சூரியனின் மர்மங்களை கண்டறிய செயற்கைக்கோள் நாளை பயணம் - WeligamaNews

Latest

Saturday, August 11, 2018

சூரியனின் மர்மங்களை கண்டறிய செயற்கைக்கோள் நாளை பயணம்இதுவரை மனிதன் உருவாக்கியதில் சூரியனை மிக நெருங்கி அதன் மர்மங்களை கண்டறியும்
செயற்கைக்கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா நாளை சனிக்கிழமை விண்ணில் ஏவவுள்ளது.

டெல்டா நான்கு ரொக்கெட் மூலம் ஏவப்படவிருக்கும் கார் வண்டி அளவான செயற்கைக்கோளில் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யும் கருவிகள் உள்ளன.

சூரிய காற்று மற்றும் சூரியனில் நிலையான பொருட்களை ஆய்வு செய்யும் சவால் மிக்க முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபடவிருப்பதோடு சூரிய ஒளிவட்டத்தின் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதன் ரகசியம் பற்றியும் ஆய்வு நடத்தப்படவிருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.

பாக்கர் சூரிய ஆய்வு கலன் என்ற பெயர் கொண்ட இந்த செயற்கைக்கோள் சூரிய வெப்பக் கதிர்களை தாங்கும் வகையில் 1.5 பில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
பிளோரிடாவின் கேப் கனவாரா ஏவுதளத்தில் இருந்து புறப்படும் இந்த செயற்கைக்கோள் மணிக்கு 430,000 மைல்கள் வேகத்தில் சூரியனை நோக்கி பயணித்து அதனை 24 தடவைகள் வலம் வரவுள்ளது. இதன்போது இந்த செயற்கைக்கோள் வெள்ளிக் கிரகத்தின் சுற்றுப் பாதையைப் பயன்படுத்தி 7 வருடங்களில் சூரியனை நெருங்கும்.

பாக்கர் சூரிய ஆய்வு கலன் சூரியனை 3.9 மில்லியன் மைல்கள் நெருங்கவுள்ளது. சூரியனில் இருந்து நான்கு மில்லியன் மைல் தூரம் என்பது இரும்பை உருக்கும் அளவு வெப்பத்தைக் கொண்ட பகுதியாகும்.

இந்த செயற்கைக்கோள் மூலம் சூரியனின் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நடம்புகின்றனர்.