Breaking

Saturday, August 11, 2018

நல்லாட்சிக்கு சவால்விடும் தொழிற்சங்க நடவடிக்கைகள்
நல்லாட்சியை கவிழ்ப்பதற்கு எதிரணிச் சக்திகள் எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் வெற்றியளிக்காததன் காரணமாக
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள் மூலம் அரசாங்கத்தை வலுவிழக்கச் செய்து அரசுமீது மக்களுக்கு வெறுப்படையக்கூடிய நிலையை உருவாக்குதன் மூலம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிரணிகள் முடுக்கிவிட்டிருக்கின்றன. இத்தகைய வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றங்களுக்குத் தடையாக அமையும் என்பதை புரிந்துகொண்ட நிலையிலும் சுயநல அரசியல் சக்திகள் தமது இலக்கை அடைய இதுவொன்றே வழி என்ற தவறான எடுகோளின் பிரகாரம் செயற்படத் தொடங்கியிருக்கின்றன.

உலகளாவிய மட்டத்தில் வேலைநிறுத்தங்களுக்கு பேர்போன நாடாக இலங்கை முதலிடம் வகிக்கின்றது. இதனை யாரும் மறுத்துரைக்க முடியாது. இந்த நாட்டில் வேலைநிறுத்தம் இடம்பெறாத நாளே கிடையாது என்ற நிலைமையே தொடர்கின்றது. கடந்த புதன்கிழமை மாலை முன்னறிவித்தல் எதுவுமில்லாது ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் குதித்ததால் கொழும்பு மாநகரம் பெரும் அல்லோலப்பட்டது. கடமைகளுக்கும், தொழில் நிமித்தமும் தலைநகருக்கு வந்த அரச ஊழியர், தனியார் துறையினர், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வீடு திரும்ப முடியாமல் அலைக்கழியும் நிலை உருவானது. அன்று நள்ளிரவு வரை இந்தக் களேபரம் தொடர்ந்து கொண்டிருந்தது.

ரயில்வே ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமகக்ள் கோட்டை ரயில் நிலையம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலீடுபட்டதாலேயே இந்தநிலை உருவானது. பொதுமக்களின் ஆத்திரமும் ஆர்ப்பாட்டமும் நியாயமானது தான். ஆனால் இயல்பு நிலை சீர்குலையும் நிலை ஏற்பட்டதுதான் கவலை தரக்கூடியதாகும். தொழிற்சங்கங்கள் எப்போதும் முன்னறிவித்தல் கொடுத்தே பணிப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதுதான் தொழிற்சங்க நடைமுறையாகும். இன்று தொழிற்சங்கங்கள் முறைகேடாக செயற்படத் தொடங்கி இருப்பதையே அவதானிக்க முடிகிறது.

ஆர்ப்பாட்டங்கள், பணிப்பகிஷ்கரிப்பு, ஊர்வலங்களால் அரசாங்கத்தை ஆட்டம்காணச் செய்ய முடியாது. அதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களேயாவர். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் ரயில் ஊழியர்கள் மேற்கொண்ட செயற்பாடு எவராலும் அனுமதிக்க முடியாது. இவர்களை கல்மனம் படைத்தவர்களாகவே பார்க்க வேண்டியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இத்தகைய மனிதாபிமானமற்ற, ஒழுக்கப்பண்பை மீறிய செயற்பாட்டினை கண்டிக்காமலிருக்க முடியாது.

அண்மைக் காலமாக வேலைநிறுத்தங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள் ரயில்வே ஊழியர்களும், வைத்தியர்களுமாவர். துரதிர்ஷ்டம் என்னவெனில் இவ்விரண்டு துறைகளும் அத்தியாவசிய சேவைகளாகும். இந்தச் சேவைகளை முடக்குவதன் மூலம் மக்களை அரசு மீது வெறுப்படையச் செய்யலாமென இத்தரப்புகள் கருதுகின்றன. தங்களது சுயநலனுக்காக மக்களை அவதிக்குள்ளாக்குவதன் மூலம் தாம் அடைய நினைக்கும் இலக்கை எட்டமுடியும் என நம்புகின்றனர். பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்பதை நன்கு உணர்ந்த நிலையிலேயே எதிரணியினர் ஜனநாயக விரோதமான வழிகளை கையாளுகின்றனர்.

