Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

மெல்ல மெல்ல மரணிக்கிறது மனிதம்எம்.எம்.ஏ.ஸமட்
எதிர்­வரும் 19ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை உலக மனி­த­நேய தினம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத்­த­ரு­ணத்தில், மனங்­களில் வறு­மைப்­பட்­டி­ருக்கும்

மனிதம் என்ற மனி­த­நேயம் வளர்க்­கப்­பட வேண்­டி­யது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது. ஏனெனில், தற்­கால மனி­தர்­க­ளி­ட­மி­ருந்து மனிதம் மெல்ல மெல்ல மர­ணித்­துக்­கொண்­டி­ருப்­பதை பல்­வேறு தளங்­க­ளி­னூ­டாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

அன்­னி­யோன்யம், ஆறுதல், நேர்மை உணர்வு, இரக்க சிந்­தனை, கருணை, அன்­புடன் நடந்­து­கொள்ளும் முறை, சமூக அக்­கறை என்­பவை இரு­வ­ருக்­கி­டை­யிலோ, சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலோ வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­மாயின் அவை மனி­தத்தை வாழ வைக்கும்,

இப்­பண்­புகள் சக உற­வு­க­ளுக்­கி­டையே வெளிப்­ப­டை­யாகப் பகி­ரப்­ப­டு­கின்­ற­போது, மனங்­களில் மனி­த­நேயம் வற்­றிப்­போ­காது. மாறாக. இவ்­வம்­சங்­களில் ஏதா­வது ஒன்று குறை­வ­டை­யு­மாயின் மனி­தத்­துவம் வளர்­வ­தற்குப் பதி­லாக அது மெல்ல மெல்ல மர­ணத்தின் மடியை நோக்கி நகரும்.

வாழ்க்­கையைத் துரத்­து­வோரும், வாழ்க்­கையால் துரத்­தப்­ப­டு­வோரும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் இவ்­வி­யந்­திர யுகத்தில், நவீ­ன­ம­யப்­பட்ட வாழ்க்கை முறையும், இலத்­தி­ர­னியல் தகவல் பரி­மாற்றக் கலா­சா­ரமும் மனி­த­நேயப் பண்­பு­களை மனித வாழ்­வி­ய­லி­லி­ருந்து கொஞ்சம் கொஞ்­ச­மாக மர­ணிக்கச் செய்து கொண்­டி­ருக்­கி­றது என்­பதை தற்­கால சமூக வாழ்க்கை முறை­மையில் வெளிப்­ப­டை­யாகக் காண முடி­கி­றது.

இலத்­தி­ர­னியல் பயன்­பாட்­டிற்கு அடி­மைப்­பட்ட நவீன அடி­மை­களின் அதி­க­ரிப்பின் விளைவு மனி­தத்தை மர­ணத்தின் மடியில் கிடக்கச் செய்­கி­றது என்­ப­தற்­கான சான்­றுகள் பல­வற்றை அன்­றாடம் பதி­வேற்­றப்­படும் சமூ­க­வ­லைத்­தள தகவல் பரி­மாற்­றங்­க­ளி­னூ­டாக அவ­தா­னிக்க முடி­கி­றது.

விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டாத நிகழ்­வுகள் பல­வற்றை புகைப்­ப­டங்­க­ளா­கவும், காணொலிக் காட்­சி­க­ளா­கவும் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற அவ­சரத் தன்­மை­யி­லி­ருந்து மனி­தத்­துவ பண்­புகள் வீழ்ச்­சியின் விளிம்பில் தொங்­கிக்­கொண்­டி­ருப்­பதை நோக்க முடி­வ­தோடு, மனிதம் எந்­நி­லையில் தற்­கால சமூ­கத்­தின் மத்­தியில் காணப்­ப­டு­கி­றது என்­ப­தையும் மலி­வான விளம்­ப­ரங்­களும், தகவல் பரி­மாற்றக் கலா­சார மோகமும் புடம்­போ­டு­கின்­றன.

தொழில்­நுட்பப் புரட்­சியால் வளர்ந்­து­விட்ட தகவல் பரி­மாற்­றத்தின் பயன்­பாடு குறித்து பெருமை பேசும் மனி­த­குலம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் என்ற மனி­த­நேயப் பண்­பு­களை மின்­ன­ணு­வியல் தகவல் சாத­னங்­க­ளி­னூ­டாக இழந்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­பதை மறுக்­கி­றதா? எனக் கேள்வி எழுப்­ப­வேண்­டிய நிர்ப்­பந்­தமும் ஏற்­பட்­டி­ருப்­பதை மறுக்­க­மு­டி­யாது.

