குகையிலிருந்து சிறுவர்களை மீட்கும் ஆபத்தான நடவடிக்கை தொடர்கிறது

முதல் நாளில் நான்கு சிறுவர்கள் மீட்பு
தாய்லாந்து குகைக்குள்
எஞ்சி இருக்கும் எட்டு சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை வெளியே அழைத்து வரும் அபாயம் மிக்கம் மீட்பு பணியை சுழியோடிகள் நேற்று மீண்டும் ஆரம்பித்தனர்.
வெள்ளம் நிரம்பிய இந்த குறுகலான குகையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு சிறுவர்கள் வெளியே அழைத்துவரப்பட்டனர். எனினும் ஒட்சிசன் சிலிண்டர்களை மாற்றுவது உள்ளிட்ட பணிகளால் மீட்பு நடவடிக்கை ஞாயிறு இரவு இடைநிறுத்தப்பட்டது.
இந்த சிறுவர்கள் கடந்த ஜுன் 23 ஆம் திகதி முதல் சிக்கி இருக்கும் நிலையில் கடும் மழை காரணமாக அந்த குகை வெள்ளத்தால் நிரம்பியுள்ளது. இவர்கள் கடந்த வாரமே உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் நீர் மட்டம் அதிகரிக்கும் அச்சம் காரணமாகவே மீட்பு நடவடிக்கைகளை அவசரமாக முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை காலை மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் உள்நாட்டு நேரப்படி காலை 11 மணிக்கு சுழியோடிகள் குகைக்குள் நுழைந்ததாக மீட்பு நடவடிக்கையின் தலைவர் நாரொங்சான் ஒசொடனகோர்ன் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு இந்த மீட்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதன்போது ஞாயிற்றுக்கிழமையை விடவும் மேலும் பலரை வெளியே அழைத்து வர எதிர்பார்ப்பதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீட்கப்பட்டிருக்கும் நான்கு சிறுவர்களின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. அவர்கள் நேற்றைய தினத்திலும் தமது குடும்பத்தினருடன் இணைக்கப்படவில்லை என்று நாரொங்சான் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். அவர் ஆரோக்கியமாக இருப்பதமாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறுவர்கள் சிக்கி இருக்கும் இந்த குகை அமைப்பில் 40 தாய்லாந்து நாட்டவர் மற்றும் 50 வெளிநாட்டவர் என 90 சுழியோடிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீரில் மூழ்கிய இருண்ட தம் லுவங் குகைக்குள் இருந்து சிறுவர்களை அழைத்துவரும் ஆபத்தான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குகையின் உள் பகுதி சில இடங்களில் 33 அடி உயரம் வரை இருந்தாலும், சில இடங்கள் மிகவும் குறுகலானவை. மீட்புப் பணியாளர்கள் தங்கள் காற்று சிலிண்டரோடு அந்த இடங்களை நீந்திக் கடப்பது கடினம். எனவே, அவர்கள் தங்கள் சிலிண்டரை கழற்றி எடுத்துக் கொண்டுதான் அந்த இடங்களைக் கடக்க முடியும்.
இந்நிலையில் ஒவ்வொரு சிறுவரோடும் இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் உடன் வரும்வகையில் மீட்பு திட்டமிடப்பட்டது. மீட்பு வீரர்களுக்கு வழிகாட்டுவதற்காக ஏற்கனவே மீட்புப் பாதை நெடுக ஒரு கயிறு போடப்பட்டுள்ளது. அதன் வழியாக இரண்டு மீட்பு வீரர்களும் ஒரு சிறுவரும் நீந்திக் கடக்கும் வகையில் திட்டமிடப்பட்டது.
சிறுவனின் காற்றுக் சிலிண்டரை ஒரு மீட்பு வீரர் சுமந்து வருவார். ஒரு வீரரோடு, மீட்கப்படும் ஒரு சிறுவன் கயிற்றால் இணைக்கப்பட்டிருப்பான். மீட்கப்படும் சிறுவர்களின் முழு முகத்தையும் மூடும் வகையில் மூச்சுக் கவசம் பொருத்தப்படும். இது போதிய பயிற்சி இல்லாத சிறுவர்கள் முக்குளித்து நீந்த உதவியாக இருக்கும்.
இந்த பயணத்தின்போது கடந்த வெள்ளிக்கிழமை தாய்லாந்து கடற்படையின் முன்னாள் சுழியோடி ஒருவர் உயிரிழந்தது இதன் ஆபத்தை காட்டுவதாக உள்ளது.