Breaking News

>

காற்று மாசடைவதால் சிறுநீரகத்துக்கும் பாதிப்பு



காற்று மாசடைதல் காரணமாக சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுமென ஆய்வுகள் இப்போது உறுதி செய்துள்ளன.
பூமியில் வளிமண்டலம் மாசடைவதால் ஏற்படும் நோய்கள் குறித்து அநேகமானோர் அறிந்துள்ளார்கள். அவற்றில் அண்மையில் புதிதாகக் கூறப்படும் விடயம் என்னவென்றால் வாயு மண்டலம் மாசடைவதால் மனிதன் சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகின்றான் என்பதாகும். அமெரிக்காவின் சிறுநீரக நோய்தொடர்பான ஆய்வாளர்கள், சமூகத்தின் நிபுணர்கள் சிலர் வாயுமண்டலத்தில் ஏற்படும் மிகச் சிறியளவிலான மாசடைதல் கூட மனிதனின் சிறுநீரகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் காரணியாக அமையுமெனக் கூறியுள்ளார்கள்.
வாயு மண்டலம் மாசடைதல் காரணமாக ஒவ்வாமை, ஆஸ்துமா, சுவாச நோய்கள், புற்றுநோய், இருதய நோய் என்பன ஏற்படுமென முன்னர் ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாயுமண்டலம் மாசடைதல் சிறுநீரக நோயை ஏற்படுத்துமென எந்தவொரு ஆய்வாளரும் உறுதி செய்திருக்கவில்லை.
புதிய ஆய்வறிக்கைகள் மூலம் வாயுமண்டலத்திலுள்ள மாசடைந்த தூசு, புகை, கரி மற்றும் திரவ நிலையிலுள்ள சிறு துணிக்கைகள் சுவாசத்தின் மூலம் எமது உடலில் நுழையும் போது அவை இரத்தத்துடன் கலந்து சிறுநீரகத்தை அடைகின்றன. சிறுநீரகத்தில் இரத்தம் வடிகட்டப்படுகிறது. அச்சந்தர்ப்பத்தில் இரத்தத்திலுள்ள மாசுகளால் சிறுநீரகம் பாதிப்படையும் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
அதைத் தவிர அந்த நுண்துகள்களால் சுவாசப்பை போன்ற ஏனைய உறுப்புகளும் பாதிப்படைவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
வாயு மண்டல மாசடைதல் சிறுநீரக நோய் ஏற்படுவதற்குக் காரணமா எனக் கண்டறிவதற்கான ஆய்வு 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஆய்வுக்கு தகவல்களைப் பெற இரண்டரை மில்லியன் நபர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களில் வாயுமண்டல தர நிர்ணயத்தை அளந்தறியவும் விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுத்தார்கள். அக்காலப்பகுதியில் அவர்கள் ஆய்வுக்குட்படுத்திய நபர்களின் சிறுநீரக செயற்பாடு குறித்த தரவுகளும் திரட்டப்பட்டன. அந்த ஆய்வுகள் மூலம் அக்காலப் பகுதியில் 44,753 பேருக்கு புதிதாக சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்பட்டமையை ஆய்வாளர்களால் உறுதி செய்ய முடிந்தது.
அதேபோல் ஒவ்வொரு வருடமும் 2,438 பேர் சிறுநீரக செயலிழப்பு பாதிப்புக்கு உட்படுவதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஐக்கிய அமெரிக்காவின் சில பிராந்தியங்களின் வாயு மண்டலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் தெற்கு கலிபோர்னியா, மிட்வெஸ்ட் மற்றும் வடக்கு பிராந்தியங்களும் அடங்கும். அவ்வாறான பரதேசங்களில் வசிப்பவர்கள் சிறுநீரக நோய்க்கு வெகுவிரைவில் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காற்று மாசடைதலுக்கும் மனித சிறுநீரக நோய்களுக்குமிடையிலான தொடர்புகளை வெளிப்படுத்தும் தரவுகள் இதுவரை மிக சொற்பமாகவே காணப்பட்டன. ஆனால் இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் காற்று மாசடைவதற்கும் சிறுநீரக பாதிப்புகளுக்குமிடையே தொடர்பு உள்ளதென தெளிவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என இந்த ஆய்வில் பங்குபற்றிய விஞ்ஞானி சியாட்- அல் – அலி குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே மிகவும் மோசமாக வாயுமண்டலம் மாசடைந்துள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் சிறுநீரங்கள் மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் வாயுமண்டல மாசடைதலால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது என நினைக்க முடியாதென்பதை ஆய்வாளர்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.
மஞ்சுளா விஜேரத்ன

No comments