Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

பிள்ளைகள் கைவிட்ட போதிலும் பாசத்தை மறக்காத தாயுள்ளம்கல்முனையில் நடுத்தெருவில் அநாதரவாக 90வயது தாயை தவிக்க விட்டுச் சென்ற மூன்று பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றி ஊடகங்கள் சில தினங்களுக்கு முன்னர் செய்திகளை வெளியிட்டிருந்தன.
ஆனால் இந்தச் சம்பவத்தின் பின்னால் நடந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது அவசியம்.
அன்று(9.8.2018) வழமை போல கல்முனை நீதவான் நீதிமன்றம் கூடியது. நீதிவான் ஜ.என்.றிஸ்வான் வந்தமர்ந்தார். வழக்கறிஞர்களும் வருகிறார்கள் மக்களும் வருகிறார்கள். .நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன.
அன்றுதான் அந்த 90வயது தாயின் வழக்கும் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றது. அதற்காக அப்பெண்ணை கல்முனை இளைஞர் சேனா அமைப்பினர் ஆஸ்பத்திரியிலிருந்து காரில் கொண்டு வந்து சேர்த்தனர். அவரது பிள்ளைகள் மூவரும் மல்வத்தையிலிருந்து நீதிவானின் அழைப்பாணையின் பேரில் அங்கு வந்திருந்தனர்.
வழக்கு அழைக்கப்படுகின்றது. வழக்காளி சார்பில் சட்டத்தரணிகளான ஆர்த்திகா, றியாஸ் ஆகியோர் வாதாடுகின்றனர். சமர்ப்பணத்தை ஏற்றுக் கொண்ட நீதிவான் பிள்ளைகள் மூவரையும் தலா 50ஆயிரம் ருபா சரீரப் பிணையில் செல்லவும் தாயின் பராமரிப்பிற்காக மாதமொன்றிற்கு தலா 5ஆயிரம் ருபா வீதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் 4ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிவான் கூறியதும், குறித்த தாயார் வெளியே வந்தார்.
அவ்வளவு நேரமும் சோறு, தண்ணீர் இல்லாமல் 90வயது தாய் இருந்தாரே என கவலைப்பட்டு கல்முனை இளைஞர்கள் அவருக்கு பிஸ்கட்டும் தண்ணீரும் வழங்க அவர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் ஒருகணம் மெய்சிலிர்க்க வைத்தன.
"முதலில் எனது பிள்ளைகளை வெளியில் எடுத்து விடுங்கள். அவர்கள் கூட்டுக்குள் இருக்கும் போது எனக்கு பிஸ்கட்டும் வேண்டாம், தண்ணியும் வேண்டாம். முதலில் அவர்களை வெளியில் விடுங்கள். அவர்களது காசு வேண்டாம். நான் பிச்சை எடுத்தாவது பிழைப்பேன். அவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம்.அவர்கள் எனது பிள்ளைகள். நான் பெத்த புள்ளைகள்...அவர்கள் நல்லாயிருக்க வேண்டும்" என்றார் இந்த 90வயது மூதாட்டி.
இளைஞர்கள் ஒருகணம் அதிர்ந்தனர்.
பத்து மாதம் பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் தன்னை நொடிப் பொழுதில் நடுத்தெருவில் ஈவிரக்கமில்லாமல் இறக்கி விட்டுச் சென்றதை மறந்த அந்தத் தாய் தனக்கேயுரித்தான தாய்ப்பாசத்தில் தன் பிள்ளைகளை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கூறினார். அந்த தாய்ப்பாசம் எங்கே? பெற்றதாயை நடுத்தெருவில் அம்போ என தவிக்க விட்டுச் சென்ற பிள்ளைகள் எங்கே? இதனைத்தான் பெற்றமனம் பித்து பிள்ளைமனம் கல்லு என்று சொல்வதா? என எண்ணத் தோன்றுகின்றது.
இச்சம்பவம் மன்றுக்கு வந்த காரணத்தினால் செய்தி வெளியே வந்தது. இவ்வாறு எத்தனையோ சம்பவங்கள் உலகில் நடைபெற்றுத்தான் வருகின்றன.
