ரூபா 1 கோடி 60 இலட்சம் ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைதுஹெரோயின் போதைப்பொருளுடன் இலங்கை வந்த பாகிஸ்தானியர், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கராச்சியிலிருந்து ஓமானின் தலைநகர் மஸ்கட்டிலிருந்து WY371 விமானம் மூலம் கட்டுநாயக்க வந்த குறித்த நபரிடமிருந்து 1,606 கிராம் (1.606kg) ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பதில் ஊடகப் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூபா 1 கோடி 60 இலட்சத்து 60 ஆயிரம் என கணக்கிடப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் இன்று (17) காலை 8.15 மணியளவில் வந்த, பாகிஸ்தான் நாட்டவரின் பயணப் பொதியை பரிசீலித்த சுங்கத் திணைக்கள கட்டுநாயக்கா பிரிவு அதிகாரிகள், பயணப்பொதியில் போலியாக தயாரிக்கப்பட்ட அடியில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட, ஹெரோயின் பொதியை மீட்டுள்ளனர்.

அதனையடுத்து, சுங்கத் திணைக்கள போதைப் பொருள் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்