கலா­சார மாற்­றமும் மனி­தமும்

மனித நேயத்­துக்­கு­ரிய பண்­பு­க­ளு­டன்தான் ஒவ்­வொரு மனி­தனும் இவ்­வு­ல­கில் பிறக்­கின்றான். இம்­ம­னி­த­நேயப் பண்­பு­க­ளு­டன்தான் அவன் வாழ­வேண்டும், வாழ்க்­கையை நெறிப்­ப­டுத்த வேண்­டு­மென மதங்­களும் வழி­காட்­டு­கின்­றன. ஆனால், அப்­பண்­பு­க­ளோடு வாழ்­வ­தற்கு மனித நாக­ரி­கமும், இலத்­தி­ர­னியல் பயன்­பாட்டு மோகமும் தடை­க­ளாக உள்­ளன.

மனி­தனில் காணப்­படும் பண்­பு­களில் அன்பு, கருணை, பாசம் என்ற மனி­தத்­துவப் பண்­புகள் மனித உறவில் பெற்றோர் அன்பு, நட்பின் பாசம், சமூ­கப்­பற்று என்­ப­வற்றைக் கொண்­டி­ருக்­கி­றது. இருப்­பினும், நவீன கலா­சார வாழ்க்கை முறை­யா­னது அவற்றை தேய்­பி­றை­யின் நிலைக்கு இட்­டு­ச்­சென்று கொண்­டி­ருக்­கி­றது. ஒவ்­வொ­ரு­வ­ரி­டமும் காணப்­படும் மனி­தத்­துவப் பண்­புகள் தற்­கால சூழ்­நி­லை­யினால் மாற்­ற­ம­டைந்து கொண்­டி­ருக்­கி­றது. பணமும், பட்­டமும், பத­வி­யுமே தற்­கா­லத்தில் சமூ­கத்­தி­லுள்ள ஒரு­வரை நிர்­ண­யிக்­கின்­றன. அவை சமூக அங்­கீ­காரம் வழங்­கு­வ­தற்­கான அள­வு­கோல்­க­ளாகக் கரு­தப்­ப­டு­கின்­றதே தவிர, ஒரு­வ­ரிடம் காணப்­படும் மனி­த­நேயப் பண்­பு­களும், செயற்­பா­டு­களும் அவ­ருக்கு சமூக அந்­தஸ்­த்தை வழங்­கு­வ­தில்லை. மனி­தனை மனி­த­னாக மதிக்கும் மனி­தர்கள் அரு­கிக்­கொண்டு செல்­கி­றார்கள் என்­பதை உணர்த்தும் உதா­ர­ணங்­க­ளுக்கு மத்­தியில் மனி­த­நேயம் பற்றிப் பேசு­வ­து­கூட வெறுப்­புக்­கு­ரி­ய­தா­கவும், நாக­ரி­க­மற்­ற­தா­கவும் ஒரு­சில மனிதம் இழந்­த­வர்­க­ளினால் நோக்­கப்­படும் என்­ப­திலும் ஐய­மில்லை.

நாக­ரிகம் தலை­வி­ரித்­தாடும் நகர்ப்­பு­றங்­களில் வாழும் சில­ருக்கு பக்­கத்து வீட்டில் வாழும் நபர்கள் யார் என்று கூடத் தெரி­வ­தில்லை. அவர்­க­ளுக்கு ஏதா­வது ஆபத்து நேரிட்டால் உத­வு­வ­தற்­குக்­கூட மனங்கள் இடம்­கொ­டுக்­காது. நமக்கேன் வீண் வம்பு என்ற உளப்­பாட்­டில்தான் சம­கால மனி­த­கு­லத்தில் மனி­த­நேயம் காணப்­ப­டு­கி­றது. இருந்­த­போ­திலும், மனி­த­நே­ய­மா­னது மனிதன் தேடு­கின்ற நிலையை அல்­லது இலக்கை அடைந்­து­கொள்­வ­தற்­கான முயற்­சி­களை அறி­வு­டனும், அனு­ப­வத்­து­டனும் செயற்­ப­டுத்த உத­வு­கின்­றது என்ற நிதர்­ச­னத்­தையும் சுட்­டிக்­காட்­டாமல் இருக்­க­மு­டி­யாது.

