65 ஆண்டுகளின் பின் பிரிந்த உறவுகளை சந்திக்கும் நிகழ்வுகொரிய யுத்தத்தால் கடந்த 65 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டிருந்த சுமார் 180 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முதல் முறை வட கொரியாவில் நேற்று தற்காலிகமாக ஒன்றிணைந்துள்ளனர்.

1950–1953 கொரிய யுத்தம் கொரிய தீபகற்பத்தை இரண்டாக பிரித்ததோடு வட கொரியாவில் இருக்கும் மக்களுக்கு தென் கொரியாவுக்கு செல்வது முடியாத ஒன்றாக மாறியது.

இந்நிலையில் தற்போதும் யுத்த சூழலில் இருக்கும் இரு கொரியாக்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் குடும்பத்தினர் ஒன்று சேரும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஒன்றிணைவு நிகழ்வில் பங்கேற்பவர்களை தென் கொரியா குலுக்கல் முறையில் தேர்வு செய்ததோடு இவர்களில் 101 வயதுடையவர் ஒருவரும் உள்ளார்.

எனினும் தமது உறவினர்கள் தொடர்ந்து உயிருடன் இல்லை என்று தெரிந்து சிலர் தமது பயணத்தை கைவிட்டனர். இதில் 92 வயது மூதாட்டி ஒருவர் யுத்தம் முடிந்ததன் பின் தனது மகனை காண முதல் முறை செல்வதாக குறிப்பிட்டார்.

முதலாம் உலகப் போரின் போது பிரிந்த தன் மகனை பார்க்க போவதாக அவர் குறிப்பிட்டார். லீ கூம் சியோம் என்ற அந்த மூதாட்டி தன் மகனுக்கு நான்கு வயது இருந்தபோது பிரிந்ததாக கூறினார்.

இறப்பின் வாசலில் நிற்கிறேன். இந்த நாள் என் வாழ்வில் வரும் என்று நான் நினைத்து பார்க்கவே இல்லை என்கிறார் அவர்.

கொரிய போர் இலட்சக்கணக்கான மக்களை பிரித்தது. ஒரு வீட்டில் வசித்தவர்கள். ஒரு தெருவில் விளையாடியவர்கள். இரண்டு நாட்டவராக மாறினார்கள்.

இரு கொரியாக்களுக்கும் இடையிலான பதற்றம் தனிந்த சூழலிலேயே இந்த ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ் வண்டிகளில் ஏற்றப்பட்ட தென் கொரிய முதியவர்கள் குழு கடும் பாதுகாப்புடன் வட கொரியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தமது உறவினர்களுடன் மூன்று தினங்களை கழிக்கவிருப்பதோடு ஒவ்வொரு தினத்திலும் சில மணி நேரங்கள் மாத்திரமே அவர்களது ஒன்றிணை இடம்பெறும். இந்த நிகழ்வு கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வு உணர்வு பூர்வமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் தமது உறவினர்களை பார்க்கும் வாய்ப்புக்காக மேலும் 50,000க்கும் அதிகமானவர்கள் காத்திருப்பதாக கூறப்படுகிறது.