ஒரே பாடத்திட்டம் ஒரே தலைமைத்துவம் !இன்று உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளப் பாவனை அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக முஸ்லிம்களிடம்
Whatsup, Facebook பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது. இவற்றினால் சமூகத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகளும் அப்பிரச்சினைகளை தீர்க்க நாம் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை அம்சம் என்னவென்று ஆராய்வதே இன்றைய பதிவின் நோக்கமாகும்.

முஸ்லிம் சமூகத்தில் பால், வயது வேறுபாடின்றி அணைத்து மட்டங்களிலும் சமூகவளைத்தளப் பாவனை அதிகரித்துள்ள நிலையில் இவற்றை மக்கள் பயன்படுத்தும் விதத்தில் பிரதானமாக இரண்டு வகையினரை அவதானிக்கலாம். முதலாவது வகையினர் தமது உல்லாசம் சார்ந்த பதிவுகளை பதிவிட்ட வண்ணமுள்ளனர். மற்றைய சாரர் இலங்கையில் இஸ்லாமிய எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தங்களுக்குள் உப குழுக்களாக பிரிந்து பிற சமூகத்திற்கு இஸ்லாமிய வாழ்வியலை காட்டுவதற்கு பதிலாக தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர்.

முதல் சாராரின் செயற்பாட்டால் இஸ்லாமிய ஒழுக்க வீழ்ச்சி ஏற்பட்டதுடன் இரண்டாம் சராரின் செயற்பட்டால் இஸ்லாமிய எழுச்சிக்கு பதிலாக இயக்கவெறி வளர்ந்து முஸ்லிம் சமூகம் அழிவை நோக்கி சென்ற வண்ணமுள்ளது.

இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படுகின்ற இயக்கவெறி உணர்வை நமது எதிரிகள் புலனாய்வு செய்தால் நமக்கு இனவாதிகளை கொண்டு தாக்காமல் ஒவ்வொரு கிராமத்திலும் புதிதாக ஒரு ஜும்மா பள்ளிவாசலை கட்டுவதற்கு நிதி உதவி வழங்குவார்கள். எனின்றால்,

இவ்வாண்டு சித்திரை புத்தாண்டுக்கு ஒரு மாதத்திற்கு முன்னால் அம்பாறை, கண்டி கலவரங்கள் ஏற்பட்ட போது ஒற்றுமையாக செயற்பட்ட எமது முஸ்லிம் சமூகம் முஸ்லிம்களின் ஈதுல் பித்ர் பெருநாளைக்கு முன்னால் ரமழானில் தராவிஹ் தொழுகை விடயத்தில் பிளவுபட்டு பள்ளிவாசலுக்குள்ளே தாக்குதல் நிகழ்த்தினர். மேலும் சிங்களவர்களுடன் ஒற்றுமையாக ரமழானில் இப்தார் செய்துவிட்டு ஷவ்வாலில் ஈதுல் பித்ரை முஸ்லிம்கள் பிரிந்து கொண்டாடினர்.

இவ்வாறு நமது முஸ்லிம் சமூகம் பிரிந்து செயற்படுவதை எதிரிகள் புலனாய்வு செய்கின்றனர் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு முன்னால் இரு சவால்கள் உள்ளது. முதலாவது இஸ்லாமிய உணர்வற்று வாழுகின்றவர்களை இஸ்லாமிய உணர்வுள்ளவர்களாக மாற்றுவது அடுத்தது இஸ்லாமிய வாழ்க்கை என்ற பெயரில் இயக்க வெறியுடன் வாழ்கின்றவர்களை இஸ்லாமிய உணர்வுள்ளவர்களாக மாற்றுவது. இதற்கு மேலதிகமாக இஸ்லாமிய சமூகத்தை பலப்படுத்துவது என்பன எம் முன்னால் உள்ள பிரதான சவால்களாகும்.

இவற்றை முறியடிக்க நமக்கு சிறந்ததொரு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. தற்போது சமூகத்தில் பெரும்பாலனோர் இந்த இடத்தில்தான் உள்ளனர். ஆனால் அவர்களால் யாருக்கு தலைமைத்துவத்தை வழங்குவது என்று தீர்மானிப்பது கடினமாக உள்ளது. எனின்றால் நமது முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஆளூமைகளுக்குத்தான் தலைமைத்துவம் வழங்க வேண்டும்.

