Breaking

Sunday, August 12, 2018

ஆசிரியர் பயிற்சிக்கு அரசு மீண்டும் நடவடிக்கை

ஆசிரியர் பயிற்சிக்கு அரசு மீண்டும் நடவடிக்கை
நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும்
பயிற்றப்பட்ட ஆசிரியர்களே நியமிக்கப்பட வேண்டும். அனுபவமில்லாத பயிற்சியளிக்கப்படாத ஆசிரியர்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் நியமனம் வழங்கப்படுவதால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாகவும் அதனால் எமது எதிர்காலச் சந்ததியினரின் கல்வி முன்னேற்றம் பாதாளத்துக்குள் தள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டி இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எந்தவொரு பாடசாலைக்கும் பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்படாவிட்டால் கல்வியமைச்சுக்கு எதிராக வழக்குத் தொடரும் உரிமை பெற்றோர்களுக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

காலி சாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற கட்டடத்திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டிருக்கின்றார். மாடிக் கட்டிடங்களையும் ஏனைய பௌதிக வளங்களையும் மட்டும் பாடசாலைக்கு வழங்குவதால் கல்வித்துறையில் முழுப்பயனையும் அடைய முடியாது. பயிற்றப்பட்ட நல்லாசான்கள் சகல வகுப்புகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மிக முக்கியமானதாகும்.


சகல பாடசாலைகளுக்கும் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் முழுமையாக கிடைப்பதற்கான செயற் திட்டத்தை தான் கல்வியமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்ட பிரதமர் பிற்பட்ட காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் கூட அரசியல் மயமானதாகவும் இதன் காரணமாக நாட்டின் கல்வி நடவடிக்கைகள் சீர்குலைந்து போனதாகவும் தெரிவித்திருக்கின்றார். அன்று ஆசிரியர்கள் பயிற்றப்படுவதற்கு பயிற்சிக் கல்லூரிகளையும், கல்விக் கல்லூரிகளையும் நாம் அமைத்தோம். இன்று அவை வெறும் பாழடைந்த கட்டிடங்களாகவே காட்சி தருகின்றன எனவும் இது நாம் நமது சமூகத்துக்குச் செய்யும் பெரும் துரோகமெனவும் கூறியுள்ளார்.


பிரதமரின் இந்த உரையை மேடைப் பேச்சாகக் கேட்டு பின்னர் மறந்துவிட முடியாது. மிகவும் அர்த்தம் பொதிந்த இக் கூற்று குறித்து ஒவ்வொரு பெற்றோரும், நாடடின் ஒவ்வொரு பிரஜையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பாடசாலைகளில் தகுதியான ஆசிரியர்கள் இல்லாது போனால் எந்தவொரு பாடசாலையும் முன்னேற்றமடைய முடியாது. ஒரு பாடசாலை முன்னேற்றமடைவதற்கு கட்டிடங்களும், போதிய வளங்களும் அவசியம்தான். வளங்களின்றி ஒரு பாடசாலை இயங்க முடியாது. ஆனால் வளங்கள் மட்டும் போதுமானதல்ல. மாணவச் சமுதாயத்துககு சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க தகுதிவாய்ந்த தகைமையுள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.


ஒரு வைத்தியசாலைக்கு தகுதியும், பட்டமும் பெற்ற டாக்டர்களும், தாதிமார்களும் முக்கியமானதாகும். படித்துவிட்டு வெளியேறுவோரை எதுவித பயிற்சியும் வழங்கப்படாமல் டாக்டர்களுக்குரிய பயிற்சிகளையும் உரிய கல்வியையும் பெறாமல் நியமிப்பதன் மூலம் என்ன நடக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே போன்றுதான் தாதியர் நியமனங்களும் அமைகின்றது. எந்தத் தொழிலையும், செய்வதற்கு பயிற்சி மிக முக்கியமாதாகும். ஆசிரியர் தொழிலுக்கும் இது முக்கியமாகும். கடந்த காலத்தில் மாணவ ஆசிரியர் என்றதொரு பதவியை உருவாக்கி எந்தவித தகைமையும் பார்க்கப்படாமல் தொழில் வழங்க வேண்டுமென்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.


