சவூதியில் புழுதிப் புயல் அரபாவை நோக்கிய பயணம் தாமதிப்பு




உயிர்ச் ​சேதமில்லை
சவூதி அரேபியாவில் ஹஜ் யாத்திரிகர்கள் கூடி இருக்கும் பகுதியில் கடந்த ஞாயிறு இரவு கடும் புழுதிப் புயல் வீசியதால் யாத்திரிகர்கள் மினாவில் இருந்து அரபாவை நோக்கி பயணிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அந்தப் புழுதிப் புயல் நின்ற பின் யாத்திரிகர்கள் ஹஜ் கடமையின் முக்கிய அம்சமான அரபாவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்தனர்.

நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் பாலைவன சமவெளியான அரபா நோக்கி பயணிக்க ஆரம்பித்த யாத்திரிகர்கள் அங்கு அரபா மலைக்கு அருகில் தொழுகை மற்றும் பிரார்த்தனையில் ஒருநாளை கழித்தனர்.

யாத்திரிகர்கள் தங்கியிருக்கும் மினா கூடாரங்கள் மீது புயல் காற்று கடுமையாக வீசியதே அரபா பயணத்தில் தாமதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றனர். இதனால் யாத்திரிகர்கள் அரபா பயணத்திற்கு அனுமதி கிடைக்கும் வரை தமது கூடாரங்களில் காத்திருந்தனர்.


இந்த புழுதிப் புயல் காரணமாக ஞாயிறு இரவு கடும் மழை மற்றும் இடிமின்னல் ஏற்பட்டிருப்பதோடு, வெள்ள அபாய அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. எனினும் இந்த சீரற்ற காலநிலை ஆன்மீக வழிபாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்று சவூதி நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.உயிர் சேதங்களோ வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

புயல் ஏற்பட்டபோது ஆண் மற்றும் பெண்கள் கூடாரங்களில் அடைக்கலம் பெற்றதோடு அது நின்ற பின் அவர்கள் வழக்கமான பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்த கடும் புயல் காரணமாக மக்காவில் உள்ள புனித கஃபாவை போர்த்தி இருக்கும் கிஸ்வா துணியும் காற்றில் பறந்துகொண்டிருந்ததை காணமுடிந்தது.

இந்நிலையில் இந்த கடும் புயல்காற்று மற்றும் மழை திங்கட்கிழமை மாலை வரை நீடிக்கும் என்று சவூதியின் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பொது ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த ஆண்டு ஹஜ் கடமை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானதோடு இதில் உலகெங்கும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர்.