இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்

இந்தியாவில் இருந்து இலங்கை கடலோரப் பகுதிக்கு அடித்து வரப்படும் கழிவுப் பொருட்களினால் இலங்கையின் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த நாட்களில் இந்தியாவின் கேரளா பகுதியில் இருந்து, கடலில் அடித்து வந்திருந்த மருத்துவ கழிவுப் பொருட்கள் புத்தளம் கடற்கரையில் குவிந்து காணப்பட்டன.

இந்தியாவில் இருந்தும் ஏனைய பல நாடுகளில் இருந்தும் கடலில் அடித்து வந்திருந்த கழிவு பொருட்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் வடமேற்கு கரையோரப் பகுதிகளிலும் கரை சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீன் இனப்பெருக்கம் நடைபெரும் இந்தத் தருணத்தில் மீன் முட்டைகள் அழிந்துவிடும் என்றும் இதனால் மீனினால் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அணுக் கழிவுகள் இவ்வாறு சேர்க்கப்படும் ஆபத்து உள்ளதாகவும், அப்படியானால் மீன் வளங்கள் மற்றும் பொது மக்கள் வாழ்க்கையும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு, இலங்கையில் வெளிநாடுகளின் கழிவுகள் சேகரிப்பதை தடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.