலமும் இலங்கையில் கல்விக்கான நிதி 3.5 சதவீதமாக காணப்பட்டு வந்தமையும் 2017ம் ஆண்டு முதல் 7.5சதவீதமாக உயர்த்தப்பட்டதையும் காணமுடிகிறது.
இலங்கையில் இலவசக்கல்வி நடைமுறையில் உள்ளது. தரம் - 11 வரை கட்டாயக்கல்வி என்ற முறையும் காணப்படுகின்றது. இத்தகைய தன்மையினால் வறிய மாணவர்களும் பொருளாதாரப் பிரச்சினைகளின்றி தமது கற்றலை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் ஒவ்வொரு ஆட்சிமாற்றங்கள் ஏற்படும் போதும் கல்விக்கான நோக்கங்களும் மாறுபடுகின்றன.குறிப்பாக மனனம் செய்யும் கல்வி, ஆசிரியர் மையக்கல்வி, மாணவர் மையக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி என கற்றல், கற்பித்தல் முறைமைகள் காலத்தினதும் சமூகத்தினதும் தேவைக்கேற்ப மாற்றமடைந்து வருகின்றன.
பாடசாலைக்கற்றலில் மாணவர்கள் அரசியல் தொடர்பான விடயங்களைக் கற்கும் போது அது தொடர்பான தெளிவு சமூகத்திற்கும் சென்றடைகின்றது.குறிப்பாக க.பொ.த. உயர்தரத்திலே கலைப்பிரிவில் அரசியல் விஞ்ஞானம் என்ற பாடத்தைக்கற்றல்.இவ்வகையில் கற்றலினூடாக சமூகமாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
மற்றும் தொழிநுட்பவியல்சார் கல்வியும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதில் பிரதான பங்கு வகிப்பதனை அவதானிக்க முடிகின்றது. கணினி, இணையம் போன்ற தொழிநுட்பங்களின் ஊடாக ஒவ்வொருவரும் பலவிடயங்களைக் கற்கின்றனர்.இதற்கு தொழிநுட்பவியல்சார் கருவிகளை எவ்வாறு உபயோகிப்பது தொடர்பான அறிவு கல்வி மூலம் ஏற்படுத்தப்படுகின்றமை முக்கிய விடயமாகும். உதாரணமாக தகவல் தொழிநுட்பம் எனும் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டு க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும்,பல்கலைக்கழகக் கல்வியிலும் பிரதானமாக அமைகின்றது. இதனால் ஒவ்வொருவரும் தமக்குத் தேவையான விடயங்களை இணையத்தில்தேடிக் கற்க எத்தனிக்கின்றனர். இத்தகைய தொழிநுட்ப வளர்ச்சியானது சமூகத்தினிடையே பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மிகவேகமாக மாறிவரும் சமூகத்தில் ஆங்கிலமொழி பிரதான இடத்தைப் பெற்றுள்ளது. தொழில் ரீதியாகவும் வேறு தேவைக்காகவும் மிக முக்கியமாகக் கருதப்படுவது ஆங்கில மொழியாகும்.குறிப்பாக நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது ஆங்கில அறிவு எத்தகைய மட்டத்தில் உள்ளது என்பதனைப் பொறுத்தே வேலை வழங்குகிறார்கள். ஆங்கிலமொழிக் கல்வியின் முக்கியத்துவத்தினை மையமாகக் கொண்டு இலங்கையின் கல்வி திட்டங்களிலும் சில செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிமனிதனை சமூக வினைத்திறன் கொண்டவனாக மாற்றுவதற்கு தொழிற்கல்வி அவசியமானதாக அமைகின்றது. சமூகத்தில் ஒருவரது தொழிலினைக் கொண்டே அவரது அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தொழில் பற்றிய கல்வி அனைவருக்கும் மிகவும் அவசியமானதாகக் காணப்படுகின்றது. இவ்வகையில்,தொழிற்கல்வி தொடர்பாக இலங்கையில் பல​வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தொழிற்பாடங்கள் கலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை, வாழ்க்கைத்தேர்ச்சி, விவசாயம், தொழில்நுட்பவியல் போன்ற பாடங்கள் அறிமுகம் என்பன அவற்றில் சிலவாகும்.
பாடசாலையை விட்டு நீங்கியவர்களை இணைத்து தொழிற்பயிற்சிகளை வழங்கல், தொழிநுட்பக் கல்லூரிக் கற்கை நெறிகள் என்பனவும் இவற்றில் அடங்குகின்றன.
இவ்வாறு அனைவரும் தொழிலினைப் பெற்றுக் கொள்கையில் கல்வியின் மூலம் சமூகம் மாற்றமடைவதனைக் காண முடிகிறது.
இனம், நிறம், சமூக நிலைமை என்பவற்றைக் கவனத்திற் கொள்ளாது வயது, திறமை, நுண்ணறிவு என்பவற்றில்சமவாய்ப்பான கல்வியை வழங்குதல் ஜனநாயக கல்வியாகும். இலங்கையில் இதற்கான நடவடிக்கைகளாக இலவசக் கல்வி,இலவச சீருடை,இலவசப் பாடநூல்,இலவச மதிய உணவு,புலமைப் பரிசில்கள் போன்றவை இருப்பதோடு கல்வியானது எல்லோருக்கும் உரித்துடையதாக பரவலாக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலத்திலே ஆண்களை விட பெண்கள் கல்வித்தரத்திலே முன்னிலை வகிப்பதனை காண முடிகின்றது.இது கல்வியினால் ஏற்பட்ட சமூக மாற்றமாகவே இனங்காணப்படுகின்றது. இவை தவிர தொலைக்கல்வி, வாழ்நாள் நீடித்த கல்வி, விழுமியக்கல்வி போன்றவற்றின் மூலமாகவும் சமூக மாற்றம் ஏற்படுவதனை அவதானிக்க முடிகின்றது.
ஒட்டுமொத்தமாக உற்றுநோக்குகின்ற போது கல்வி மூலம் ஏற்படுத்தப்படும் சமூகமாற்றமானது நிரந்தரமானதாக உள்ளதோடு மட்டுமல்லாமல் கற்றலினால் ஏற்படும் அறிவானது பல சமூகப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் அமைந்து விடுகின்றது என்பதில் ஐயமில்லை.
ஜெ. ஜெயரேகா
கல்வியியல் துறை சிறப்புக்கற்கை, கிழக்குப் பல்கலைக்கழகம்

0 Comments:

Post a Comment