அனைத்து மதங்­களும், கோட்­பா­டு­களும் மனி­த­நேய சிந்­த­னை­களை விதைத்­தி­ருக்­கின்­றன. அவ்­வாறு விதைக்­கப்­பட்­டுள்ள நல்ல சிந்­த­னை­களின் வழியே செயற்­பட்டு கிளை­க­ளா­கவும், பூக்­க­ளா­கவும், கனி­க­ளா­கவும் காட்சி கொடுப்­பது அவ­ர­வ­ரது பொறுப்­பாகும். ஆனால், அந்தப் பொறுப்­புக்கள் நவீன ஊடகக் கலா­சா­ரங்­க­ளினால் மறக்­க­டிக்­கப்­பட்டு விடு­கின்­றன.

2004ஆம் ஆண்டு ஏற்­பட்ட சுனாமி அலை­க­ளை­விட மனி­த­நேய அலைகள் வேக­மாக பாதிக்­கப்­பட்ட மக்­களை நோக்கிச் சென்­ற­போ­திலும் அதிலும் மனிதம் இழந்த செயற்­பா­டுகள் அரங்­கேற்­றப்­பட்­டன. நாட்டில் அடிக்­கடி இடம்­பெ­று­கின்ற அனர்த்­தங்­க­ளின்­போது பாதிக்­கப்­படும் மக்­க­ளுக்­கான உத­விக்­க­ரங்கள் நீட்­டப்­ப­டு­கின்­றன. ஆனால், அவற்­றிலும் மனி­த­நேயம் என்ற போர்­வையில் திரை­ம­றைவில் விளம்­ப­ரங்­களும், வியா­பா­ரங்­களும் இடம்­பெ­று­வதைச் சுட்­டிக்­காட்ட வேண்­டி­யது காலத்தின் தேவை­யா­க­வுள்­ளது.

இவற்றின் பின்­ன­ணியில் சம­கால சமூக மாற்­றத்­திற்­கான இலத்­தி­ர­னியல், தகவல் தொழில்­நுட்பப் புரட்சி கார­ணி­யாக அமைந்­தி­ருக்­கி­றது. இவை மனித நேயத்தை மறக்கச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தை­விட மரிக்கச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது எனக் கரு­தலாம். இவ்­வாறு மரித்­துக்­கொண்­டி­ருக்கும் மனி­த­நே­யத்தை வாழ வைப்­பற்­காக ஐ.நா. அமைப்­பினால் ஒரு தினம் ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதுதான் உலக மனி­த­நேய தின­மாகும்.

உட­லி­னாலும் உள்­ளத்­தி­னாலும் பாதிக்­கப்­பட்ட மக்­களை நினை­வு­கூரும் ஒரு நாளாக உலக மனி­த­நேய தினம் ஒவ்­வொரு ஆண்டும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. உல­க­ளா­விய ரீதியில் இடம்­பெறும் வன்­முறை களி­னாலும், போர் சூழல்­க­ளி­னாலும், இயற்கை அனர்த்­தங்­க­ளி­னாலும் அக­தி­க­ளாக்­கப்­பட்டும், கல்வி, பொரு­ளா­தாரம், சமூ­க­வாழ்வு என்­ப­வற்றை இழந்தும் பட்­டினி, நோய் போன்­ற­வற்­றினால் பாதிக்­கப்­பட்டும் வாழும் மில்­லியன் கணக்­கி­லான ஜீவன்­களை நினைவு கூரும் வகை­யிலும், அவர்­களின் துன்­பங்­களில் பங்­கு­கொண்டு தங்­க­ளது இன்­னு­யிரை இழந்­த­வர்­க­ளையும், காயப்­பட்­ட­வர்­க­ளையும், வாழ்­நாட்­களை மனி­த­நேய உழைப்­புக்­காக தியாகம் செய்த சமூக சேவை­யா­ளர்­க­ளையும், செயற்­பாட்­டாளர்களையும் நினை­வு­ப­டுத்தும் ஒரு நாளா­கவும் இம்­ம­னித நேய­தினம் உல­க­ளா­விய ரீதியில் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் ஒவ்­வொரு வரு­டத்­தி­னதும் ஆகஸ்ட் 19ஆம் திகதி் இத்­தினம் உல­க­ளவில் அனுஷ்­டிக்­கப்­பட்டு வந்­தாலும் நவீன சமூகக் கலா­சார மாற்றம் மனி­தத்தை வள­ர­வி­டாது மெல்லச் சாக­டித்­துக்­கொண்­டி­ருக்­கி­றது என்­ப­தற்கு பேஸ்புக், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்­தள தகவல் பரி­மாற்றக் கலா­சாரம் போது­மான சான்­றாக உள்­ளது என்­பதை சுட்­டிக்­காட்­டு­வதில் தவ­றேதும் இருக்­காது.