எமது பார்வையில் இந்த நாட்டில் எந்தவொரு தொழிற்சங்கத்துக்கும் ஒழுக்கவிதிகளோ, பண்பாடுகளோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆரோக்கியமான நிகழ்ச்சிநிரலோ, வேலைத்திட்டங்களோ காணப்படவில்லை. எமது நாட்டின் தொழிற்சங்கங்களின் குறிக்கோள், ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்புவதும், ஆட்சியை கவிழ்க்க சதிசெய்வதும்தான். வேலைநிறுத்தம் என்பது தொழிற்சங்கங்களின் கடைசி ஆயுதமாகும். தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு தேடுவதில் பல்வேறுபட்ட படித்தரங்கள் காணப்படுகின்றன. அவை எல்லாம் தோற்றுப்போகும் போது தான் இந்தக் கடைசி ஆயுதத்தை பயன்படுத்த முடியும். ஆனால் அந்த விதிமுறையை மீறும்வகையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகள் காணப்படுகின்றன.

இத்தகைய தொழிற்சங்கங்களின் எல்லை மீறிய செயற்பாடுகளால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியும், ஆத்திரமுமடைந்து காணப்படுகின்றனர். சட்ட நடவடிக்கைகளிலிறங்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இன்றேல் தொழிற்சங்கங்கள் மீது தாக்குதல் நடத்துமளவுக்கு மக்கள் ஆத்திரமடைந்து காணப்படுகின்றனர். ஏற்றுக்கொள்ள முடியாத அநீதியான கோரிக்கைகளை முன்வைத்தே இந்தத் தொழிற்சங்கங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மையற்ற கொள்கையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. நல்லெண்ணம், கோட்பாடுகளைக் கொண்ட தொழிற்சங்கங்களாக இவை காணப்படவில்லை.

எமது நாட்டிலுள்ள சகல தொழிற்சங்கங்களும் அரசியல் பின்னணியைக் கொண்டவையாகவே காணப்படுகின்றன. அதன் பிரகாரம் நோக்குவோமானால் அனைத்துத் தொழிங்சங்கங்களும் அரசியல் நோக்கத்துடனேயே இயங்குவதை பார்க்க முடிகிறது. இன்றைய நல்லாட்சி அரசு பதவிக்கு வந்த நாள் முதல் இன்று வரை அரசுக்கு எதிரான போராட்டங்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளானது தொழிலாளர்களின் நலன் சார்ந்தவையா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. வெளி உலகுக்கு தொழிலாளர் உரிமைப்போராட்டம் என்பதாகக் காட்டப்பட்ட போதிலும் மறைமுகமாக அது அரசைக் கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியை பின்புலமாகக் கொண்டவை என்பதை அவதானிக்க முடிகிறது.

இவர்களது கோரிக்கை என்ன? சம்பள அதிகரிப்புதான் முன்னணியில் காணப்படுகின்றது. இன்று ரயில் சாரதி பயிலுனர்கள், ரயில் நிலைய அதிபர்கள் (ஸ்டேசன் மாஸ்டர்) ஒவ்வொருவரதும் மாதச் சம்பளம் மேலதிக நேரக் கொடுப்பனவுடன் சேர்த்து இரண்டு இலட்சத்தைத் தாண்டுவதாக ரயில்வே திணைக்கள உயரதிகாரியொருவர் தெரிவித்திருக்கின்றார். இதைவிடவும் என்ன சம்பள அதிகரிப்பைக் கோருகின்றனர். இதுபோன்ற கோரிக்கைகள் அநீதியானவை, நேர்மையீனமானவை. தமது மனசாட்சியை தொட்டுப்பார்த்து நியாயம் தானா? என சிந்தித்துப் பார்க்க முன்வரவேண்டும்.

இத்தகைய தொழிற்சங்கப் போராட்டங்கள் தொடருமானால் அது குறித்து அரசு ஆழமாகச் சிந்திக்க வேண்டியேற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். நாட்டின் ஜனநாயக அரசியல் இருப்பை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்கின்றது. போராட்டங்களை அடக்கியாள அரசு முற்படவில்லை. அதற்காக அனைத்தையும் பார்த்துக்கொண்டு கண்களை மூடியவாறு வாளாவிருக்க முடியாது என அரசாங்கம் எச்சரித்துள்ளதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.