Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கற்பித்தல் என்பது பணம் சம்பாதிக்கும் தொழிலல்ல!


கற்கத் தகுந்த நுல்களைக் குற்றமின்றி கற்று, அக்கல்வியை தன்னலமின்றி பிறருக்கு கற்றுக் கொடுப்பதே ஆசிரியர்களின் குறிக்கோள். உலகில் மக்கள் செய்யும் தொழில்கள் பல காணப்பட்டாலும், ஆசிரியர் தொழிலே சிறந்தது. அதற்கு இணையான தொழில் வேறொன்றில்லை. மக்களின் அறியாமையை நீக்குவதால்தான் ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கே தன்னை அர்ப்பணி , அப்பணி தியாகப்பணி, தெய்வீகப் பணி, சமூகப் பணி என்று எல்லோராலும் சிறப்பிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆசிரியரும் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற கருத்தை மனதில் கொண்டு பணியாற்றுவது அவசியம். இருந்தபோதிலும் தற்போதுள்ள ஆசிரியர்களின் நிலைமை என்ன? மாணவர்களின் ஒழுக்க விவகாரங்களின் ஆசிரியர்களின் வகிபங்கு எத்தகையது என்கிற கேள்விகள் முக்கியமானவை.
'கல்வி' என்பது மனிதனின் அறிவை வளர்ப்பது போல் அவன் பண்பையும், ஒழுக்கத்தையும் வளர்க்க வேண்டும். முன்னொரு காலத்தில் கல்வி பயின்றவர்கள் சமூகத்தால் போற்றப்பட்டார்கள். அக்கால கல்வி அவர்களை பண்பாளர்களாகவும், சமூக அக்கறையுள்ளவர்களாகவும், எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமுள்ளவர்களாகவும் வளர்த்தது. அவர்களை மக்கள் போற்றினார்கள். அந்நிலை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலை இன்றைய கல்வி பயிலும் மாணவர்களின் அணுகுமுறையில் இருந்து தெரியவருகிறது.
கல்வி கற்க பாடசாலை சென்று வருகின்ற மாணவர்களில் எவ்வித புறமாற்றங்களும் அற்று அவர்கள் அப்படியே திரும்பிவருகின்ற நிலை நீண்டுகொண்டே செல்கின்றது. வெளிச்சூழலில் எப்படி வாழப் பழகுகின்றார்களோ, அப்படியே பாடசாலை சூழலையும் புரிந்து கொண்டு வாழுகின்ற நிலை மேலோங்கியுள்ளதனை கண்டுகொள்ளமுடிகின்றது. இதற்கு பொறுப்புச் சொல்பவர்கள் ஆசிரியர்களும், பெற்றோர்களுமே.
இன்று 'கல்வி' என்பது காசு சம்பாதிக்கும் கருவியாக மட்டும் பார்க்கப்படுகிறது. மாணவர்கள் அதன் உற்பத்திப் பொருளாக இருக்கிறார்கள். அதனால் இந்த நிலை மேலோங்கியுள்ளதாக அதிகமானவர்களின் கருத்தாக இருந்து விடுகின்றது.
இன்றைய கால சூழ்நிலையில் கல்வி கற்றே ஆக வேண்டும், இல்லாத பட்சத்தில் வருங்காலம் வளமாக இருக்காது என்ற விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடத்திலும் ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும், இன்றைய கல்விக் கொள்கைகள் தம் பிள்ளைகளை செம்மைப்படுத்துகிறதா என்று சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்றைய கல்வி பயிலும் மாணவர்களின் நிலை நம்மை பெறும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றது. இதனை உணர்வுபூர்வமான உள்ளத்தால் உணர்ந்து தத்தமது பிள்ளைகளின் நடத்தையில் மாற்றத்தை காணுவதற்கு பெற்றோர்களில் அதிகம்பேர் விருப்பமற்றிருப்பது கவலையான விடயமே.
இலங்கையில் மாணவர்களால் இணையதளத்தில் அதிகமாக தேடப்பட்ட வார்த்தை 'செக்ஸ்' என்கிற ஆய்வறிக்கை பற்றி இன்னும் சிந்திக்காமல் இருப்பது நம்மது பிள்ளைகளை நாமே கல்வியற்றவர்களாக மாற்றும் செயற்பாடாக இருக்கின்றது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் இன்றைய கல்விக் கொள்கையும் அரசாங்கமும் கல்வி நிறுவனங்களும்தான். இத்தகைய தீய பழக்க வழக்கங்களை மாற்ற அரசாங்கம் முனைய வேண்டும். கல்விக் கூடங்கள் சுயநலமில்லா சமூக சிந்தனையுடன் செயல்பட வேண்டும்.