தகவல் பரி­மாற்­றங்­களும் மர­ணிக்கும் மனி­தத்­து­வமும்

மனி­த­குலம் எங்­கெல்லாம் வாழ்­கி­றதோ அங்­கெல்லாம் மின்­ன­ணு­வியல் தகவல் சாத­னங்கள் மனி­த­கு­லத்­தோடு ஒட்டிக் காணப்­ப­டு­கின்­றன. இச்­சா­த­னங்­க­ளோடு ஒட்­டி­ய­தா­கவே உலகை உள்­ளங்­கைக்குள் கொண்டு வந்­துள்ள இணை­யப்­பா­வ­னையும் உள்­ள­டக்­கப்­ப­டு­கி­றது. இணை­யப்­பா­வனை மனித தேவை­களின் பல­வற்றை நிறை­வேற்­றிக்­கொண்­டி­ருந்­தாலும். அதன் பயன்­பாடு மனி­த­னுக்கு இன்­றி­ய­மை­யா­த­தாக இருந்­தாலும், அவற்றின் பக்­க­வி­ளை­வு­களும். அதன் சிவப்புப் பக்­கங்­களும் பல தீமை­யான பின்­வி­ளை­வு­க­ளையும் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுதான் இருக்­கி­ன்றன. அவற்றில் ஒன்­றுதான் மனி­தத்தை மர­ணிக்கச் செய்­தி­ருப்­ப­தாகும்.

இணை­யப்­பா­வனை தொடர்பில் மேற்­கொள்­ளப்­பட்ட இவ்­வாண்டின் ஜன­வரி மாதத்­திற்­கான சர்­வ­தேச புள்ளி விப­ரங்­களின் பிர­காரம் 7.5 பில்­லியன் உலக சனத்­தொ­கையில் 3.5 பில்­லியன் மக்கள் இணையத்­தளப் பாவ­னையில் உள்­ளனர். இதில் சமூ­க­வலைத் தளங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­ன­வர்கள் 3.1 பில்­லி­ய­னாகக் காணப்­ப­டு­கின்­றனர். அத்­தோடு, 5.1 பில்­லியன் மக்கள் கைய­டக்கத் தொலை­பே­சியைப் பயன்­ப­டுத்­து­ப­வர்­க­ளா­கவும் இவர்­களில் 2.7 பில்­லியன் மக்கள் ஸ்மார்ட்போன் மற்றும் டெப்லட் பயன்­பாட்­டாளர்களாகவும் உள்ள நிலையில் 49 வீத­மான இணை­யத்­தள பாவ­னை­யா­ளர்கள் பேஸ்புக் கணக்­கு­டை­ய­வர்­க­ளா­கவும் 700 மில்­லியன் போர் வட்ஸ்அப் பாவ­னை­யா­ளர்­க­ளா­கவும் உல­க­ளவில் உள்­ள­தாகச் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இவ்­வா­றான நிலையில் இலங்­கையின் 20.19 மில்­லியன் மக்கள் தொகையில் இவ்­வாண்டின் ஜன­வரி மாதக் கணக்­கெ­டுப்பின் பிர­காரம் 6.71 மில்­லியன் போர் இணை­யத்­தளப் பாவ­னை­யா­ளர்­க­ளாக உள்­ளனர். அத்­தோடு, கைய­டக்கத் தொலை­பேசிப் பாவனை யாளர்­களின் எண்­ணிக்கை 27.38 மில்­லி­ய­னாகும். சமூக வலைத்­தள பாவ­னை­யா­ளர்கள் எண்­ணிக்­கை­யா­னது 6 மில்­லி­ய­னா­கவும், கைப்­பேசி இணையத்­தள வச­தி­யுடை யோர் 5.50 மில்­லி­ய­னா­கவும் உள்­ளனர்.

