மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் தொழிற்சங்கப் போராட்டங்கள்!

இலங்கை தபால் சேவை ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11 ஆம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வேலைநிறுத்தத்தில் தபால் சேவையைச் சேர்ந்த 23 தொழிற்சங்கங்கள் இணைந்து கொண்டுள்ளன. இதன் விளைவாக நாடெங்கிலும் தபால் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இதேவேளை இவ்வேலைநிறுத்தம் காரணமாக நாடெங்கிலும் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட தபால் பொதிகள் தபாலகங்களில் தேங்கிக் கிடப்பதாகவும் நாளொன்றுக்கு 17 கோடி ரூபா நஷ்டத்திற்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருவதாகவும் தபால் மாஅதிபர் ரோஹண அபேரட்ன தெரிவித்திருக்கின்றார்.
இது ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உரிய அறிவிப்பாகும். நாளொன்றுக்கு 17 கோடி ரூபா நஷ்டம் என்பது மிக இலேசான விடயமல்ல. இது நாட்டுக்கு இழைக்கப்படும் நஷ்டமாகவே கருதப்பட வேண்டும். அதனால் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் கவனம் செலுத்தி இவ்விடயத்தை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பது அவசியமான விடயமாகும்.
என்றாலும் தபால் மாஅதிபர், 'தபால் சேவை ஊழியர்களின் வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கைக் கோரிக்கை நியாயமானது என்றும் அவற்றுக்கு ஒரு மாத காலத்திற்குள் நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்க முடியும்' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
தபால் மாஅதிபரின் இந்த அறிவிப்பை நோக்கும் போது தபால் சேவை ஊழியர்கள் இவ்வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க முன்னர் தபால் மாஅதிபருடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்களா எனக் கேட்கத் தோன்றுகின்றது.
அதேநேரம் தபால் மாஅதிபர் இவ்வாறு அறிவித்துள்ள போதிலும் கூட அதனையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டுமெனக் கோரி மத்திய தபாலகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடத்தினர்.
தபால் மாஅதிபர் தபால் ஊழியர்களின் கோரிக்கையை நியாயமானது என்றும் ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கையில், இவர்கள் ஜனாதிபதி செயலாளரோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊர்வலம் நடத்தியுள்ளனர். அப்படியென்றால் இவர்கள் தமக்குப் பொறுப்பான தபால் மாஅதிபரின் அறிவிப்பை பொருட்படுத்தவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டியுள்ளது. இதனை ஒரு ஆரோக்கிய நடவடிக்கையாகவும் நோக்க முடியாது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் சொல்லக் கூடிய பதிலையே தபால் மாஅதிபர் இவ்வாறு கூறி இருக்கவும் முடியும் .
அதேநேரம் தபால் சேவை ஊழியர்களைப் போன்று ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்களும் தமது நிறுவனத்திற்குப் பொறுப்பான தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலாளருடன்தான் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என்று புறப்பட்டால் நிலைமை என்னவாகும். அதனால் தபால் சேவை ஊழியர்களின் கோரிக்கையை நியாயமானதாக நோக்க முடியாது.
மேலும் இந்த தபால் சேவை ஊழியர்கள் கொழும்பு மத்திய தபாலகத்திலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை நடாத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் காரணமாக கொழும்பின் இதயமாக விளங்கும் புறக்கோட்டை, கோட்டை உள்ளிட்ட சகல பிரதேசங்களிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கடும் வெயிலுக்கு மத்தியில் பயணிகள் பஸ் வண்களிலும் வாகனங்களிலும் பல மணித்தியாலயங்கள் காத்திருந்தனர். மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
கொழும்பின் இதயமாக விளங்கும் பகுதியில் தாம் முன்னெடுக்கும் ஆர்பாட்ட ஊர்வலம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர், அசௌகரியங்களுக்கு உள்ளாவர் என்பதை இந்த தொழிற்சங்க ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். ஆனால் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொள்ளாது செயற்படும் தொழிற்சங்கங்கள்தான் இலங்கையில் காணப்படுகின்றன. இதற்கு தபால் சேவை ஊழியர்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை வெளிப்படுத்தி விட்டனர்.
இவ்வாறான பின்புலத்தில்தான் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் சேவை ஊழியர்களின் விடுமுறைகளை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சகல ஊழியர்களும் உடனடியாக கடமைக்குத் திரும்ப வேண்டும் என்றும் தபால் மாஅதிபரினால் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கடமைக்குத் திரும்பாதவர்கள் வேலையிருந்து நீங்கியவர்களாகக் கருதப்படுவர் என்றும் அவர் அறிவித்திருக்கின்றார். இந்தப் பின்னணியில் தபால் சேவை ஊழியர்கள் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமேயொழிய மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையிலான செயற்பாடுகளை கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆகவே தபால் சேவை ஊழியர்கள் தமது கோரிக்கைக்கு நியாயமாக முறையில் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து நாட்டுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி, மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி தம் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேட முயற்சிக்கலாகாது. அதில் எவ்விதத்திலும் நியாயம் காண முடியாது.