பொறுப்புணர்வுள்ள சாரதிகளே இன்றைய அவசிய தேவைஇலங்கையில் அண்மைக்காலமாக வீதிவிபத்துக்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இவ்வாறான ஒரு நிலை முன்னொரு போதுமே இந்நாட்டில் ஏற்பட்டிருக்கவில்லை. தற்போது வீதிவிபத்துக்குக் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 10 பேரளவில் உயிரிழக்கும் அளவுக்கு நிலைமை வளர்ச்சி பெற்றிருக்கின்றது. அதேநேரம் வீதிவிபத்துக்கள் இடம்பெறாத நாளும் இல்லை என்ற நிலைமையும் அண்மைக் காலத்தில் தான் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த திங்களன்று தம்புள்ளையில் ஆட்டோ வண்டியொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ஸ்தலத்திலேயே பலியாகினர். அந்த விபத்து இடம்பெற்று 24 மணித்தியாலங்கள் கழிவதற்குள் சிலாபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றில் பயணிகள் பஸ் வண்டியொன்று மோதுண்டதால் 37 பேர் காயமடைந்தனர். அந்த விபத்து இடம்பெற்ற சொற்ப நேரத்தில் மட்டக்களப்பு புனானையில் பஸ்ஸொன்றும் டிப்பர் வண்டியொன்றும் மோதுண்டதில் 28 பேர் காயமடைந்தனர்.
இவ்வாறு இந்நாட்டில் வீதிவிபத்துக்கள் என்பது சர்வசாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. அதன் காரணமான உயிர் இழப்புக்களும் காயங்களும் சொத்தழிவுகளும் பெரிதும் அதிகரித்துள்ளன. இந்நாட்டு போக்குவரத்துப் பொலிஸாரின் தரவுகளின்படி வருடாந்தம் சுமார் 40 ஆயிரம் வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. அவ்விபத்துக்களால் 2500 முதல் 3000 பேர்வரை உயிரிழக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து அமைச்சு வீதி விபத்துக்கள் காரணமாக ஏற்படுகின்ற உயிரிழப்புக்கள் குறித்து விடுத்துள்ள அறிக்கையில், 2016 இல் 3003 பேர் உயிரிழந்ததாகவும், 2017 இல் 3101 பேர் உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.இதன்படி ஏற்கனவே அதிகரித்துக் காணப்படுகின்ற வீதி விபத்துக்களும் அதன் விளைவான உயிரிழப்புக்களும் காயங்களும் தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமே உள்ளன என்பதையே இத்தரவு வெளிப்படுத்தி நிற்கின்றன.
மேலும் வீதிவிபத்துக்களினால் உயிரிழப்போர்களுக்கு மேலதிகமாக காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கவென வருடாவருடம் கோடிக்கணக்கான ரூபாவை அரசாங்கம் செலவிடுகின்றது. அத்தோடு உயிரிழப்போருக்கு நஷ்டஈடு வழங்கவும் அவ்வாறான தொகை செலவிடப்படுகின்றன.
வளர்முக நாடான இலங்கையில் வீதிவிபத்துக்கள் அதிகரித்திருப்பதானது, நாட்டின் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. இந்நாட்டில் 98 ஆயிரம் கிலோ மீற்றர் நீளமான வீதிகள்தான் உள்ளன. அவற்றில் கிராமிய வீதிகள், பிரதேச சபைகளுக்குக் கீழான வீதிகள், மாகாண வீதிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் என்பன அடங்கும்.
இருந்தபோதிலும் 2017 ஆம் ஆண்டின் வாகனங்கள் தொடர்பான பதிவுகளின்படி இந்நாட்டில் 70 இலட்சம் வாகனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் 38 இலட்சம் மோட்டார் பைசிகிள்களும், 11 இலட்சம் ஆட்டோ வண்டிகளும் அடங்கியுள்ளன. எஞ்சியவைதான் ஏனைய வாகனங்களாக விளங்குகின்றன. இதன்படி இந்நாட்டின் வீதிக்கட்டமைப்பினால் கொள்ளளவு செய்யக்கூடியதை விடவும் வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.. அதுவும் வீதிவிபத்து அதிகரிப்பதற்கு ஒரு காரணம் என்பதில் ஐயமில்லை.
