ஹஜ்ஜுப் பெருநாள்: ஆப்கான் ஜனாதிபதி தலிபான்களுடன் யுத்த நிறுத்த அறிவிப்பு


ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி நேற்று திங்கட்கிழமை அமுலுக்கு வரும் வகையில் தலிபான்களுடன் நிபந்தனையுடனான யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்றிய கானி, “தலிபான்களுடனான யுத்த நிறுத்தம் இறைத்தூதரின் பிறந்த தினம் வரை நீடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். முஹமது நபியின் பிறந்த தினம் நவம்பர் 21 ஆம் திகதி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானின் 99 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி தலைநகர் காபுலில் உள்ள தாருல் அமான் மாளிகையில் இருந்து உரை நிகழ்த்திய அஷ்ரப் கானி, ஆப்கான் சமூகத்தின் பல தரப்புகள் மற்றும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய அறிஞர்களிடம் ஆலோசனை பெற்றே இந்த முடிவு எட்டப்பட்டதாக குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு குறித்து தலிபான்களிடம் இருந்து உடன் எந்த பதிலும் அளிக்கப்படாதபோதும் ஹஜ்ஜுப் பெருநாளை ஒட்டி தனது சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவிக்கவிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

கானியின் இந்த யுத்த நிறுத்த அறிவிப்பு தலிபான்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதோடு இஸ்லாமி அரசு (ஐ.எஸ்) போன்ற ஏனைய ஆயுதக் குழுக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.





இந்த அறிவிப்பை அண்டை நாடான பாகிஸ்தான உடன் வரவேற்றுள்ளது.

ஆப்கான் அரசு கடந்த ஜுன் மாதத்திலும் நோன்புப் பெருநாளை ஒட்டி தலிபான்களுடன் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்த யுத்த நிறுத்தம் 2001 அமெரிக்க படையெடுப்புக்கு பின்னர் ஆப்கானில் இடம்பெற்ற முதல் உத்தியோகபூர்வ யுத்த நிறுத்தமாக இருந்தது. இந்த யுத்த நிறுத்தத்தை மூன்று தினங்கள் மறைமுகமாக கடைப்பிடித்த தலிபான்கள் அதனை நீடிக்கு ஜனாதிபதியின் அழைப்பை பின்னர் நிராகரித்து விரைவில் தனது தாக்குதல்களை ஆரம்பித்தது.

ஆப்கானில் மோதல்கள் தீவிரம் அடைந்திருக்கும் நிலையிலேயே அஷ்ரப் கானி இந்த யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளார். தலைநகர் காபுலில் இருந்து இரண்டு மணி நேரம் பயணிக்கும் தூரத்தில் உள்ள மாகாண தலைநகர் காஸ்னி மீது தலிபான்கள் பாரிய தாக்குதலை தொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.