இவ்­வாறு அதி­க­ரித்­துள்ள இலத்­தி­ர­னியல் தகவல் பரி­மாற்ற சாத­னங்­களின் பயன்­பா­டா­னது பொது வாழ்க்­கை­யிலும் சமூக வாழ்க்­கை­யிலும் பல விரும்­பத்­த­காத மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி மனித விழு­மி­யங்­க­ளையும், மனி­த­நே­யத்­தையும் இழக்கச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றது. அத்­துடன், பலர் வழி­வ­த­றிய வாழ்கை முறையைக் கடைப்­பி­டிக்­கவும் தங்­களைத் தாங்­க­ளா­கவே அழித்­துக்­கொள்­ளவும், பிறர் தங்­களை அழித்­துக்­கொள்ள வழி­கோ­லு­வ­தையும் காண­மு­டி­கி­றது.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் தெருவில் இடம்­பெறும் விபத்­தொன்றில் சிக்கித் தவிக்கும் ஒரு­வரைக் காப்­பாற்­று­வ­தற்குப் பதி­லாக, நீரில் மூழ்கிக் கொண்­டி­ருக்கும் ஒரு­வரை காப்­பாற்றிக் கரை­சேர்ப்­ப­தற்குப் பதி­லாக, விலங்­கு­க­ளினால் கடித்­துக்­கு­த­றப்­படும் நபரை மீட்­டெ­டுப்­ப­தற்குப் பதி­லாக இந்­நி­கழ்­வு­களை பட­மெ­டுத்து சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பதி­வேற்றும் மனி­தா­பி­மா­ன­மற்ற நிகழ்­வு­களும் உல­க­ளவில் நடந்­தே­று­வதைக் காண­மு­டி­கி­றது.

இவை மாத்­தி­ர­மின்றி, ஒருவர் மர­ணித்­து­விட்­டாலோ அல்­லது நோய்­வாய்ப்­பட்­டு­விட்­டாலோ அவ­ரது மர­ணத்தில் கலந்­து­கொள்­வ­தற்குப் பதி­லாக அல்­லது நோய்­வாய்ப்­பட்­ட­வரை நேரில் சென்று உணர்­வு­பூர்வ உடல் மொழி­யி­னூ­டாக ஆறுதல் சொல்­வ­தற்கு, சுகம் விசா­ரிப்­ப­தற்கு, தங்­க­ளது கவ­லை­யையும், பிரார்த்­த­னை­க­ளையும் புரி­வ­தற்குப் பதி­லாக சமூ­க­வ­லைத்­தள மொழி­க­ளி­னூ­டாக பேஸ்­புக்­கிலும் வட்ஸ்­அப்­பிலும் அனு­தாபம் தெரி­விக்கும், கவலை வெளிப்­ப­டுத்தும், பிரார்த்­திக்கும் கலா­சா­ர­மா­னது தற்­கா­லத்தில் மனி­த­நேயம் எந்த நிலையில் உள்­ளது என்­பதை கண்­டு­கொள்ளச் செய்­கி­றது.

இவ்­வாறு சிலர் உள்ள நிலையில் மற்­று­மொரு சாரார், ஒரு நோயா­ளியை தனி­மை­யிலோ அல்­லது குழு­வா­கவோ பார்­வை­யிடச் சென்று அவ­ருடன் இருந்து செல்­பியும் எடுத்து குறித்த நோயா­ளியின் பெய­ரையும் குறிப்­பிட்டு, அவரை நோய் விசா­ரிக்கச் சென்­ற­வேளை என்று குறிப்­பு­மிட்டு சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பதி­வேற்றி அந்­ந­பரை உல­க­ளவில் நோயாளி என்று விளம்­பரப் படுத்­து­வ­தற்கும் இந்­நவீன தகவல் பரி­மாற்றம் பயன்­ப­டு­வதைக் காணக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

வெளி­நா­டு­களில் வசிப்­ப­வர்கள் அல்­லது உரிய இடத்­துக்குச் செல்­ல­மு­டி­யாத தூரத்­தி­லி­ருப்­ப­வர்கள் தங்­க­ளது கவ­லை­யையும், துய­ரத்­தையும், பிரார்த்­த­னை­க­ளையும் பகிர்ந்­து­கொள்­வ­தற்­காக சில விட­யங்­களை பதி­வேற்­றி­னாலும் அவற்றை ஏற்றுக் கொள்ள முடி­யு­மென்­றா­லும்­கூட ஒரே வீதியில், ஓரே ஊரில் வசிக்­கின்­ற­வர்­களும் இந்த மனிதம் இழந்த காலா­சார மோகத்­திற்குள் அடி­மைப்­பட்டு தங்­க­ளது கவ­லை­யையும், ஆறு­த­லையும் இத்­த­கைய சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் பதி­வேற்­றி­விட்டு இருந்து விடு­கி­றார்கள் என்­பதே கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மாகும்.