இவ்வாறான கல்மனம் படைத்த பிள்ளைகள் பலர் உள்ளனர். அவர்கள் தம் மனைவியின் கதையைக் கேட்டு மீற முடியாமல் பெற்றதாயை வீட்டைவிட்டு துரத்திய சம்பவங்கள் நிறைய உள்ளன. இதை விட பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயை மறந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மணந்த மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வாழ்வதையும் சமகாலத்தில் காணலாம்.
தாய் தகப்பன் உயிரோடு இருக்கும் போது பார்த்து பராமரிக்காத பிள்ளைகள் அவர்கள் இறந்தபின் பிதிர்க்கடன் செலுத்துவதிலோ அந்தியேட்டி நடத்துவதிலோ ஆலயத்திற்குச் செல்வதிலோ அர்த்தமில்லை. இவர்களது இன்றைய நிலைக்கு அவர்கள் இரவுபகல் பாராமல் அனைத்தையும் தியாகம் செய்து எத்துணை பாடுபட்டிருப்பார்கள் என்பதை இவர்கள் அறியாமலிருப்பது கண்ணிருந்தும் குருடராவதற்குச்சமன். இவர்கள் எவ்வளவுதான் உழைத்து கோடீஸ்வரர்களானாலும் சரி எத்துணை பிள்ளைகளை பெற்றாலும் சரி வாழ்வில் உய்ய மாட்டார்கள் என்பதை சகலரும் அறிவார்கள்.
பெற்றதாயை பார்க்காத பிள்ளை, பெற்றதாயை பராமரிக்காத பிள்ளை, பத்துமாதம் சுமந்து பெற்ற தாய்க்கு தகப்பனுக்கு ஒருசதமும் ஈயாத பிள்ளை உலகில் இருந்து பயன் என்ன ?
இவர்கள் கல்விகற்று பயன் என்ன? இவர்களுக்கும் நாளை அவர்களது பிள்ளைகளால் இதுதான் நடக்கப்போகின்றது என்பதை இவர்கள் அறியும்நாள் வெகுதூரத்தில் இல்லை.
தாயின் பாதத்தில் சுவர்க்கம் இருக்கிறது என்பார்கள்.தாயிற்சிறந்த கோவில் இல்லை என்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை இவையெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்குமோ?
குறித்த மூதாட்டி மல்வத்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சீனிப்பிள்ளை(வயது 90) என்பவராவார்.கல்முனை வைத்தியசாலை முன்பாக சிலதினங்களுக்கு முன்(26ஆம் திகதி வியாழக்கிழமை) பிள்ளைகளால் கொண்டுவந்து கல்முனை ஆதாரவைத்தியசாலை முன்பாக இறக்கி விடப்பட்டுள்ளார். இவ்வாறு கைவிடப்பட்டு அநாதரவாகக் கிடந்த மூதாட்டியை கல்முனைப் பிராந்திய இளைஞர்சேனை அமைப்பினர் கண்டு மனிதாபிமானரீதியில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இளைஞர்சேனையால் மீட்கப்பட்ட குறித்த மூதாட்டியை முதியோர் இல்லம் ஒன்றில் சேர்ப்பதற்காக நீதிமன்ற அனுமதி கோரி கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இளைஞர்சேனை அமைப்பு வழக்கொன்றை தாக்கல் செய்தது. வழக்காளி சார்பாக சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் மற்றும் சட்டத்தரணி முத்துலிங்கம் ஆர்த்திகா ஆகியோரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி வழக்கை விசாரித்த நீதிபதி றிஸ்வான் கடந்த 9ம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதே வேளை குறித்த மூதாட்டியை கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சை பெறுமாறும் பணித்ததுடன் அந்த மூதாட்டியின் பிள்ளைகள் மூவரையும் அடுத்த தவணைக்கு ஆஜராகும் வண்ணம் அழைப்பாணையையும் பிறப்பித்திருந்தார்.
மூதாட்டியின் பிள்ளைகளான கிருஷ்ணன், குபேந்திரன், தவமணி ஆகியோர் மல்வத்தையிலிருந்தனர். இவர்களுக்கெதிராக தாபரிப்புவழக்கு போடப்பட்டுள்ளது. கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவுப்படி மீண்டும் மூதாட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கும் போது குறித்த மூதாட்டியின் நிலை கண்டு மனிதாபிமான முறையில் சட்டத்தரணியும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். றிபாஸ் அவர்களும் ஆஜராகி மூதாட்டிக்காக ஆதரவாக வாதாடியிருந்தனர்.
