பிரதமர் நாளை சிங்கப்பூர் பயணம் 6 ஆவது சர்வதேச நகர மாநாடு;


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிங்கப்பூரில் நடைபெறவுள்ள 6ஆவது சர்வதேச நகர மாநாடு மற்றும் அதனுடன் இணைந்தவாறு நடைபெறும் சிங்கப்பூர் சர்வதேச நீர் வார நிகழ்வு, தூய்மையான சூழல் மாநாடு ஆகிய மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (08 ஆம் திகதி) சிங்கப்பூரூக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில், சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங் (Lee Hsien Loong), பிரதிப் பிரதமர் மற்றும் பொருளாதார, சமூகக் கொள்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சொக் டொன், (Goh Chok Tong) உள்ளிட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் மட்ட அமைச்சர்கள் பலரை சந்திக்கவுள்ளார்.
நாளை மறுதினம் (09) சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் "நகர அபிவிருத்தி மற்றும் சூழலைப் பாதுகாத்தல்" எனும் தலைப்பில் பிரதான உரையை விக்கிரமசிங்க நிகழ்த்துவார்.
இம்முறை மாநாட்டின் கருப்பொருள் "புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஊடாக எதிர்காலத்திற்குப் பொருத்தமான நிலைபேறான நகரங்களை உருவாக்குதல்" என்பதுடன், முறையான நிர்வாகம் மற்றும் திட்டமிடல், தொழிநுட்பம் மற்றும் சமூகப் புதிய உற்பத்திகள், ஏனைய நகர மற்றும் பங்காளர்களுடன் முறையான தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களை உருவாக்கிக் கொள்வது தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்படும்.
பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வர்.