அறிவியலையும், ஆங்கிலத்தையும், கணிதத்தையும், வானவியலையும், கட்டிட கலையையும் பயிற்றுவிக்கும் நாம் நல்ல பண்புகளையும், நீதி போதனைகளையும், ஒழுக்க மாண்புகளையும் கற்றுத்தர வேண்டும். அப்போது தான் வருங்கால சந்ததியினரையும், வருங்கால இலங்கைத் தேசத்தை காப்பாற்ற முடியும். இல்லாது போனால் இலங்கை இருண்ட தேசமொன்றுக்குள் அகப்பட்டுக் கொள்ளும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக கல்விக் கூடங்கள் விளம்பர நிறுவனங்களாக மாறிவிட்டன. அங்குள்ள ஆசிரியர்கள் அதனை ஊக்குவிப்பவர்களாக மாறி விடுகின்றனர். ஒவ்வொரு தவணைக்குமான காலப்பகுதிக்குள் ஒதுக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலே அதிகமான கல்விக்கூடங்களின் காலங்கள் கழியத் தொடங்குகின்றன. ஆதனை ஈடுசெய்வதற்கு பிரத்தியேக வகுப்புக்களுக்கு அழைப்பு விடுக்கும் நிலையினை இல்லாமலாக்கும் நடைமுறை சாத்தியமற்றது போலவே தென்படுகின்றது.
இதற்கான பொறுப்பினை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் ஆசிரியத்துவம் என்பது தொழிலல்ல சேவையுடன் தொடர்புடையது. தொழிலுக்கு இடுகின்ற இறுக்கமான வரையறையினை சேவைக்கு இடமுடியாது என்பதனை முதலில் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் விடுமுறை பெற்றுக்கொள்வது அரிதாகவிருந்தது. உளப்பூர்வமாக அந்தப்பணியை ஆற்றினர். ஆனால் தற்போதுள்ள எல்லா நிலைகளும் ஆசிரியர்களை நிலைகுலையச் செய்துள்ளன. மாணவர்களை தண்டிக்க முடியாது. ஒழுக்கம் பற்றி பேசமுடியாது, அப்படித்தான் பேசுவதுக்கு பெற்றோரை அழைத்தால் விருப்பத்தோடு சமுகமளிக்கும் பெற்றோர்கள் மிகமிக அரிது. இது போன்ற காரணிகள் இப்பணியில் அர்ப்பணிப்புடன் மிளிர இருக்கும் சந்தர்ப்பத்தினை இல்லாமல் ஆக்குகின்றன என்பது ஆசிரியத்துறையிலுள்ள அநேகம் பேரின் ஆதங்கம்.
அது மட்டுமல்லாமல் சமூக அக்கறை குறித்து இவர்களுக்கு எந்த அறிவும் புகட்டப்படுவது கிடையாது. மனிதாபிமானம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வாழ்க்கையில் எதிர்நீச்சல் என்பதெல்லாம் இவர்களுக்கு அந்நியப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடுதிரை கணினியை தொட்டால் போதும். அனைத்தும் கிடைத்துவிடும் என்பது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இன்று நடந்து வருவதே அதற்குச் சாட்சியாகும்.
'அமெரிக்க இளைஞர்களில் 70 சதவீதத்தினர் 17 வயது ஆகும் முன்பே முறையற்ற பாலியல் உறவுகளை வைத்துள்ளனர் என்கிறது ஒரு ஆய்வு. அது மட்டுமல்லாமல் விரக்தி மனப்பான்மை, தோல்வி மனப்பான்மை, தற்கொலைகள், துப்பாக்கி கலாசாரம் என அனைத்தையும் அவர்களிடம் இருந்து கடன் வாங்க தலைப்படுகிறோமா என்ன?
கல்விக்கூடங்களின் இத்தகைய விளம்பரங்களினால் கவரப்பட்ட பெற்றோர் தமது தலையை அ​ைடமானம் வைத்தாகிலும் தன் பிள்ளைகளை சேர்க்க முற்படுகிறார்கள். இது மாணவர்களின் ஒழுக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
இன்னொரு வேடிக்கை என்னவெனில் எல்லா வருடமும் எங்கள் பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் அதி சித்தியை பெறுகின்றனர் என்று பெருமை அடிப்பதற்காக மாணவ உள்ளீர்ப்பில் சில மாணவர்களை தகுதியில்லை என தட்டிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக 5ம் தரத்துக்கு மாணவர்களை தேர்வு செய்வதுக்கு பரீட்சை நடாத்தப்படும், அதில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சரியில்லை எனில் அத்தகைய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. இது கல்வியில் குறித்த மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி, தமது பாடசாலை உயர்நிலைக்கு வரவேண்டும் எனபதுக்கு இன்னுமொரு மாணவன் பலியாகுகின்றான் என்பதனை நம்மில் அதிகம்பேர் புரிந்து கொள்வதில்லை.
இப்படித் தேர்வு வைத்து அதில் தேர்ந்தெடுக்கப்படாத மாணவர்களின் உள்ளத்தில் தோல்வி மனப்பான்மை தோன்றாதா?

றிசாத் ஏ. காதர்
(ஒலுவில் மத்திய விசேட நிருபர்)

0 Comments:

Post a Comment