இதேவேளை குறித்த தாயின் நாலாவது பிள்ளை காரைதீவிலுள்ளார். அவருக்கும் அழைப்பாணை அனுப்புமாறு மன்று உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. கல்முனை தமிழ் பிரிவு சமுகசேவைப் பிரிவு இவரை பொருத்தமான வயோதிபர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டுள்ளது.அடுத்த தவணை செப்ரம்பர் 4ஆம் திகதி நடக்கும்.
கல்முனைப் பிராந்திய இளைஞர்சேனை அமைப்பின் பொதுச்செயலாளர் சட்பீடமாணவன் அ.நிதாஞ்சன் கூறுகையில்:
"குறித்த மூதாட்டியை நடுத்தெருவில் கண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். முதியோர் இல்லத்தில் சேர்க்க நீதிமன்றத்தை நாடிய போது பிள்ளைகள் பற்றிய விபரம் தெரியவந்தது. நாங்கள் மல்வத்தைக்குச் சென்று பிள்ளைகளைக் கண்டு கதைத்த போது அவர்கள் அவரை ஏற்க மறுத்து விட்டனர். அவரை முடிந்தால் வயோதிபர் இல்லத்தில் சேருங்கள் என்று கூறி கடிதமும் தந்தனர்.
நாம் அம்பாறை மாவட்டத்தில் பெண்களை பராமரிக்கும் இல்லம் இல்லாத காரணத்தினால் மட்டக்களப்பு தாண்டவன்வெளி இல்லத்திற்குச் சென்று பேசினோம். பிள்ளைகளிருக்கும் போது அவர்களது சம்மதத்துடன்தான் சேர்க்கலாம் என்று கூறி மறுத்து விட்டார்கள். அதன் பிறகுதான் நாம் கல்முனை மஜிஸ்திரேட்டில் பிள்ளைகளை ஆஜராகும்வண்ணம் தாபரிப்பு வழக்குத் தாக்கல் செய்தோம். அதன்படி கடந்த 9ஆம் திகதி அவர்கள் ஆஜராக வேண்டும் என்று நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பிரகாரம் கடந்த 9ஆம் திகதி மூதாட்டியை மன்றுக்குக் கொண்டு சென்றோம். அங்கு தீர்ப்பு வழங்கப்பட்டு மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தோம்.
ஆனால் இவ்வளவு நடந்தும் அவர் மன்றிற்கு வெளியே அவர்கூறிய வார்த்தைகள் தாய்ப்பாசத்தின் உச்சத்தைக் காட்டுகின்றன"என்றார்.
மேலும் அவர் அம்பாறை மாவட்டத்தில் முதியோர் இல்லங்கள் இரண்டு உள்ளன. சிங்கள மக்களுக்கென அம்பாறையில் ஒன்று உள்ளது.தமிழ்பேசும் ஆண்களுக்கென திருக்கோவிலில் ஒரு வயோதிபர் இல்லம் உள்ளது.
ஆக பெண்களுக்கென முதியோர் இல்லம் அம்பாறை மாவட்டத்தில் இல்லை. இதுஇவ்வாறிருக்க 1997ஆம் ஆண்டு 37ஆம் இலக்க பராமரிப்புச் சட்டப்பிரகாரம் பெற்றோரையே யாரையோ பிள்ளைகள் இவ்விதம் நடுத்தெருவில் விட முடியாது.
அவ்வாறுவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்க முடியுமென தெரிவித்தார்.இந்த கைங்கரியத்திற்காக கல்முனைப் பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் இளைஞர்களை மக்கள் பாராட்டியுள்ளனர்.
கல்முனைச் சம்பவம் ஏனைய இவ்விதம் நடக்கும் பிள்ளைகளுக்கு நல்ல பாடமாகும். கல்முனை இளைஞர் சேனை உறுப்பினர்கள் பாராட்டுக்குரியவர்கள். இன்றைய இளைஞர்கள் இவ்வாறு முன்மாதிரியாக நடந்து கொள்வது ஏனைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்