Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

“என் உளக் காயங்களையும் சேர்த்தே தைக்கிறேன்” லெபனானில் முகாமில் வாடும் சிரிய அகதிகளின் கண்ணீர் .


ஹஸன் இக்பால், யாழ்ப்பாணம் (மூலம்: Middle East Eye)-
“வான் தாக்குதலில் எமது வீடு
தரைமட்டமாகி விட்டது... இருப்பினும், நானும் எனது பிள்ளைகளும் மயிரிழையில் உயிர் பிழைத்தோம்...

அத்தனையும் நிர்மூலமாகிவிட்ட பின்னர் பூச்சியத்திலிருந்து எமது வாழ்க்கையை மீளத் தொடங்கினோம்...”


சிரியாவில் தாரா பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண்மணியும் ஐந்து பிள்ளைகளின் தாயுமான ஜுஹைனா பாதில் தனது சிறிய இருப்பிடம் வான்வழித் தாக்குதல்களில் முற்று முழுதாக அழிக்கப்பட்ட பின்னர் 2013 இல் லெபனானுக்கு அகதியாக தஞ்சம் புகுந்தார்.


இடம்பெயர்ந்து ஐந்து வருடங்களாகியுள்ள நிலையில் தற்போதும் அவரும் அவரது குடும்பமும் லெபனானின் சனச் செறிவு மிக்க பகுதியான ஷட்டிலா முகாமிலேயே மாதாந்தம் பெரும் தொகையை வாடகையாக செலுத்தி வாழ்ந்து வருகின்றனர். ஜுஹைனாவின் கணவர் முகாமுக்கு அண்மித்த பகுதியில் கட்டிடத் தொழிலாளராக நிரந்தரமற்ற தொழில் புரிந்து வருவதால் அதிகரித்து வரும் குடும்பச் செலவினங்களை ஈடுகட்டும் வகையில் ஜுஹைனாவும் தன் பங்கிற்கு உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம்.செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டிருந்த தருணம் தன்னார்வலர்களின் ஆலோசனைக்கேற்ப ஜுஹைனா Tight-Knit Syria எனும் கனடாவை தளமாகக் கொண்டு லெபனானில் இயங்கி வரும் ஒன்லைன் விற்பனை நிறுவனத்தில் இணைந்து கொண்டார். சிரிய அகதிகளின் எம்ப்ரொயிடரி தையல், கைப்பணிப் பொருட்களை இணையத்தின் வாயிலாக உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தும் தன்னார்வ அமைப்பே Tight-Knit Syria ஆகும்.


இந்நிறுவனத்தில் இணைந்து ஆடை தைப்பதன் மூலம் பெற்றுக் கொண்ட வருமானத்தில் 350 அமெரிக்க டொலர்களை மொத்த வாடகையாக செலுத்த தன்னால் இயலுமாக உள்ளதையிட்டு பெருமிதமாக உணர்வதாக ஜுஹைனா கூறுகின்றார்.


“இத்தொழில் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தமை தொடர்பில் Tight-Knit Syria நிறுவனத்திற்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். தொழில் புரிவது எனக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளது. யுத்தமற்ற ஒரு சூழலில் நிம்மதியாக தன்னிறைவாக வாழ வழி செய்துள்ளது” என மகிழ்ச்சிகரமாகக் கூறுகிறார் ஜுஹைனா.

சிரிய அகதிகளின் கண்ணீர்க் கதைகள்


சிரிய ஜனாதிபதி பஷார் அல்அசாத்திற்கு எதிராக கிளம்பிய கிளர்ச்சி உள்நாட்டு யுத்தமாக உருவெடுத்து இற்றைக்கு சுமார் 7 வருடங்களாகின்றன. உள்நாட்டு யுத்தங்களின் காரணமாக சிரியாவைச் சேர்ந்த அரை மில்லியனுக்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் அயல் நாடுகளான துருக்கி, ஜோர்தான் மற்றும் லெபனானில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.


அடைக்கலம் புகுந்துள்ள நாடுகளில் சிரிய அகதிகள் வேலைவாய்ப்பின்மை மற்றும் சமூக அநீதிகளுக்கு உள்ளாகி பெரும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். சிரிய உள்நாட்டு போரானது வரலாறு காணாத மனிதாபிமான நெருக்கடிகள் மற்றும் அகதிகளை உருவாக்கி வரும் போர் என ஐக்கிய நாடுகளின் புலம்பெயர் மக்களுக்கான முகவரகம் விவரிக்கின்றது.
தனா கந்தலாப் எனும் 28 வயது நிரம்பிய சிரிய-கனேடிய பெண்மணியே Tight-Knit Syria எனும் சிரிய அகதிகளின் கைவினைப் பொருட்களுக்கான இணைய சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆவார். கனடாவின் மிக பெரிய நகரான டொரொன்டோவில் பிறந்து வளர்ந்த தனா கந்தலாபின் பெற்றோர் சிரியாவை சேர்ந்தவர்கள்.