ஆசிரியப் பணியின் புனிதத்துவம், அதன் மகத்துவத்தை உணராமல் கல்வியின் பெறுமதியை கவனத்தில் கொள்ளாது அரசியல் நலன்களுக்காக நியமனங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக நாட்டின் கல்வி நிலை சீர்குலைந்து போயுள்ளது. இந்த நிலை தொடரக் கூடாது. சீரான கல்வித் திட்டத்தை மறுசீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கல்வியில் நாடு பின்னடைவு காணும் நிலை ஏற்பட்டால் இருண்ட யுகத்துக்குச் செல்லும் நிலைமை ஏற்பட்டுவிடும். சுயநல அரசியலுக்காக நாட்டின் கல்விக்கொள்கையை விலைபேச எவருக்கும் அனுமதிக்க முடியாது.


அன்று தாய்லாந்தும், மலேசியாவும் இலங்கை கல்வித்திட்டத்தை அனுசரித்து தமது நாடுகளுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொண்டன. இன்று அந்த இரு நாடுகளும் கல்வித்துறையில் மிக உன்னத நிலைக்கு உயர்ச்சி பெற்றுள்ளன. அவர்கள் ஆசிரியர்களுக்கு சீரான பயிற்சியை குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கியதன் பின்னரே பாடசாலைகளுககு நியமனங்களை வழங்குகின்றனர். தகைமையில்லாதவர்களை எக்காரணம் கொண்டும் அந்த இரு நாடுகளும் ஆசிரிய பதவிக்கு நியமிப்பது கிடையாது.


எமது நாட்டில் கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகளின் கல்வியமைச்சர்கள் ஆர்ப்பாட்டங்களுக்குப் பயந்தும், அரசியல் நலன்களை கருதியும் ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக் கொடுத்தனர். எந்தவித அனுபவமுமின்றி இவர்கள் நியமிக்கப்பட்டனர். நாட்டின் கல்வித் திட்டம் பாடத் திட்டம் எதிலுமே இவர்களுக்கு அனுபவமோ, தகைமையோ கிடையாது. பாடப்புத்தகங்களை வாசித்துவிட்டுப் போவது மட்டுமே இவர்களது பணியாக உள்ளது. இதன் விளைவாக எமது இளம் சந்ததியினரின் கல்வித்தரம் குன்றி சமுகத்துக்கு பயனற்ற சமுதாயமாக மாறும் அவலமே உருவாகியுள்ளது.


கல்வித்துறையில் கூடுதல் கவனம் செலுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றார். ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை பணித்துள்ளார். மூடப்பட்டிருக்கும் ஆசிரிய பயிற்சிக் கூடங்களையும், செயலிழந்து காணப்படும் உயர் கல்வி நிறுவனங்களை மீளச் செயற்பட வைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவிட்டிக்கிறார். தற்போது ஆசிரியப் பணிபுரிவொருக்கும் குறுகிய கால பியற்சித் திட்டத்தையாவது பெற்றுக்கொடுப்பது மிக அவசியமானதாகும்.


பிரதமர் சுட்டிக்காட்டியிருப்பது போன்று பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பின் உடனடியாக தமது பாடசலைகளின் தரம், ஆசிரியர்களது நியமனங்கள் குறித்து தேடியறிந்து அங்குள்ள குறைபாடுகளை களைய முனையவேண்டும். தகுதிமிக்க, தகைமையுள்ள ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இந்த முயற்சியில் தடைகள் ஏற்படுமானால் பிரதமர் குறிப்பிட்டிருப்பது போன்று கல்வித் திணைக்களம், கல்வியமைச்சுக்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் தயங்கக் கூடாது. எமது எதிர்காலச் சந்ததியினரின் கல்விக் கண்களை குருடாக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க்கூடாது. அரசின் கல்வி நடவடிக்கைகள் விழலுக்கிறைத்த நீராகிவிடக்கூடாது.