Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மாணவர்களின் எதிர்காலம் கருதி தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்

மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க
வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.



வலப்பனை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கற்கை நெறிக்கான கட்டிட திறப்பு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று (17) நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர்,

தூக்கு தண்டனையை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பதே இப்பொழுது அனைவராலும் பேசப்படும் விடயமாக இருக்கிறது. கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் எதிர்கால மாணவ சமுதாயத்தை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் தூக்கு தண்டனையை அமுல்படுத்த வேண்டும்.

இன்று பாடசாலை மாணவர்களை குறிவைத்தே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.பாடசாலைகளுக்கருகிலேயே போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.அநேகமான பாடசாலைகளின் அருகில் தேடுதல் நடத்தியதில் பொலிசார் பலரை கைது செய்துள்ளனர்.ஒரு மாணவனும் இதில் தொடர்பு பட்டிருந்தமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.





பெற்றோர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள்.எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமாக இருந்தால் இந்தச் சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.போதையால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் நிர்க்கதியான நிலையில் இருக்கின்றன. ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே ஊடகங்களில் வெளிவருகின்றன. பல சம்பவங்களை பெற்றோர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள்.பொற்றோர்கள் கல்வி அமைச்சையும் இந்த அரசாங்கத்தையுமே நம்பியிருக்கின்றார்கள்.எனவே நாங்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.எங்களுடைய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு பொது மக்கள் அஞ்சுவதில்லை. அதற்கு மதிப்பளிப்பதில்லை.

எனவே சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.

குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் மாத்திரமே எங்களுடைய எதிர்கால மாணவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.இல்லாவிட்டால் ஆண்டவனால் கூட எங்கள் மாணவர்களை காப்பாற்ற முடியாது என்றார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

0 Comments:

Post a Comment