“சிறு வயதில் இருந்தே சிரியாவுக்கு போக வேண்டும், அங்கே எமது உறவினர்களை சந்திக்க வேண்டும் என ஆவலாக இருந்தேன். சிரிய அகதிகளின் சோகக் கதைகள் என்னை வருத்தத்துக்கு உள்ளாக்கியது. அவர்களின் நலனுக்காக என்னால் முடியுமானதைச் செய்ய வேண்டும் என என்னில் உத்வேகம் பிறந்தது. அதன் பிரகாரமே Tight-Knit Syria எனும் தன்னார்வ அமைப்பை உருவாக்கினேன்.


இதன் மூலம் முகாம்களில் வாடும் சிரிய அகதிகளின் தையல் மற்றும் கைவினைப் பொருட்களுக்கு சர்வதேச சந்தையை பெற்றுக் கொடுக்கிறேன். அவர்களின் வருமான வழிக்கு எவ்வகையிலும் உதவிட வேண்டும் என்பதே என் அவா” என்கிறார் தனா கந்தலாப் எனும் 28 வயதே நிரம்பிய பெண்மணி.
2013 இல் இன முரண்பாடுகள் தொடர்பான கற்கைநெறி பயில்வதற்காக துருக்கி சென்றிருந்த தனா கந்தலாப் அங்கே சிரியாவை சேர்ந்த அகதிகள் குழாமொன்றை சந்தித்தார். அவர்களில் பலர் தன் வயதை ஒத்த பெண்கள். அவர்களது தொடர்பு தனா கந்தலாபை சிரிய அகதிகள் பற்றி மேலும் சிந்திக்கத் தூண்டியது.

Tight-Knit Syria அமைப்பின் தோற்றம்

துருக்கி, சிரிய எல்லையை அண்மித்த ஒலிவ் ட்ரீ அகதிகள் முகாமுக்கு உயிரை பணயம் வைத்து பயணித்தார். வடக்கு சிரியாவில் அமைந்திருக்கும் அந்த முகாமில் நூற்றுக்கணக்கான அகதிகளுடன் உரையாடி அவர்களது தேவைகளை அறிந்து கொண்டார். அந்த முகாமில் வைத்துத் தான் Tight-Knit Syria நிறுவனத்தின் உருவாக்கம் பற்றி தனக்கு முதன் முதலில் எண்ணம் கருக்கொண்டதாக கூறுகிறார் தனா கந்தலாப்.


“ஒலிவ் ட்ரீ அகதிகள் முகாமுக்கு சென்று அங்கே உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு சிறுமி தூரத்தில் இருந்து என்னையும் நான் அணிந்திருந்த ஆடையையும் கையில் வைத்திருந்த எம்ப்ரொயிடரி வேலைப்பாடு கொண்ட கைப்பையையும் மாறி மாறி உற்றுப் பார்த்த வண்ணம் இருந்தாள். நான் அவளை அருகில் அழைத்ததும் என்னிடம் தாவி ஓடி வந்தாள்.


சிறிது நேரம் அவளுடன் உரையாடிக் கொண்டிருந்ததும் என் கைகளைப் பிடித்து தான் தங்கியிருக்கும் முகாமுக்கு இழுத்துச் சென்றாள். அங்கே தனது ஆடைப் பெட்டியில் கையை விட்டு துழாவி ஓர் ஆடையை எடுத்துக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். அது அழகிய கைவேலைப்பாடுகள் கொண்ட ஆடை. இதை நீ எங்கே வாங்கினாய்? என்று நான் அவளிடம் வினவியதும் அவ்வேலைபாடுகள் அனைத்தும் தானே கைகளினால் செய்தவை என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.


எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அங்கே முகாம்களில் வாழும் அகதிப் பெண்கள் பலர் இக்கைப்பணியில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் எனவும் கூறினாள். அப்போதுதான் எனக்கு Tight-Knit Syria அமைப்பை உருவாக்கி இவர்களது திறமைகளை சர்வதேசமயப்படுத்தி அவர்களுக்கு உதவ முடியும் என்ற எண்ணம் தோன்றியது. உடனே கனடாவுக்கு திரும்பிய நான் அதற்கான ஆயத்த வேளைகளில் ஈடுபட்டேன். நிதியுதவிகளையும் பெற்றுக் கொண்டேன்.


