அணு இல்லா உலகம் படைப்போம் இன்று சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம்……..அணுவின் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. அதே நேரத்தில் அணு ஆயுதத்தை தவறான வழிகளில் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்க்கை, சுகாதாரம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான உதாரணத்தையும் உலகம் ஏற்கனவே பார்த்து விட்டது.

எனவே அணு ஆயுத சோதனையை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 29ல் சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.தீராத சோகம்அணு ஆயுதத்தின் கொடூரம் 1945ல் உலகுக்கு தெரிந்தது. இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகஷாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதுவே உலகின் முதலும், கடைசியுமான அணுகுண்டு தாக்குதல். ‘லிட்டில்பாய்’ எனும் 60 கிலோ அணுகுண்டை சுமந்து வந்த ‘பி- 29’ ரக ‘எனோலாகெய்’ என்ற அமெரிக்க விமானம், 1945 ஆக. 6ல் ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் உலகின் முதல் அணுகுண்டை வீசியது.

மூன்று நாள் கழித்து ஆக. 9ல் நாகஷாகி நகரின் மீது ‘பேட்மேன்’ என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியது. இந்த தாக்குதல்களால் இரண்டு நகரங்களும் முற்றிலுமாக நிலைகுலைந்தன. கதிர்வீச்சால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது.

ரஷ்யா முதலிடம்உலகில் தற்போது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ‘அணு ஆயுத நாடு’ என கருதப்படுகின்றன. இதில் அணுகுண்டுகள் அதிகம் வைத்திருக்கும் நாடு ரஷ்யா. இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது.

உலகளவில் 1945க்கு பின், இதுவரை இரண்டாயிரம் முறை அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் நாடுகளுக்கிடையே பதற்றம் ஏற்படுகிறது. அணுவை ஆக்கபூர்வ வழிகளில் பயன்படுத்த அனைத்து நாடுகளும் முன் வரவேண்டும். அப்போது தான் உலகில் அமைதி நிலவும்.