9 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு.


வவுனியா - கற்பகபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையிலிருந்த 9 வயது சிறுவனின் சடலமொன்று
மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழத்தியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உயிரிழந்த சிறுவனின் தாய் மற்றும் சிறிய தந்தை ஆகியோர் நேற்றையதினம் தொழிலுக்கு சென்ற நிலையில், வீட்டில் குறித்த சிறுவன் தனிமையில் இருந்துள்ளார்.

அவனது 3 வயதான சகோதரன் அயல் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்ததும் மாலை 6 மணியளவில் வீடு திரும்பிய சிறிய தந்தை, அயல் வீட்டிலிருந்த இளைய மகனை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது ஒன்பது வயதான மகன் வீட்டிலில்லாத நிலையில் சிறிய தந்தை அவரை தேடியுள்ளார். வீட்டிற்கு அருகில் பயன்படாத நிலையிலிருந்த ஆட்டுக் கொட்டிலில் தூக்கில் தொங்கிய படி இருந்த சிறுவனை, அவனது சகோதரன் தந்தைக்கு காட்டியுள்ளார்.

பின்னர் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவத்தில் பானுசன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

எனினும் சிறுவனின் சிறிய தந்தை இது தொடர்பில் கூறும்போது, தூக்கில் தொங்கும் அளவிற்கு எனது மகனுக்கு போதிய விளக்கம் இல்லை, அதற்கான தேவையும் இருக்கவில்லை. இந்த கொடிய செயல் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.