அன்­பையும், கரு­ணை­யையும், மனி­த­நே­யத்­தையும் வலி­யு­றுத்தும், இஸ்­லாத்தைப் பின்­பற்­று­ப­வர்­களும் இவ்­வா­றான ஊடக பரி­மாற்றல் கலா­சா­ரத்­திற்கு அடி­மைப்­பட்டு மனிதம் இழந்­த­வர்­க­ளாக சம­கா­லத்தில் வாழ முற்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்­பது வேத­னை­ய­ளிக்கும் விட­ய­மாகும்.

இஸ்­லா­மி­யர்­களும் மனி­த­நே­யமும்

இஸ்­லாத்தில் மனி­தத்­துவம் என்­பது மிக உயர்­வா­னது, ஒரு மனி­தனை வாழ வைப்­பதும் அவ­னது வாழ்க்­கைக்கு இயன்­ற­ளவு உதவி உப­காரம் புரி­வதும் அவ­னுக்கு ஏற்­படும் துன்ப துய­ரங்­க­ளி­லி­ருந்து அவனை விடு­விப்­ப­தும்தான் இஸ்­லா­மிய மனி­தத்­துவக் கோட்­பா­டா­க­வுள்­ளது. இதனை எத்­தனை இஸ்­லா­மி­யர்கள் சம­கா­லத்தில் பின்­பற்றி வாழ்­கி­றார்கள்.?

"எவ­ரொ­ருவர் தமது சகோ­த­ர­ருக்கு ஏற்­படும் உலக துன்­பங்­க­ளி­லி­ருந்து அவரை விடு­விக்­கி­றாரோ இறைவன் அவ­ருக்கு ஏற்­ப­டப்­போகும் மறு உலக துன்­பங்­க­ளி­லி­ருந்து அவரை விடு­விக்­கின்றான். மேலும் தமது சகோ­த­ர­ருக்கு உத­வி­பு­ரியும் காமெல்லாம் அவ­ருக்கு இறைவன் உதவி புரிந்­து­கொண்­டே­யி­ருப்பான்" என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள் என ஹதீஸ் கிரந்­தங்­களில் பதி­யப்­பட்­டுள்­ளன.

அது மாத்­தி­ர­மின்றி, "கரு­ணை­யா­ளர்­களின் மீது இறைவன் கருணை செலுத்­து­கிறான். எனவே நீங்கள் பூமியில் உள்­ள­வர்­கள்­மீது கருணை செலுத்­துங்கள், வானில் உள்­ள­வர்கள் உங்கள் மீது கருணை காட்­டு­வார்கள்" என இறை­தூதர் (ஸல்) அவர்கள் கூறிச் சென்­றி­ருக்­கி­றார்கள்.

மனி­த­நேயப் பண்­பு­களை அல்­குர்­ஆனும் நபி­வ­ழியும் அழ­காகக் கற்றுத் தந்­தும்­கூட ஏழை­க­ளி­னதும், இய­லா­த­வர்­க­ளி­னதும் துன்­பங்­க­ளிலும், துய­ரங்­க­ளிலும் நம்மில் எத்­தனை போ் பங்­கு­கொள்­கின்றோம். அண்­மையில் அக்­கு­றணை பிர­தே­சத்தில் வபாத்­தான ஒரு ஏழை நபரின் ஜனா­ஸாவைப் பின்­தொ­டர்ந்து வெறும் ஐந்தே நபர்கள் சென்­றதைக் கண்­ணுற்ற ஒருவர் அதனை சமூக வலைத்­த­ளத்தில் பதி­விட்டு சமூகம் ஏழை­களின் விட­யத்தில் நடந்­து­கொள்ளும் மனப்­பாங்கை புடம்­போட்­டதை இங்கு சுட்­டிக்­காட்ட வேண்டும்.