அதேநேரம் சாரதிகள் மத்தியில் காணப்படும் போட்டி மனப்பான்மை, போக்குவரத்து சட்டங்களை மதியாமை, பதற்றம் போன்ற பண்புகளும் வீதிவிபத்துகள் அதிகரிக்கவென பெரிதும் உதவி வருகின்றன. இவ்வாறான பண்புகள் பெரும்பாலான சாரதிகளிடம் காணப்படுவதால் அவர்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் வாகனத்தின் எஞ்சின், டயர்கள் உள்ளிட்டவை தொடர்பில் பரீட்சித்துக் கொள்வதுமில்லை. அதேவேளை தாம் மனிதர்கள் நடமாடும் வீதிகளில் பயணிக்கின்றோம் என்பதை பெரும்பாலும் மறந்தவர்களாகவே அனேக சாரதிகள் வாகனங்களைச் செலுத்தகின்றனர்.
சில சாரதிகள் அண்மைக்காலமாக புழக்கத்திற்கு வந்துள்ள மாவா, போதைப்பாக்கு போன்ற சில போதைப்பொருட்களை பாவித்த நிலையிலும் வாகனங்களைச் செலுத்துவதாக தகவல்கள் உள்ளன. இன்னும் சில சாரதிகள் வாகனங்களின் பாடல் கருவிகளை அளவுக்கு மீறிய சத்தத்துடன் பாடல்களை ஒலிக்கச் செய்கின்றனர். அதில் பயணிகள் மாத்திரமல்லாமல் சாரதிகளும் கூட லயித்த நிலையில் வாகனத்தைச் செலுத்துவதாலும் ஏற்கனவே வீதிவிபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு வீதிவிபத்துக்கள் அதிகரித்திருப்பதற்கு பல்வேறு காரணங்கள் துணை புரிந்துள்ள்ளன. அவை மறைக்க முடியாத உண்மைகளாகும். அதனால் இவ்வீதிவிபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் வீதிப்போக்குவரத்து சட்டங்களையும் கடுமைப்படுத்தியுள்ளது. வீதிப்போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதமும், தண்டனைகளும் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இருந்தும் வீதி விபத்துக்கள் குறைந்ததாக இல்லை.
இவ்வாறான பின்புலத்தில்தான் இந்நாட்டில் வீதிவிபத்துக்கள் ஒரு பொதுப்பிரச்சினையாக மாறிவிட்டதா என்ற ஐயத்தைத் தோற்றுவித்திருக்கின்றது. என்றாலும் இது தீர்வு காணப்படக்கூடிய ஒரு பிரச்சினையாகும். குறிப்பாக சாரதிகள் மத்தியில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் கட்டியெழுப்பப்படுவது மிகவும் முக்கியமானது.
அதேநேரம் தமது வாகனத்தில் இருக்கும் மனிதர்களின் பாதுகாப்புக்கு பொறுப்புக்கூற வேண்டிய தாம் வீதியில் பயணிக்கும் ஏனைய மனிதர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தப்படவேண்டிய பொறுப்பையும் தாம் கொண்டுள்ளேன் என்ற மனப்பான்மையை அவர்களின் மத்தியில் கட்டியெழுப்ப வேண்டும். அப்போது வீதிவிபத்துக்கள் ஒரு பிரச்சினையாகவே இராது. அவை நாட்டுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய நிலைமையை ஏற்படுத்தும்.
ஆகவே இவ்வாறான விடங்களை உள்வாங்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது வீதி விபத்துக்களை குறைப்பது மிகவும் இலகுவான காரியமாகிவிடும். அதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும்.