ஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு


தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக் இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ஜாகிர் நாயக் சமீபத்தில் மறுத்திருந்தார்.

நான் இந்தியா வருவதாக வந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. தவறானவையும் கூட. எனக்கெதிராக நியாயமற்ற விசாரணை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வரை இந்தியாவுக்கு வருவதாக திட்டமில்லை.

நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக நான் உணரும்போதுதான் என் தாய்நாட்டுக்கு வருவேன் என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது  திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் அருகேயுள்ள புட்ரஜெயா நகரில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மஹதிர் முஹம்மது, ‘ஜாகிர் நாயக்குக்கு மலேசிய நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  நேற்று (சனிக்கிழமை) காலை ஜாகிர் நாயக் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மதுவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மலேசியாவின் பிரபல பத்திரிகையான ‘பிரீ மலேசியா’ இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் அவர்கள் என்ன பேசிக் கொண்டனர்? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பிடுகின்றது.