மனித நேயத்தை வாழ்க்­கையில் நிலை­நி­றுத்தி வாழ வழி­காட்டும் இஸ்­லாத்தை பின்­பற்­று­கின்ற நம்பில் பலர், முஸ்­லிம்கள் என்று சொல்­லிக்­கொண்டு சமூ­கத்­தி­லுள்ள ஏழை எளி­ய­வர்­களின் துன்­பங்­களில் அக்­க­றை­கொள்­ளாது அவர்­களின் அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்றி வைக்­க­காது மாடிக்­குமேல் மாடி­களைக் கட்டி வாழ்­வ­தையும் பணம், பதவி, பட்டம் என்ற அள­வு­கோல்­களின் அடிப்­ப­டையில் சமூக அந்­தஸ்து வழங்­கு­வ­தையும் காணக்­கி­டைக்­கின்­றமை உண்மையில் கவலையளிக்கும் விடயமாகவே உள்ளது.

இந்நிலையில், இன்னும் சில தினங்களில் தியாகத் திருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இப்பெருநாள் தினத்தை கொண்டாடுவதற்கு வழியின்றி எத்தனை ஏழைகள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெருநாள் தினத்தை சந்தோசப்படுத்துவது மாத்திரமல்ல, அவர்களின் அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றி வைக்க சமூகத்திலுள்ள பணம் படைத்தவர்கள் முன்வர வேண்டும்.

சமூகம், ஏழை எளி­ய­வர்­களின் விட­யத்தில் அக்­க­றை­யற்று இருப்­ப­தா­லேயே அல்லாஹ் வெறுத்த வழி­களில் பணத்­தைச சம்­பா­தித்து வாழும் நிலைக்கு சில ஏழை எளி­ய­வர்கள் தள்­ளப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அது­மாத்­தி­ர­மன்றி, வறு­மையின் கார­ண­மாக குடும்­பத்­தோடு தற்­கொலை செய்­யவும் முயற்­சிக்­கி­றார்கள். அண்­மையில் புத்­த­ளத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் குடும்பம் வறு­மையின் கார­ண­மாக குடும்­பத்­தோடு தற்­கொலை செய்ய முற்­சித்­தமை சமூ­கத்­தி­லுள்ள பணம் படைத்­த­வர்­களின் சமூகம் தொடர்­பான அக்­க­றை­யின்­மைக்கு நல்­லதோர் எடுத்­துக்­காட்­டாகும் என்­ப­தையும் பதி­விட வேண்­டி­யுள்­ளது.

"மக்கள் மீது கருணை காட்­டா­தவன் மீது இறைவன் கருணை காட்­ட­மாட்டான்" என்று கூறிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள், மக்­களை மதத்தால் அதிகம் கவர்ந்­த­தை­விட மனிதத்துவத்தால், மனிதநேயத்தால் அதிகம் கவர்ந்தார்கள் என்பதே யதார்த்தமாகும்.

இஸ்­லாத்தை வாழ்க்கை நெறி­யா­கக்­கொண்ட நாம் வருங்­கால சந்­த­தி­யினர் இலத்­தி­ர­னியல் தகவல் பரி­மாற்றக் கலா­சா­ரத்­தினால் அள்­ளுண்டு அடி­மைப்­பட்டு போய்­வி­டாமல், மனிதம் இழந்­த­வர்­க­ளாக மாறி­வி­டாமல் இருக்க அவர்­க­ளி­டத்தில் மனி­த­நேயப் பண்­பு­களை வளர்ப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்டும். அத்­தோடு ஏழை எளி­ய­வர்­களின் அடிப்­படைத் தேவை­களை நிறை­வேற்றி மனி­த­நே­யத்தை வெளிப்­ப­டுத்த வேண்டும். இவை எமது தார்­மீகப் பொறுப்­பா­க­வுள்­ள­தோடு அவ்­வாறு செயற்­ப­டாத விடத்து கொஞ்சம் கொஞ்­ச­மாக மனிதம் மர­ணத்தின் மடிக்குள் செல்­வதைத் தடுக்­க­மு­டி­யாது. இருப்­பினும், மனி­த­நேயப் பண்­புள்­ள­வர்கள் வாழும் வரை மனிதம் வாழ்ந்துகொண்டேயிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.
-Vidivelli