இந்நிலையில் இலங்கையில் உருவாக்கப்படுகின்ற இன்றைய முஸ்லிம் ஆளுமைகள் உலகறிவு, மார்க்கறிவு என்பன சரிசமனாக பெற்றவர்களுக்கு பதிலாக உலகறிவுள்ளோர் மார்க்கறிவு அற்றும் மார்க்கறிவுள்ளோர் உலகறிவு அற்றும் காணப்படுகின்றனர். ஆனால் சமூகம் மார்க்கறிவுள்ளோருக்குதான் தலைமைத்துவத்தை வழங்க விரும்புகின்றது.

இந்நிலையில் மீண்டும் ஓர் சவாலை சமூகம் எதிர் நோக்குகின்றது. அதாவது இலங்கையில் உருவாகின்ற ஆலிம்கள் சூபித்துவ சிந்தனை அல்லது இஹ்வானிய சிந்தனை அல்லது ஏகத்துவ சிந்தனைப் போக்குள்ளவர்களாக உள்ளனர். இவர்களில் யாருக்கு தலைமைத்துவத்தை வழங்குவது என்பதே அடுத்துள்ள பிரச்சினையாகும் இதற்கான தீர்வை வாசகர்களின் தீர்மானத்திற்கு விடுகின்றேன்.

சிந்தனைக்காக முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறு மார்க்க விடயத்தில் ஒன்றுபடாமல் சமூகம் தொடந்தும் பிரிந்து செயற்படக் காரணம் என்னவென்று தேடிய போது கிடைத்த விடயம்தான் இன்று இலங்கையில் உள்ள ஒவ்வொரு மத்ரஸாக்களும் ஒவ்வொரு பாடத்திட்டத்தில் செயற்படுவதாகும்.

இலங்கையில் அரச கல்வித்திட்டத்தின் கீழ் நாட்டின் அணைத்து பாகங்களிலும் இன மத வேறுபாடின்றி அனைவரும் ஒரே பாடத்திட்டத்தை கற்கும்போது ஒரே அல்குர்ஆன், ஹதீஸ் மூலம் கட்டியெழுப்பப்பட்ட மத்ரஸா பாடதிட்டம் மாத்திரம் ஒரே ஊரில் உள்ள இரண்டு மத்ரஸாக்களில் வெவ்வேறாக காணப்படுகின்றது. இதனால் அடிப்படையில் இருந்தே பிரிந்துவிட்ட உலமாக்களை ஒன்று படுத்துவது கஷ்டமாக உள்ளது. இதனால் சமூகத்தையும் ஒன்றுபடுத்த முடியாதுள்ளது.


 இதனால் இலங்கையில் குறுகிய எதிர்காலத்தில் எதிரிகள் தாக்கினால் மாத்திரம்தான் ஒற்றுமை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் நீண்ட காலத்தில் எமக்கு நிலையான ஒற்றுமை தேவையாக உள்ளது. இதற்கு அடிப்படையாக இலங்கையில் உள்ள அணைத்து மத்ரஸாக்களுக்கும் ஒரே பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற பாடதிட்டம் மூலம் வெளிவரும் உலமாக்கள் பள்ளி வாசலே தஞ்சம் என வாழாமல் சமூகத்தில் வைத்தியர் முதல் முகாமைத்துவ உதவியாளர் வரை தொழில் வாய்ப்புக்களை பெறுகின்றவர்களாக மாற வேண்டும்.இந்த மாற்றத்தை இலங்கையில் கொள்கை ரீதியாக பிரிந்து செயற்படும் சுமார் 2௦ அமைப்புக்களின் தலைவர்களும் ஒன்றிணைந்தால் முடியும். சிந்திக்குமா???? செயற்படுமா???? நமது வழிகாட்டிகள்.

நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும் உங்களால் ஒன்றுபடுவது கஷ்டம்.... இங்குள்ள உலமாக்கள் Bபாரியிலும், முர்ஸியாவிலும், அப்பாஸியிலும், நளீமியாவிலும் வேற வேற Slybus படிச்சவங்க, But இங்குள்ள பொதுமக்கள் போர்வை ஸாதாத்திலும், ஹொரகொட ஹூதாவிலும், வெலிகம அறபாவிலும் ஒரே Slybus படிச்சவங்க வெளங்கின எங்க தவரெண்டு முதல்ல உலமாக்களுக்கென ஒரே Slybus உருவாக்க பாருங்க

Ibnu asad