தவறான நேரசூசியால் பரீட்சையை தவறவிட்ட உயர்தர மாணவர்கள்


பரீட்சை திணைக்கள வழிகாட்டலை பின்பற்றாததே காரணம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நேரசூசி தொடர்பான பிரச்சினையால் சில மாணவர்களுக்கு பரீட்சை எழுத முடியாமல் போனதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது. சகல அனுமதிப் பத்திரங்களுடனும் நேரசூசி இணைத்து அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் தரவிறக்கம் செய்த நேரசூசியை நம்பிய சில மாணவர்களே காலையில் பரீட்சை எழுத தவறியிருப்பதாக பரீட்சை ஆணையாளர் பீ சனத் பூஜித தெரிவித்தார்.

பரீட்சை நேரசூசி தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் விளக்கமளித்துள்ள பரீட்சை திணைக்களம்,

வினாத்தாள் திருத்தப் பணி களை பாடசாலை விடு முறை காலத்திலேயே மேற்கொள்வ தென கல்வி அமை ச்சுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டது.

பாடசாலை நாட்களில் வினாத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்வதால் பாடசாலை நடைபெறும் நாட்களை குறைக்க நேரிடுவதாக அதிபர்களும் ஆசிரியர்களும் தெரிவிக்கும் குறைபாட்டை தீர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதனால் நேரசூசியின்இறுதியில் இருந்த பொது அறிவு மற்றும் ஆங்கில பாடங்களுக்கான நேரசூசியை மாற்ற வேண்டி ஏற்பட்டது.

இது தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டது.இந்த திருத்தின் போது வினாத்தாள் திருத்தும் பணியுடன் தொடர்புள்ள ஆசிரியர்கள், வலய கல்விப் பணிப்பாளர்கள்.பரீட்சைக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளர்கள்,அதிபர்கள் உட்பட சகல தரப்பினரதும் கருத்துகள் பெறப்பட்டன.இது தொடர்பான விபரங்கள் பரீட்சை திணைக்கள இணையத்தளத்தில் கடந்த மே மாதம் பதிவிடப்பட்டதாக பரீட்சை திணக்களம் விளக்கமளித்துள்ளது.

சகல தரப்பினரதும் கருத்துகளும் பெறப்பட்ட பின்னர் கடந்த வருடங்களில் மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேரிட்ட 90 வீதமான கஷ்டங்களை மட்டுப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்றவாறு நேரசூசி தயாரிக்கப்பட்டு கடந்த ஜுன் 25 ஆம் திகதி திணைக்கள இணையத்தில் வெளியிடப்பட்டது.

நாடுபூராவுமுள்ள சகல அதிபர்களுக்கும் அனுமதிப்பத்திரங்களுடன் நேரசூசியின் பிரதிகள் அனுப்பப்பட்டன.இது தொடர்பில் மாணவர்களை அறிவூட்டுமாறும் கடிதம் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

சகல பரீட்சார்த்திகளுக்கும் அனுமதிப் பத்திரத்துடன் குறித்த பரீட்சார்த்தி எழுதும் பாடம்,திகதி,நேரம் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.அனுமதிப் பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு திணைக்கள இணையத்தளத்தினூடாக பெற ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது எனவும் பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அனுமதிப்பத்திரத்துடன் அனுப்பப்பட்ட பரீட்சை நேரசூசியை பார்க்காமல் இணையத்தளங்களில் தரவிறக்கம் செய்த நேரசூசியை பின்பற்றியதால் சில பரீட்சார்த்திகளுக்கு காலை நேர பரீட்சை தவறியுள்ளது.

பரீட்சை திணைக்கள வழிகாட்டல்களை பின்பற்றினால் எந்த ஒரு பரீட்சார்த்திக்கும் திகதியோ நேரமோ தவற வாய்ப்பில்லை.

இணையத்தளங்களில் தரவிறக்கம் செய்த நேரசூசியினால் பரீட்சை எழுத முடியாமல் போனதற்கும் பரீட்சை திணைக்களத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது எனவும் பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (பா)