ஜப்பான் மழை, வெள்ளம்: உயிரிழப்பு 100ஐ எட்டியது

ஜப்பானின் தென் மேற்குப் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும், நிலச்சரிவுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஆக உயர்ந்துள்ளது.
இந்த அனர்த்தங்களில் 50க்கும அதிகமானவர்கள் காணாமல்போயிருப்பதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேற்கு ஜப்பானின் சில பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் ஜூலை மாதத்தில் பதிவாகும் சாதாரண மழை வீழ்ச்சியை விடவும் மூன்று மடங்கு மழை பெய்துள்ளது. ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதால் கரையோரங்களில் இருக்கும் இரண்டு மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“இவ்வாறான மழையை நாம் இதற்கு முன்னர் அனுபவித்ததில்லை” என்று வானிலை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புதையுண்ட சேற்று மண்ணில் உயிர்தப்பியோரை தேடி மீட்பு பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஹிரோஷிமா பகுதியிலேயே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இதுவரை 87 பேர் பலியான நிலையில் திங்கட்கிழமை வெளியான தகவலின்படி, பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளனர். தொடர்ந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது என்று செய்தி வெளியிட்டுள்ளது.