பெற்றுக் கொண்ட நிதியுதவிகளைக் கொண்டு எம்ப்ரொயிடரி வேலைப்பாடுகளுக்கு தேவையான நூல்களையும் இழைகளையும் துணிகளையும் கொள்வனவு செய்து சிரிய அகதிகள் முகாம்களில் வாழும் பெண்களிடம் கொண்டு சென்று சேர்த்தோம். இதற்கு பல தன்னார்வ அமைப்புக்கள் ஒருங்கிணைப்புடன் செயற்பட்டன.


அகதிப் பெண்களினால் தைக்கப்பட்ட அழகிய கைவேலைப்பாடுகள் கொண்ட கண்கவர் கைப்பைகள், துப்பட்டாக்கள், கழுத்து அங்கிகள் என்பவற்றை இணையம் வாயிலாக உலகளாவிய ரீதியில் விற்பனை செய்வதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன். அதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் வருமானத்தை குறித்த அகதிப் பெண்களிடமே ஒப்படைத்தும் வருகின்றேன்.
சிரியா மற்றும் லெபனானில் அடைக்கலம் பெற்றுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அகதிப் பெண்கள் தற்போது எமது வலையமைப்பின் மூலமாக வருமானமீட்டி வருகின்றனர். மாதாந்தம் 100 அமெரிக்க டொலர்களுக்கு குறையாத வகையில் இந்த அகதிப் பெண்களுக்கு வருமானம் பெறக் கூடிய தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏதோ ஒன்றை சாதித்து விட்டதாக உணர்கிறேன்.


அண்மையில் எமது அமைப்பில் இணைந்து தையல் வேலைகளில் ஈடுபடும் ஒரு சிரிய அகதிப் பெண் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்: ஆடை தைக்கும் போதும் ஆடைகளுக்கு கைவேலைப்பாடுகள் செய்யும் போதும் என் மனம் ஒருநிலைப்படுகின்றது. சிரியாவில் நாம் பட்ட இன்னல்களை மறக்கச் செய்வதற்கு இது துணை புரிகின்றது. வருமானத்திற்கு மேலதிகமாக உள்ளத்தை சாந்தப்படுத்தி ஆற்றுப்படுத்தவும் இத்தையல் தொழில் உதவுவதாக அவர் என்னிடம் தெரிவித்தார்” என்கிறார் Tight-Knit Syria அமைப்பின் ஸ்தாபகர் தனா கந்தலாப்.


லெபனானின் ஷட்டிலா முகாமில் வசித்து வரும் மலாக் பஹூர் எனும் பெண்மணி கூறுகையில்


“நானும் எனது 3 மகன்கள், 3 மகள்கள் மற்றும் கணவரும் சிரியாவில் இருந்து லெபனானுக்கு ஆற்றைக் கடந்து வந்தோம். எமது வீட்டில் இருந்தவற்றை கிளர்ச்சிக் குழுவினர் சூறையாடிச் சென்று விட்டனர். எமது கிராமம் முழுவதும் சூறையாடப்பட்டு விட்டது. எமது கிராமத்தில் எம்முடன் வசித்தவர்கள் அனைவரும் இப்போது லெபனானில் அகதிகளாக தஞ்சம் பெற்றுள்ளோம். எனது கணவர் இங்கே கூலித் தொழிலாளியாக பணியாற்றுகிறார்.


அவரது ஊதியத்தைக் கொண்டு நாளாந்த வாழ்க்கைச் செலவுகளைக் கொண்டு செல்வதென்பது பாரிய சிரமமாக இருந்தது. அப்போதுதான் Tight-Knit Syria அமைப்பினர் என்னைத் தேடி வந்தனர். நான் தைத்துக் கொடுக்கும் கைவேலைப்பாடு கொண்ட ஆடை அணிகலன்களை அவர்கள் விற்றுத் தருகிறார்கள். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு என் பிள்ளைகளுக்கு உணவளித்து வருகின்றேன்.


தையல் தொழில் வருமானத்திற்கு மட்டுமல்ல என் உள காயங்களையும் ஆற்றுப்படுத்தும் நிவாரணியாக அமைகின்றது. என் உளக் காயங்களையும் சேர்த்தே தைக்கிறேன்” என்கிறார் கைகளில் தான் தைத்த அழகிய வேலைப்பாடு நிறைந்த ஆடைகளையும் கண்களில் கண்ணீர்த் துளிகளையும் ஏந்தியவாறு...!

- நன்றி : நவமணி -