எமது உள்ளத்து உணர்வுகளே உயர்வுக்கு வழிகாட்டும் கருவிகள்

எமது உள்ளத்து உணர்வுகளே உயர்வுக்கு வழிகாட்டும் கருவிகள்

செல்வம் என்பது பணத்தை சேர்த்து குவிப்பது மட்டுமல்ல
செல்வம் என்பது எமது வாழ்க்கையின் அடிப்படைத் தேவை. எமது வாழ்க்கையின் எல்லாப் பகுதியிலும் செல்வம் நிறைந்தளவு அமையும் போது நாம் செல்வத்தை முழுமையாக அடைகிறோம். செல்வமான வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கையாகும். செல்வம் என்பது பணம் மட்டும் அல்ல.
அன்பு, உடல்நலம், பிள்ளைச் செல்வம், பணச் செல்வம், உருவாக்கும் செல்வம் என்று செல்வத்தை நாம் பிரிக்கலாம். இந்த செல்வங்கள் எங்கள் வாழ்க்கையில் அமைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும். எம்மை நாம் புரிந்து கொள்ளும் போதுதான் எம்மால் இந்த செல்வ வாழ்க்கையை அடைய முடியும்.
எமது சமுதாயத்தில் பல நம்பிக்கைகள் இருக்கின்றன. அதில் ஒன்று பணம் இருந்தால் செல்வ வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பது. அதேநேரம் அவர்களிடம் இன்னுமொரு நம்பிக்கை இருக்கிறது. பணக்காரர்கள் நல்லவர்கள் அல்ல அல்லது அவர்கள் ஆன்மிகத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பது.
பணம் இல்லாமல் எம்மால் செல்வவாழ்க்கையை அனுபவிக்க முடியாது. ஆனால் பணம் மாத்திரம் செல்வ வாழ்க்கையைத் தராது. எமது செல்வ வாழ்க்கை எமது இதயத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. நாம் எல்லோரும் சக்திகளால் உருவாக்கப்பட்டு சக்திகளால் எந்த நேரமும் பாதிக்கப்படுகிறோம். எமது உள்சக்திகள், வெளியில் உள்ள சக்திகளே எமது செல்வ வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன.
எமது உள்சக்திகள் என்பது எமது இதய சக்திகள் ஆகும். அன்பு, தன்னிரக்கம், நன்றி உணர்வு, மன்னிக்கும் தன்மை என்பன இதய சக்திகளாகும். எமது மனச்சக்திகள் எமது எண்ணங்கள், நம்பிக்கைகள் உணர்வுகள் இவற்றோடு சேர்ந்து இயங்குகின்றன. எமது நம்பிக்கைகளை எமது வாழ்க்கையின் அனுபவத்தில் அல்லது பெரியவர்களிடம் இருந்து நாம் எடுக்கிறோம்.
நாம் செல்வவாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றால் எமது உள்மனசக்திகளை நாம் உணர வேண்டும். அதாவது நாம் என்ன செல்வத்தை அடைய வேண்டும் என்றாலும் முதலில் அதனை அடைய முடியும் என்று நம்ப வேண்டும். அதன் பிறகு அதற்கேற்ப எண்ணங்களை, உணர்வுகளை உருவாக்க வேண்டும். ஆனால் நாம் எமது அடிமனதில் "நான் செல்வவாழ்க்கைக்கு தகுதி இல்லாதவன்" அல்லது "செல்வத்தை அடைவது கஷ்டமான ஒன்று" என்ற நம்பிக்கைகளைக் கொண்டு இருக்கும் போது எம்மால் எப்படி செல்வத்தை உருவாக்க முடியும்?
ஒரு நம்பிக்கை என்பது உணர்வும் எண்ணமும் கலந்து பலதடவை எம்மால் நினைக்கப்பட்டு உருவாகிறது.
எமது உணர்வுகள் எமது வழிகாட்டும் கருவிகளாகும்.
சுவாமி விவேகானந்தர் "தன்னைப் பற்றி முழுமையாக எல்லாம் தெரியும் என்று சொல்பவர்தான் உண்மையான மனிதர்" என்றார்.
உங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்ன எண்ணங்கள், உணர்வுகளை நீங்கள் ஒவ்வொரு நாளும் நினைக்கிறீர்களா? ஏன் அவற்றை நினைக்கிறீர்கள்? என்ன நம்பிக்கைகளை நீங்கள் கொண்டு இருக்கிறீர்கள்? ஏன் அவற்றைக் கொண்டு இருக்கிறீர்கள்? இவற்றுக்கும் உங்கள் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்கிறதா? என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்புகிறீர்கள்? எப்படியான வாழ்க்கை வாழுகிறீர்கள்? உங்கள் எல்லா விருப்பங்களும் நிறைவாக உங்கள் வாழ்க்கையில் இருக்கின்றதா? அப்படி இல்லை என்றால் நீங்கள் அதனை அடைய முடியாமல் என்ன உங்களைத் தடுக்கிறது? உங்கள் வாழ்க்கையை உங்களால் மாற்ற முடியும் என்று நம்புகிறீர்களா அல்லது அது விதி என்று வாழுகிறீர்களா?
இவ்வினாக்களுக்ெகல்லாம் ஆக்கபூர்வமான விடைகள் அவசியம்.
வாழ்க்கையில் எதிரொலிக்கும் அனுபவங்கள் எமது நம்பிக்கைகளில் இருந்தே உருவாகின்றன. எமது பழக்கவழக்கம் நம்பிக்கைகள் ஒன்றாக சேர்ந்து இயங்கும். நல்ல நம்பிக்கைகள் இதயத்தை சேர்ந்து இருக்கும். முடியும் என்ற உணர்வைக் கொண்டு இருக்கும். அதே மாதிரி அன்பு, நன்றி, தன்னிரக்கத்தோடு இவை பிணைந்து இருக்கும்.
நாம் எப்படி வாழ விரும்புகிறோமோ அப்படி எம்மால் நம்பிக்கைகளை பழக்கவழக்கத்தை மாற்றுவோமானால் எம்மால் செல்வமான ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
உங்களைச் சூழ்ந்து இருப்பவர்கள் யார்? பொதுவாக நண்பர்கள். எமது சக்தி எப்போதும் அதற்கேற்ற உறவுகளை கொண்டு வரும்.ஆனால் நீங்கள் உங்கள் நம்பிக்கைகள் மாற்றும்போது உங்கள் நண்பர்கள் மாறுவதைக் காணலாம். எமது நம்பிக்கை மாறும் போது எமது வாழ்வும் மாற்றமடையும்.