Breaking News

>

வெலிகம மக்களுக்கான ஒரு விழிப்புணர்வு

-சுன்னத்தான கூட்டு உழ்ஹிய்யா செய்து விட்டோம்
பர்ழான கூட்டு ஸக்காத் எப்போது?--

இப்பதிவு எழுதப்படும் நோக்கம் எமது வெலிகாமத்தில் கடந்த ஹஜ் பெருநாள் தினங்களில் மேற்கொள்ளப்பட்ட குர்பான் மற்றும் கூட்டுக் குர்பான் தொடர்பிலான விவகாரங்கள் தொடர்பில் ஒரு விழிப்புணர்வைத் தரவாகும்.

உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தின் சடங்குகளில் மிக முக்கியமானதொன்றாகும். நமது ஊர் இளைஞர்களைப் பொறுத்தமட்டில் அண்மையில் சில வருடங்களாக இப்பொறுப்பான அமலை கூட்டாக செய்து இந்த அமலில் கூடியளவானோர் பங்களிக்க வேண்டும் மற்றும் சகல மக்கள் தரப்பினரும் இதனால் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் செயற்பட்டு வருகின்றனர்.

இப்பாராட்டத்தக்க பணிக்குரிய உயர்ந்த கூலியை அல்லாஹ் தந்தருள்வானாக. இவர்களது உயர்ந்த முயற்சியினால் எமதூரில் குர்பானிக்கென அறுக்கப்படும் பிராணிகளின் எண்ணிக்கை 275 ஐ எட்டியுள்ளது. இதனால் உழ்ஹிய்யா இபாதத்தினை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிவதோடு பயன் பெறுவோர் தொகையும் அதிகரித்துள்ளது. இதற்குரிய கூலியில் உயர்ந்த பங்கு கிடைக்கும்.

சுன்னத்தான அமலாகிய உழ்ஹிய்யாவைக் கூட்டாகக் கொடுத்து வெற்றிகரமான விளைவொன்றைக் காண முடிந்த நம்மால் அதனை விடவும் முக்கியத்துவம் கூடிய கூட்டாக செய்வதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கூட்டு ஸக்காத் திட்டத்தை எப்போது நடைமுறைப்படுத்தி எமதூருக்குப் பொருளாதார ரீதியான சுபீட்சமொன்றைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றோம்.

-இளைஞர்களே உங்கள் கையில்!!!

இஸ்லாம் பொருளாதார ரீதியான வெற்றிக்குப் பல்வேறு வழிகளைக் காட்டியுள்ள நிலையில் நமது வெலிகாம சூழலில் வட்டி வங்கிகள் முஸ்லிம் பகுதிகளுக்குள்ளேயே அதிகரிப்பதும் நமது முஸ்லிம் தாய்மார்களும் சகோதர, சகோதரிகளும் அதனை நோக்கித் தமது தேவைகளுக்காக படையெடுத்து இஸ்லாம் முற்றாக ஹராமாக்கிய வட்டிக்குள் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் நாளாந்தம் நிகழ்கிறது.

நம்மிடம் இருக்கின்ற ஓரிரு இஸ்லாமிய வங்கி முறைகளை சிறப்பாக நடாத்தும் வளங்கள் நம்மிடம் இல்லாமல் இருப்பதுடன் அவற்றை வலுப்படுத்தும் வழிகளையும் நாம் செய்யாமலிருக்கின்றோம். இதன் விளைவாக வட்டிக் கடைகளையும், அடகுக் கடைகளையும் நாடும் ஒவ்வொருவருக்கெனவும் மறுமையில் நமது சமூகத்தில் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டிவரும்.

இன்றுள்ள வியாபார சூழலில் போட்டி அதிகரித்து நமது வியாபார நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருவதை நாம் கண்டுவருகிறோம். அண்மைக் கால எமது வெலிகாமத்தின் முஸ்லிம் வியாபாரத் தளங்கள் பாரிய வீழ்ச்சியுற்றுள்ளன. நடத்தப்பட்ட ஒரு சிறு ஆய்வின் முடிவில் சுமார் 35% ஆன முஸ்லிம் வியாபாரம் வீழ்ச்சிகண்டிருக்கிறது. கல்வி, அரசியல், நிர்வாகத் துறைகளில் சாதனைகள் செய்யாத நாம் இன்று வியாபாரத்திலும் வீழ்ச்சியுற்றால் இன்னும் கணக்கெடுக்கப்படாத வீழ்ச்சியடைந்த சமூகமாகி விடலாம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

எனவே இந்த அவலங்களுக்கு முடிவு காண்பதற்கு நாம் முதலாவது எடுத்து வைக்க வேண்டிய அடியாக கூட்டு ஸக்காத்தினை நோக்கி நகர வேண்டும்.

சுன்னத்தான கூட்டு உழ்ஹிய்யாவை வெற்றிகரமாக செய்து முடித்த எமது இளைஞர்களுக்கு பர்ளான ஸக்காத்தையும் கூட்டாக நிறைவேற்றி உயர்ந்த பலன்களை இந்த ஊருக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு வல்ல இறைவன் துணை நிற்பான்.

சிந்திப்போமா இளைஞர்களே!!!
.

No comments