ஆப்பிள், சாம்சுங் இடையிலான ஏழு ஆண்டுகால மோதல் முடிவு


ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு இடையில் கடந்த ஏழு ஆண்டுகளாக நீடித்துவந்த காப்புரிமை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர இரு நிறுவனங்களுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்பிளின் ஸ்மார்ட்போன் வடிவத்தை சாம்சுங் நகல் செய்ததாக குற்றம் சாட்டும் வழக்கே பல ஆண்டுகளான நிடித்து வந்தது. எனினும் இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதற்காக எட்டப்பட்ட நிபந்தனைகள் குறித்த விபரம் வெளியிடப்படவில்லை.
“இந்த வழக்கு என்பது பணத்தை குறிவைத்து நடத்தப்பட்டதில்லை. இதை நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். ஆப்பிள் நிறுவனத்தில் கடும் உழைப்பைச் செலுத்தி வடிவங்களை உருவாக்கும் ஊழியர்களின் உழைப்பை நாங்கள் காக்க வேண்டும் என்று நினைத்தோம்” என்று மட்டுமே ஆப்பில் இந்த விடயம் குறித்து குறிப்பிட்டுள்ளது.
எனினும் சாம்சுங் நிறுவனம், இந்த விவகாரம் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டது.
எனினும் ஆப்பிளின் ஐபோன் வடிவத்தை நகல் செய்ததற்காக சாம்சுங்கிற்கு 539 மில்லியன் டொலர் நஷ்டயீடு விதித்து அமெரிக்க நடுவர் மன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டு சில வாரங்களிலேயே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள் நிறுவனம் தென் கொரியாவின் தனது போட்டி நிறுவனத்திற்கு எதிராக 2 பில்லியன் டொலர் நஷ்யீடு கேட்டு 2011 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்ததை அடுத்தே இந்த மோதல் ஆரம்பமானது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்கு மத்தியில் நடந்த இந்த வழக்கு சர்வதேச அளவில் கவனம் பெற்றது.