உழ்ஹிய்யாவில் ஈடுபடுவோரே! இது உங்கள் கவனத்திற்கு.. (ஒரு விழிப்புணர்வு)


புனித உழ்ஹிய்யா கடமையின் மகிமை பற்றியும் அதற்கு உதவியாக இருப்போருக்கு
கிடைக்கும் நன்மைகள் பற்றியும் நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன்னர் புனித உழ்ஹிய்யாக் கடமையை நம்மவர்கள் சாதாரண ஒரு கடமையாகக் கருதாமல் அனைத்தும் அல்லாஹ்வுக்காக எனும் உள்ளச்சத்துடன்; அதனை முக்கியமான ஒரு அமலாகக் கருதி மிகவும் கண்ணியமாக நிறைவேற்றினாகள் என்பதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ மாட்டார்கள்.

சுருக்கமாகச் சொன்னால் அன்று பிராணியை விற்பவரும் வாங்குபவரும் அந்த வியாபாரத்தையும், அப்பிராணியை கவனிப்பதையும், கண்காணிப்பதையும், அதனை அறுப்பதையும், பங்கிடுவதையும், அதன் இறைச்சியை சாப்பிடுவதையும் ஏன் அதன் கழிவுகளை அகற்றுவதையும் கூட அமலாகவே கருதிச் செயற்பட்டார்கள்.

ஆனால் இன்று பொய்சொல்லி விற்பதும் வாங்கிய பிராணியை கவனிக்காது விடுவதும், மக்கள் நடமாடும் பாதைகளில் கட்டிவைப்பதும், நாட்டின் சட்டங்களை கவனத்திற்கொள்ளாமல் செயற்படுவதும், அறுப்பின்போது நபிவழியைப் பின்பற்றாமல் இருப்பதும், அர்த்தமற்ற செல்fபி எடுப்பதும் சாதாரணமாக நடைபெற்றுவருவது கவலைக்குரிய விடயமாகும். மறுபுறம் சொந்தமாக பிராணியை வாங்காது அறுத்ததன் பின்னால் அதன் நிறைக்கு கணக்குப்பார்த்துப் பின்னர் பணம் வழங்கி அப்பிராணியை சொந்தம் கொண்டாடும் அறிவாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.



விடயம் இதுதான்! . உழ்ஹிய்யா என்பது முக்கியமான ஒரு சுன்னத்தாகும். ஆனால் அதனை நிறைவேற்றும்போது பர்ளான தொழுகைகளைத் தவறவிடுவது, இஸ்லாத்திற்குப் புறம்பான ஆடைகளை அணிந்துகொள்வது, முழங்காலுக்கும் மேலால் ஆடைகளை அணிந்துகொள்வது, இடம்; மஸ்ஜித் ஆயினும்சரி இல்லாவிட்டாலும் சரி சிகரட்டை வாயில் வைத்தபடி அவ்அமலில் ஈடுபடுவது போன்ற பல்வேறு ஹராமான, அநாகரிகமான செயல்கள் நடைபெறுவதனைப் பார்க்கிறோம்.

எனவே உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவோரும், அதற்கு உதவியாக இருப்போரும் சிந்தித்துச் செயல்படுவோம். பரிபூரண நன்மைகளை அடைந்துகொள்ள பாடுபடுவோம்.

எனவே உழ்ஹிய்யா எனும் முக்கியமான சுன்னத்தை.....

கடமைக்குச் செய்யாமல் கடமையாக நிறைவேற்றுவோம்.

அமலென்று செய்யாமல் அமலாக நிறைவேற்றுவோம்.

பகட்டுக்கு செய்யாமல் பக்குவமாக நிறைவேற்றுவோம்.

ஆக்கம்:ரிஸ்வான் எம் உஸ்மான்
தெஹியங்க